இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மை (Economic Inequality)


#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 3


The emerging trend in Economic Inequality in India does not augur well. Point out the main factors responsible for the trend and suggest appropriate measures to this effect? (IES 2018)

இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மையின் வளர்ந்துவரும் போக்கு இந்திய பொருளாதாரத்திற்கு  நல்லது இல்லை.இந்த போக்குக்கான முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டி, இந்த விளைவுக்கு பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் ? (IES 2018)





வறுமையும் ஏற்றத்தாழ்வும் - என்றால் என்ன?


அறிமுகம்

வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு, குறிப்பாக ஏற்றத்தாழ்வினைக் குறைப்பதற்கு அரசின் தலையீடு அவசியம். வறுமை என்றால் என்ன?, அதை எப்படி அளவிடுவது?, 121 கோடி இந்திய மக்களில் எத்தனை பேர் ஏழைகள்?, அவர்கள் யார் யார்?, எங்கே வசிக்கின்றார்கள்?, இதற்கான காரணம் என்ன?, இதை எப்படி போக்குவது?, அதற்கான திட்டங்கள் என்ன?, என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களே.


இந்த கேள்விகளுக்கான மிக தெளிவான துல்லியமான பதில்களை காணுவதில் பல சிக்கல்கள், சவால்கள் உள்ளன. உதாரணமாக, அன்று உணவின்மை வறுமையாக கருதப்பட்டது. இன்றைக்கு அதை மட்டும் வைத்து வறுமையினை மதிப்பிட இயலாது. பொருளாதார வளர்ச்சி காரணமாக வறுமை பற்றி நம் புரிதலும் மாறி வருகின்றது.
கல்வியின்மை, உடை மற்றும் உறைவிடமின்மை, வேலைவாய்ப்பின்மை, சுகாதாரமின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள், போதிய வருமானமின்மை, போதிய சத்துணவின்மை, கைவிடப்பட்ட, ஆதரவற்ற நிலை, என வறுமைக்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. இந்த பரிமாணங்கள் இடத்துக்கு இடமும், ஒவ்வொரு காலத்துக்கும், மாறிக்கொண்டும் வருகின்றன.
வறுமையினை கணக்கிட இவற்றில் எவற்றை எடுப்பது, எவற்றை விடுவது என்பது ஒரு சவாலான தெரிவு. அப்படியே தெரிவுகளை செய்தாலும் அவற்றை அளவிடுவது, நாடு முழுக்க, அதுவும் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில், கணக்கிடுவது போன்ற பணிகளும் சவால் நிறைந்தவையே. வறுமையினை ஒருவர் கண்கூடாக பார்க்க, உணர முடியும், அது பற்றி கோபப்பட முடியும், ஆனால், அதை வரையறுப்பதிலும், அளவிடுவதிலும் கணக்கிடுவதிலும்தான் பெரும் சவால்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.

வறுமை பற்றி இது போன்ற நடைமுறைக்குத் தேவையான அனைத்து கேள்விகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகான முயல்வதுதான் பொருளாதாரத்தின் ஒரு மிக முக்கிய பங்காகும். இந்த பெரும் பணியினை பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து செய்து வந்தாலும், அந்த முயற்சிகளில் அவர்கள் முழுமையாக வெற்றியடையவில்லை என்பதும், அதை ஒட்டிய விவாதங்களும் தொடர்கின்றன என்பதும் உண்மை. இது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள ஒரு நிலை.


வறுமை எப்படி உருவாகிறது?


வறுமையை ஒழிப்போம்’ என்ற தேர்தல் வாக்குறுதியை முன்வைக்காத அரசியல் கட்சிகள் எதுவுமே இல்லை. அதைத் தொடர்ந்து வறுமைக்கோட்டின் எல்லையை நிர்ணயிக்கும் பணியும், அதுகுறித்த சர்ச்சைகளும் எழுகின்றன. மக்கள்தொகையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் விழுக்காடு, வறுமையிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவரங்கள் அறிவிக்கப்படுகின்றன.
எளிமை, இல்லாமை, ஏழ்மை, வறுமை போன்ற சொற்களின் படிநிலையைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியவில்லை.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ‘வறுமை எளிமையைப் பின்தொடரும்போது’ என்ற தலைப் பில், ஈரான் நாட்டின் முன்னாள் அமைச்சரும் பல ஆண்டுகளாக (1957-72) ஐக்கிய நாடுகள் சபையின் வெவ்வேறு அங்கங்களில் முக்கியமான பதவிகளை வகித்தவருமான மஜீத் ரானெமா பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ள புத்தகம் ஆழமானதும் சுவாரஸ்யமானதுமான பல பார்வைகளை அளிக்கிறது. 2003-ல் வெளியான இந்தப் புத்தகம், உலக அளவில் பெரும் கவனத்துக்குள்ளானதுடன் வேறு பல மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது.
ஓய்வு பெற்றபின், 20 ஆண்டுகளுக்கு மேலாக, உலகில் ஏழ்மை என்ற பிரச்சினைகுறித்து ஆய்வுகள் செய்துவரும் இவர், கலிஃபோர்னியாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
“வறுமையும் இல்லாமையும் பரவலாகப் பெருகி வருவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சமூக அவலம். அதுவும், குறிப்பாக அதைத் தவிர்க்க முடிந்த சமூகங்களிலும் இப்படி வறுமையும் இல்லாமையும் பெருகிவருவது எல்லாவற்றிலும் மிக மோசம்” என்கிறார் ரானெமா.
ஏழ்மையின் மூன்று கோணங்கள்
அசையும் சொத்து, அசையாச் சொத்து, நுகர்பொருள்கள் இவற்றை மேலும் மேலும் உற்பத்தி செய்துதள்ளும் நடவடிக்கைகளினால் இந்த அவலத்தைப் போக்கிவிட முடியாது. ஏனென்றால், இதே நடவடிக்கைகள்தான் இன்னொருபுறம் வறு மையை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகவே, இந்த நிலையின் ஆழமான பன்முகக் காரணங்களைப் புரிந்துகொள்வதுதான் இன்றைய அக்கறையாக இருக்க வேண்டும்.
ஏழ்மை நிலையைப் பல கோணங்களிலிருந்தும் பார்க்கும் இவர், மூன்றுவிதமான ஏழ்மைகளைப் பற்றிப் பேசுகிறார்.
1. சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழ்மை.
2. ஒற்றுமையாகக் கூடி வாழ்பவர்களின் ஏழ்மை.
3. நவீன ஏழ்மை.
சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழ்மை என்பது அடிப்படையில் எளிமையான வாழ்க்கை. ஏழ்மை என்பது ஓர் எதிர்மறையான நிலை; குறைகளும் இல்லாமையும் நிறைந்தது. இதை விரும்பித் தேர்ந்தெடுப்பதென்பது விநோதமாக, முரண்பாடாகவேகூடத் தோன்றலாம்.
ஆனால், எளிமை, சிக்கனம், பிறரிடம் மரியாதை என்ற ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் அமைந்த சுதந்திரமான, தெளிவான வாழ்க்கை நிலையாக ஏழ்மை பண்டைய கலாச்சாரங்கள் எல்லாவற்றிலும் இருந்தது. இந்த வாழ்க்கை நிலைதான் பல பண்பாட்டாளர்களையும் உருவாக்கியிருக்கிறது.
ஒற்றுமையாகக் கூடி வாழ்பவர்களின் ஏழ்மை என்பது உலகைப் பற்றிய மத, ஆன்மிகரீதியினாலான பார்வையைச் சார்ந்தது. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கிடையேயும் தங்களைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலுடனும் தாங்கள் கொண்டுள்ள உறவுகளினால் உருவான செல்வங்களைச் சார்ந்தது இந்த வாழ்க்கை.
இந்தச் செல்வங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். தேவைக்கு மேல் எதையும் விரும்பாத அவர்களுடைய உலகத்தில் பற்றாக்குறைக்கு இடமிருக்காது. தங்களால் உற்பத்திசெய்ய முடிந்தவற்றை வைத்துக்கொண்டுதான் அவர்களுடைய தேவையும் நிர்ணயிக்கப்படுகிறது.
நவீன ஏழ்மை என்பது, பௌதிகச் சொத்துகள் மட்டுமே செல்வத்தின் ஊற்றுக்கண் என்று கருதி, மனிதர்களின் முயற்சிகளெல்லாம் அதை நோக்கியே இருக்கக்கூடிய சமூகம் உருவாக்கும் ஏழ்மை. இந்தச் சமூகம் புதிது புதிதாகத் தயாரிக்கும் தேவைகளை எல்லோரும், சில சமயம் கணிசமான பண வசதி உள்ளவர்களும்கூட, அடைய முடியாமல் போய்விடுகிறது.
சமூக, பண்பாட்டு உறவுகளை எல்லாம் தன்னுடைய சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் பொருளாதார மேலாதிக்கத்தின் நேரடி விளைவுதான் இந்த ஏழ்மை. இந்தச் சமூகம் ஆசை காட்டுபவற்றில் மயங்கிவிழும் ஏழைகள் இரண்டுவிதமான தேவைகளுக்கு ஆசைப் படுகிறார்கள். ஒன்று, ஏற்கெனவே தங்களுடைய முன்னோர்கள் காலத்திலிருந்தே இருக்கும் தேவைகள். மற்றொன்று, நுகர்வோர் பொருளாதாரம் செயற்கையாகத் தயாரித்து முன்வைக்கும் தேவைகள். இந்த வறுமை உடலைச் சீர்குலைப்பதுடன் மனதையும் களங்கப்படுத்துகிறது என்பது ரானெமாவின் கருத்து.

