இஸ்லாமிய கூட்டமைப்பு / Organisation of Islamic Cooperation

இஸ்லாமிய கூட்டமைப்பு சபை என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய சர்வதேச அமைப்பு.

உலகிலுள்ள நான்கு கண்டங்களைச் சேர்ந்த 180 கோடி மக்கள் தொகையைக் கொண்ட 57 நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் உறுப்பினர்கள்.

1969 ஜூன் 17-ஆம் தேதி ஈரான் நாட்டுத் தலைநகர் டெஹ்ரானில் இந்த சபை ஏற்படுத்தப்பட்டது.

மக்கள்தொகை அளவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, இஸ்லாமிய கூட்டமைப்பு சபை தொடங்கப்பட்டபோது மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. தொடக்க விழாவுக்கு அழைக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பாலும் நிர்ப்பந்தத்தாலும் அந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது .

18 கோடி முஸ்லிம்கள் உள்ள இந்தியாவுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு சபையில் அங்கம் வகிக்க எல்லாத் தகுதிகளும் இருந்தும், பாகிஸ்தானின் கடும் எதிர்ப்பால் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக அரைநூற்றாண்டு காலத்திற்குப் பிறகு இந்தியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றவும் அனுமதிக்கப்பட்டது

பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத இந்தியாவின் ராஜதந்திர வெற்றி என்றுதான் கூற வேண்டும்.

சாதாரண நிலையில் இந்த நிகழ்வு சர்வதேச அரசியல் நோக்கர்களின் கவனத்தைக் கவராமல் போய் இருக்கக் கூடும். ஆனால், இந்தக் கூட்டம் நடந்த நேரம் மிக மிக முக்கியமானது. பாகிஸ்தானிலுள்ள பாலாகோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் காஷ்மீர் பிரச்னைக் குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்தியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை சாதுர்யமாகப் பயன்படுத்தி இந்தியாவின் கலாசாரப் பன்முகத் தன்மையையும், அரசின் பின்துணையுடனான பாகிஸ்தானிய பயங்கரவாதம் குறித்தும் இஸ்லாமிய கூட்டமைப்பு சபையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றியதுதான் தனிச் சிறப்பு.

இஸ்லாமிய கூட்டமைப்பு சபையுடன் இந்தியா நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதை சில அமைப்புகள் எதிர்க்க முற்பட்டிருப்பது தவறு. இஸ்லாமிய கூட்டமைப்பு சபை என்பது ஐ.நா., அணிசேரா நாடுகள் அமைப்பு, ரஷியா, தாய்லாந்து ஆகியவை கண்காணிப்பாளர்களாகக் கலந்துகொள்ளும் உலகின் இரண்டாவது சர்வதேச அமைப்பு. அந்த அமைப்பில் புல்வாமா தாக்குதலையும், உரி தாக்குதலையும் தொடர்ந்து இந்தியா நடத்திய துல்லியத்  தாக்குதல்களை நம்மால் எடுத்துரைத்து நியாயப்படுத்த முடிந்திருப்பது, பாகிஸ்தானை அந்த அமைப்பு கண்மூடித்தனமாகப் பாதுகாத்து வந்த நிலையை மாற்றியிருக்கிறது. பாகிஸ்தானின் நட்புவட்ட நாடுகளுடன் இந்தியா தனது நட்புறவை மேம்படுத்திக் கொள்ள இஸ்லாமிய கூட்டமைப்பு சபையுடனான நமது தொடர்பு உதவுகிறது.

இதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அபுதாபி கூட்டத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததை எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் வன்மையாக எதிர்க்கவும் கண்டிக்கவும் முற்படாமல் இல்லை.

இந்திய வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் அபுதாபியில் நடந்த வெளியுறவுத் துறைஅமைச்சர்கள் கூட்டத்தில் பேசும்போது, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி அரங்கிலிருந்து வெளியேறி தனது எதிர்ப்பை தெரிவிக்காமல் இல்லை.

அதுமட்டுமல்ல, அபுதாபியில் தனக்கு ஏற்பட்ட பின்னடைவை ஈடுகட்ட கடந்த செவ்வாய்க்கிழமை மொராக்கோ நாட்டில் நடந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் நாடாளுமன்றப் பிரிவின் துணைத் தலைவர் பதவியை வென்றிருக்கிறது. இந்தச் சிறிய வெற்றி இந்தியா அடைந்திருக்கும் மிகப்பெரிய வெற்றிக்கு ஈடாகிவிடாது.

அபுதாபி கூட்டத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், இஸ்லாமிய கூட்டமைப்பு சபையின் நிறுவன நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானின் கடும் கண்டனமும் எதிர்ப்பும் சவூதி அரேபியாவாலும் ஐக்கிய அரபு அமீரகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுதான்.

பயங்கரவாதம் என்பது அந்த நாடுகளையும் பாதித்திருப்பதால், தங்களது பாகிஸ்தான் மீதான பற்றையும் உறவையும் மீறி இந்தியாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை பொருளாதார வர்த்தகரீதியாக  ஐக்கிய அரபு அமீரகத்தையும் சவூதி அரேபியாவையும் மட்டுமல்ல,

வங்க தேசத்தையும் இந்தியாவை ஆதரித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய உலகத்தை தனக்குச் சாதகமாக இனிமேலும் பாகிஸ்தான் பயன்படுத்த முடியாது. இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி இது.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN