கடந்த 2017 ஜூலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரி, நாட்டின் மறைமுக வரி விதிப்பு முறையில் திருப்புமுனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள்தான் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்தோம் என்று எந்த ஓர் அரசும் மார்தட்டிக் கொள்ள முடியாது. காரணம், 1994-இல் டாக்டர் மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், இந்தக் கட்டுரையாளர் வருவாய்த் துறை செயலராகவும் இருந்தபோது கூட்டப்பட்ட மாநில நிதியமைச்சர்களின் கூட்டத்தில் இதற்கான விதைகள் விதைக்கப்பட்டன.
இதற்கு அடுத்தகட்டமாக, நாடு முழுவதும் விற்பனை வரியை ஒழுங்குபடுத்தவும், தொழிற்சாலைகளை ஈர்ப்பதற்காக மாநிலங்களிடையே நிலவி வந்த வரிவிலக்குப் போரை முடிவுக்கு கொண்டு வரவும் 1999-இல் மதிப்புக் கூட்டு வரி ("வாட்') அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மாநில நிதியமைச்சர்கள் நிலைக் குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழுவே அதிகாரமளிக்கப்பட்ட குழுவாக உருமாறியதுடன், 2004-இல் சங்கமாகவும் பதிவு செய்யப்பட்டது. நஷ்டம் ஏற்பட்டால் ஈடு செய்யப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்ததால், வாட் வரியை மாநில அரசுகள் 2005-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தின.
தொடர்ச்சியாக, சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக விதிக்கப்படும் எல்லா வரிகளையும் ஒன்றாக்கி, வாட் வரியை ஜி.எஸ்.டி.யாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்த சிந்தனை எழுந்தது. ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்துவது தொடர்பாக 12-ஆவது நிதிக் குழு பரிந்துரை செய்தது. இதை 2008-09-க்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மத்திய அரசு அளவில் செலுத்தப்படும் வாட் வரியைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறை இல்லாததால், வாட் வரி நுகர்வோருக்கு சாதகமானதாக அமையவில்லை. அதேபோல், திருத்தப்பட்ட வாட் வரி மத்திய உற்பத்தி வரி என்றே கருதப்பட்டது. அது வரிக்கு மேல் உபரி வரியாக அமைந்தது.
அதே சமயம், தொழிற்சாலையில் இருந்து நுகர்வோரைச் சென்றடையும் வரை, பொருளுக்கு மதிப்பு கூட்டப்படும் இடத்தில்தான் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. எனவே, எந்தக் கட்டத்திலும் வரியைத் தவிர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
உதாரணத்துக்கு, தொழிற்சாலையில் ஒரு மிதிவண்டியின் விலை ரூ.2,000 என்றால், அதில் உற்பத்தி வரி ரூ.200-ம் அடங்கும். வாட் வரி அமலில் இருந்தபோது, ஒரு விநியோகஸ்தர் ரூ.200 லாபம், ரூ.200 செலவுகள் என விதித்தார் எனில், ரூ.2400-க்கு 10 சதவீதம் வாட் வரி வசூலிக்கப்படும்.
ஆனால், ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பின்னர், விநியோகஸ்தரின் லாபம் மத்திய உற்பத்தி வரியாக ஜி.எஸ்.டி.யில் அடங்கிவிடுவதால் செலவினத்துக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். இதனால், நுகர்வோருக்குதான் லாபம் ஆகும். சேவை வரி விதிக்கப்படும் பொருள்களை எடுத்துக் கொண்டோமானால், ஜி.எஸ்.டி. காரணமாக சேமிப்பு இன்னும் அதிகமாகும்.
ஜி.எஸ்.டி.யில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று, மத்திய அரசுக்கானது; மற்றது, மாநில அரசுக்கானது. இரண்டுமே சம அளவிலானது ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தில் 101-ஆவது திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 246 ஏ பிரிவு சரக்கு மற்றும் சேவைகளின் மீது மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரம் அளிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 279 ஏ பிரிவு, ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. தொடர்பான எல்லா விஷயங்களுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் அதிகாரம் படைத்தது என்பதை இந்தப் பிரிவு தெளிவாக வரையறுத்துள்ளது.
ஜி.எஸ்.டி. விஷயத்தில் பிரதமரோ, மத்திய நிதியமைச்சரோ எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. இது நடைமுறையில் சாத்தியமற்றது. ஜி.எஸ்.டி. தொடர்பான எல்லா முடிவுகளையும் அதற்குரிய கவுன்சில்தான் எடுக்க முடியும்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கினர் வாக்களித்தால்தான் முடிவு செல்லுபடியாகும் என பிரிவு 279 ஏ அறுதியிட்டுக் கூறியுள்ளது. மொத்த வாக்குகளில் மத்திய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கும், மாநில அரசுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.டி. முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு மத்திய அரசுக்கு வாக்கு சதவீதம் கிடையாது.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. பொருளாதார வளர்ச்சியும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஜி.எஸ்.டி.யின் கீழ் நாடு முழுவதும் ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான வரி விதிக்கப்படுகிறது. இதனால், ஒரு பொருளுக்கு வரி விதிப்பதால் அல்லது வரி விலக்கு அளிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து தங்களது மாநிலச் சூழ்நிலை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் தீவிரமாக சிந்தனை செய்யக்கூடும்.