பண்டைய வறுமையும் இன்றைய வறுமையும்

சிறு வயதிலிருந்தே வெவ்வேறு பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்த மக்களுடன் பேசிப் பழகி, அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்ததால் நியாயமான, அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்கக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் ரானெமா. தவிர, தனக்கு அருகிலும் தொலைவிலும் இருந்த முன்னோர்களைத் தேடிப்போகும் புனிதப் பயணங்களை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
காலத்தில் பின்னோக்கிச் சென்று வரலாற்றுரீதியாகத் தகவல்களைச் சேகரித்ததில், பண்டைய காலத்தில் வறுமை என்று குறிப்பிடப்பட்டதற்கும் இன்றைய வறுமைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகச் சொல்கிறார். தொழில் நிமித்தமாக உலகம் முழுவதும் பயணம் செய்தபோது நிறைய குறிப்புகள் எடுத்துவைத்திருக்கிறார்.
வட கனடாவின் செவ்விந்தியர்கள், கொல்கத்தாவின் நடைபாதைவாசிகள் இவர்களிடையே தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றித் தன் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.
2008-ல், ழான் ரோபெர் என்பவருடன் இணைந்து இவர் எழுதியுள்ள ‘ஏழைகளின் சக்தி’ என்ற புத்தகம் ஏழ்மையை இன்னும் விரிவாக ஆய்வுசெய்கிறது. புள்ளிவிவரங்கள் மூலம் மட்டுமே வறுமையை வரையறுப்பது என்பது யதார்த்த நிலையைப் பிரதிபலிக்காது. சமூகவியலின், தத்துவச் சிந்தனையின் கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வறுமையைப் பற்றிய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார்கள் ரோபேடும் ரானெமாவும்.


இருவேறு வறுமைகள்


ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனுக்கு இயற்கையாக ஏற்கெனவே இருக்கும் வறுமை நிலை வேறு, வெளியுலகம் ஆசை காட்டுவதால் உண்டாகும் வறுமை வேறு. அவனுடைய உள் உலகுக்கும் வெளி உலகுக்கும் இடையேயுள்ள உறவுகளின் அடிப்படையில்தான் ஏழ்மையின் வரலாறே உருவாகிறது.
ஆனால், உண்மையில் தனிமனிதன் ஒருவனின் உள் உலகம்தான் அவன் உணரும் ஏழ்மையையோ செல்வத்தையோ நிர்ணயிக்கிறது. அவசியம் எது, மிகை எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவனுடைய உள் உலகம்: தேவையையும் குறையையும் அதுதான் வரையறுக்கிறது.
ஏழ்மை என்று கருதப்படும் தளங்கள் இந்த உலகில்தான் கட்டுமானம் செய்யப்படுகின்றன என்று சொல்லும் ரானெமா, “இந்தத் தளங்கள் நொறுங்கும்போது, வெளி யுலகிலிருந்து மனிதனைத் தாக்கும் இன்னல்களையும் சோதனைகளையும் தடுக்கும் கேடயங்களை அவனுடைய உள் உலகம், உள்மனம் இழந்துவிடுகிறது. பொருளாதார வசதியின்மை அல்லது வருமானமின்மை குறிப்பிடும் ஏழ்மையுடன் இந்த அவலமான நிலையை ஒப்பிட்டுக் குழப்பம் அடையக் கூடாது. இவை இரண்டும் ஒன்றல்ல” என்கிறார்.

- வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், 
இருமுறை செவாலியே விருது பெற்றவர்.
 

வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது எப்படி?



வளர்ச்சியும் மறுபங்கீடும் வறுமை ஒழிப்புக்கு மிக முக்கியமானவை

உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா. எனினும், இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் ஏழை. உலகின் 76 கோடி மக்கள் ஏழைகள்; 80 கோடிப் பேர் போதுமான உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி தரும் எண்ணிக்கை இது.

பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட பிரச்சினையான வறுமை, சுதந்திர வாழ்வைப் பின்பற்றுவதில் இருக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. பட்டினியும் அதைத்தான் செய்கிறது. இவற்றை அளவிடுவதில் இருக்கும் குழப்பத்தைக் களையவும், அவை தொடர்பான தகுந்த பார்வையைப் பெறவும் சமீபத்திய இரண்டு அறிக்கைகள் முயல்கின்றன. முதலாவது, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணை (ஜி.ஹெச்.ஐ.) அறிக்கை. அடுத்து, உலக வங்கி வெளியிட்ட வறுமைக் குறைப்பு மற்றும் இந்தியாவின் வளத்தைப் பகிர்வதற்கான வழிமுறைகள் எனும் அறிக்கை.

உலக நாடுகளில் நிலவும் வறுமையின் அளவைக் கணக்கிட உலகளாவிய பட்டினி அட்டவணை முயல்கிறது. இந்த அட்டவணை, மக்கள்தொகையில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களின் சதவீதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு; வளர்ச்சிக் குறைபாடு; இறப்பு விகிதம் ஆகியவற்றின் சதவீதம் எனும் நான்கு கூறுகள் கொண்ட சுட்டிக்காட்டிகளால் ஆனது.


0 முதல் 100 வரை


இந்த அட்டவணை 0 முதல் 100 வரையிலான அளவீடுகளைக் கொண்டி ருக்கிறது. இதில் 100 என்பது ‘முற்றிலும் பட்டினி’ எனும் நிலையையும், 0 என்பது ‘முற்றிலும் பட்டினியின்மை’ எனும் நிலையையும் குறிக்கின்றன. உலக நாடுகளும், பிரதேசங்களும்கூட பட்டினியின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. 9.9-க்கு இணையான - அதற்கும் குறைவான அளவீட்டின் கீழ் வருபவை ‘குறைந்த அளவு பட்டினி கொண்டிருப்பவை’ என்று கருதப்படுகின்றன. 10.0 முதல் 19.9 வரையிலான அளவீட்டைக் கொண்டவை ‘நடுத்தரமானவை’ எனும் வகைப்பாட்டிலும், 20 முதல் 34.9 அளவீட்டின் கீழ் வருபவை ‘தீவிர நிலையில் இருப்பவை’ எனும் வகைப்பாட்டிலும், 35 முதல் 49.9 வரையிலான அளவீட்டின் கீழ் வருபவை ‘அபாயகரமான’ நிலையில் இருப்பவை என்றும், 50-க்கும் அதிகமான புள்ளிகள் கொண்டவை ‘மிகவும் அபாயகரமான’ நிலையில் இருப்பவை என்றும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த ஆண்டின் உலகளாவிய பட்டினி அறிக்கையில் பொருத்தமான சில அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, பட்டினியின் அளவைக் குறைப்பதில் வளரும் நாடுகளுக்குப் பிரதான பங்கு இருக்கிறது. 2000-லிருந்து இந்த நாடுகளில் பட்டினியின் அளவு 29% குறைந்திருக்கிறது. இரண்டாவதாக, ஜி.ஹெச்.ஐ. புள்ளிகள் அதிகம் கொண்ட தனித்த சில பிராந்தியங்கள், ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்குகளைப் பூர்த்திசெய்வதில் உதவலாம். 2016 அட்டவணையில், சஹாராவின் தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளும், தெற்காசியாவும் அதிகபட்ச ஜி.ஹெச்.ஐ. புள்ளிகள் கொண்டிருக்கின்றன (முறையே 30.1 மற்றும் 29.0 புள்ளிகள்). எனவே, அவை ஜி.ஹெச்.ஐ.யில் ‘அபாயகரமான’ வகைப்பாட்டில் வைக்கப் பட்டிருக்கின்றன. மூன்றாவதாக, இந்த அட்டவணையில் பரிசீலிக்கப் பட்டிருக்கும் 118 நாடுகளின் பட்டியலில், இந்தியா படுமோசமாக 97-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது, இன்னமும் ‘தீவிர நிலையில்’ இருக்கும் நாடுகளின் பட்டியலில்தான் இந்தியாவும் இருக்கிறது.