வாட் வரி விதிக்கப்பட்டபோதுகூட இத்தகைய நிலை இல்லை. தங்களது பொருளாதார, அரசியல் சூழலுக்கு ஏற்ப, பொருள்களுக்கு வரி விதித்தன; வரி விலக்கு அளித்து வந்தன.
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளதால், எந்த ஒரு பொருள் மீதான வரி விகிதத்தையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக மாற்ற முடியாது.
வரி விதிப்பது மற்றும் வசூலிப்பது தொடர்பான அதிகாரத்தை மாநில அரசுகள் இழந்துவிட்டன என்பது ஒருவகையில் உண்மைதான். ஆனால், அதே சமயம் ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசுக்கான பங்கையும் (சிஜிஎஸ்டி) உள்ளடக்கிய முழு நிர்வாகத்தில் மாநில அரசுகளுக்கும் உரிமை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஒரு பொருளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது என்றால் அதில் மாநில அரசின் பங்கு 9 சதவீதம், மத்திய அரசின் பங்கு 9 சதவீதம் ஆகும். இதற்கு முன்னர் செய்தது போல, எந்த ஒரு பொருளின் மீதும் வரியோ, உபரி வரியோ விதிக்க மத்திய அரசுக்கு இப்போது அதிகாரம் இல்லை.
இந்த அளவில், பொருள்களின் மீதான வரி விதிப்பில் தேசிய அளவில் பங்களிக்க மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இந்தியா ஒரே சந்தையாக ஆகியுள்ளது.
இதுவரை விதிக்கப்பட்டு வந்த உற்பத்தி வரி, கூடுதல் உற்பத்தி வரிகள், உபரி வரிகள், சேவை வரி, ஏற்றுமதியாளர்களுக்கான சலுகை, சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி, மத்திய விற்பனை வரி ஆகிய அனைத்தும் இப்போது மத்திய அரசின் பங்கான சி.ஜி.எஸ்.டி.யில் அடங்கிவிட்டன.
அதேபோல, வாட், கொள்முதல் வரி, நுழைவு வரி, சொகுசு வரி, கேளிக்கை வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி மீதான வரி, மாநில உபரி வரிகள் ஆகியவை மாநில அரசின் பங்கான எஸ்.ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வந்துவிட்டன. இது நாடு தழுவிய அளவில் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கிவிட்டது. ஒரே வரி என்பதால், கணக்கு தாக்கல் செய்யும் முழுமையான அதிகாரத்தை ஜிஎஸ்டி ஆணையரகம் பெற்றுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு சம அளவில் அதிகாரமுள்ள கணினி வலைப்பின்னலால் இதன் நடைமுறை நிர்வகிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதால், தொழில் துறைக்கு இந்தியா ஒருங்கிணைந்த ஒரே சந்தையாக ஆகிவிட்டது.
ஜி.எஸ்.டி.யை எதிர்த்து பலரும் கூக்குரலிடுவது ஏன்?
முதலாவதாக, எந்தவிதமான மாற்றமானாலும் மக்கள் முதலில் எதிர்ப்பார்கள். இரண்டாவதாக, வரி விதிப்பில் அமைச்சர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ எந்தப் பங்கும் இல்லாததால் ஊழலுக்கும், தில்லுமுல்லுக்கும் ஏறக்குறைய வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. மூன்றாவதாக, இதுவரை வரி ஏய்ப்பு செய்த வர்த்தகர்கள் இனி வரி செலுத்தியே ஆக வேண்டும். வரி ஏய்ப்பு செய்தால் கணினி காட்டிக் கொடுத்துவிடும். நான்காவதாக, தொடக்கத்தில் வரி குறைந்தபோதும், ஜி.எஸ்.டி.யை கூடுதல் வரியாக வர்த்தகர்கள் பொதுமக்கள் தலையில் சுமத்தினார்கள். இப்போது நிலை சீராகிவிட்டது. ஐந்தாவதாக, வரி விதிப்பிலும், நடைமுறைகளிலும் ஜிஎஸ்டி கவுன்சில் அடிக்கடி மாற்றம் செய்துவருகிறது. இது வர்த்தகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ஆறாவதாக, ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்திய பிறகு, திரும்பப் பெற காத்திருக்க வேண்டியுள்ளதால் ஏற்றுமதியாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க இப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மொத்த மறைமுக வரி வருவாயில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வராதது வரி சீர்திருத்தத்துக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கர்நாடக அரசு அண்மையில் உயர்த்தியதில் இருந்தே இந்த அதிகாரத்தை விட்டுத்தர மாநில அரசுகள் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரி வலையில் இருந்து இனி தப்ப முடியாது என்ற விரக்தியில்தான் பெரும்பாலானவர்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்க்கிறார்கள்.
வரித் துறை அதிகாரிகளின் ஊழல் பெருமளவு குறைய வாய்ப்பு இருப்பதாலும் எதிர்ப்பு எழுகிறது. எளிமையாக்கப்பட்ட வரி விதிப்பு என்பதால் சட்டப் பிரச்னைகள் குறைவதால் வழக்குரைஞர்களுக்கும் பணி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காலப்போக்கில், இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும். மிகப் பெரிய சீர்திருத்தத்தால் நாட்டுக்குப் பலன் கிடைக்கும். இந்த சீர்திருத்தம் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும்.
கட்டுரையாளர்: வருவாய்த் துறை முன்னாள் செயலர்.

No comments:
Post a Comment