இந்தியாவைவிடச் சிறப்பு


பட்டினியுடன் தொடர்புடைய வறுமையானது, சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியில் உள்ள மிகச் சிக்கலான பிரச்சினைகளில் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி அனுபவத்தில் உலக வங்கி அறிக்கை கவனம் செலுத்துகிறது. நான்கு முக்கிய விஷயங்கள் இதில் வெளிப்படுகின்றன.
முதலாவதாக, 1994-லிருந்து 2013 வரை, இந்தியாவில் வறுமை கணிசமான அளவு குறைந்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே காலகட்டத்தில், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் சதவீதம் 45%-லிருந்து 22%-ஆகக் குறைந்திருக்கிறது. அதாவது, 13.3 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். எனினும், இந்தியாவின் வளர்ச்சி அப்படி ஒன்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இரண்டாவதாக, இந்தியாவில் குறிப்பிட்ட சில தரப்பு மக்களின் நிலை, பிற மக்களுடன் ஒப்பிடுகையில் மோசமாகவே உள்ளது. பழங்குடியினரும், பட்டியல் இனத்தவரும் இதில் அடக்கம். 2012 நிலவரப்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களில் 43% பேர் பழங்குடியினர்; 29% பட்டியல் இனத்தவர்.
மூன்றாவதாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் வறுமை நிரந்தரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. முற்றிலும் வறுமை எனும் அடிப்படையில் இந்தியாவில் முதல் இடங்களில் இருக்கும் மாநிலங்கள், உத்தரப் பிரதேசம் (6 கோடிப் பேர் ஏழைகள்), பிஹார் (3.6 கோடிப் பேர் ஏழைகள்), மத்தியப் பிரதேசம் (2.4 கோடிப் பேர் ஏழைகள்). முதல் ஏழு இடங்களில் இருக்கும் மாநிலங்களில், இந்தியாவின் ஏழை மக்களில் 62% பேர் வாழ்கிறார்கள். வறுமை எனும் விஷயத்தில் கிராமப்புற - நகர்ப்புற வேறுபாடும் முக்கியமானது. இந்தியாவில் ஐந்து பேரில் ஒருவர் ஏழை. ஒவ்வொரு ஐந்து பேரில் நான்கு பேர் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். அத்துடன், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பெரிய நகரங்களில் வறுமை விகிதம் 7%தான். வறுமையின் அளவு குறைவதற்கு, மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என்பது முக்கியமான இன்னொரு புரிதல். வளர்ச்சி விகிதத்தில் பின்தங்கி யிருக்கும் மாநிலங்களின் தனிநபர் ஒட்டு மொத்த மாநில உற்பத்தி குறைவாக இருப் பதுடன், வறுமையும் அதிகமாகவும் உள்ளது.
நான்காவதாக, வளர்ச்சியும் மறுபங்கீடும் வறுமை ஒழிப்புக்கு மிக முக்கியமானவை.
ஆகையால், அடுத்த பதினைந்து ஆண்டுகளில், ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் முதலாவது, இரண்டாவது இலக்குகளில் மேம்பாடு காண்பதே இந்தியாவின் குடிமக்கள், ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்!


வறுமை: சில புள்ளிவிவரங்கள்!



இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு உயரும் என்று பன்னாட்டு அமைப்புகள் கூறினாலும் இந்தியாவில் இன்னமும் 30 கோடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மில்லீனியம் ஆண்டு மேம்பாட்டு திட்ட இலக்கின்படி இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையே சுட்டிக் காட்டியுள்ளது.
$ கல்வி, அடிப்படை சுகாதாரம், குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் எதுவுமே இவர்களுக்குக் கிடைக்கவில்லை.

125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்பது நெஞ்சு பதபதைக்க வைக்கும் செய்தியாகும்.
$ பாலின சமத்துவம், மகளிர்க்கு அதிகாரம், சிசு மரணக் குறைப்பு, திருமண வயதை அதிகரிப்பது, ஹெய்ஐவி மற்றும் எட்ய்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாடு ஆகிய இலக்குகளைக் கொண்டதாக இந்த செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
$ 2000-வது ஆண்டில் கொண்டு வரப்பட்ட மில்லீனியம் மேம்பாட்டு இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது.
$ மக்களின் வறுமைக்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன. புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களும், பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களும் வறுமையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
$ காடுகள், மலைகள், பனி படர்ந்த பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் வறுமையில் தவிப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
$ விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்கூட விவசாயத் தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதுதான் மிகவும் கொடுமையான விஷயம்.
$ நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்களில் அதிகமானோர் வறுமையில் வாடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
$ தரிசு நிலம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களில் வறுமை வாடுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
தகவல் தொடர்பு வசதியற்ற, போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகள் மற்றும் மாறுபட்ட தட்ப, வெப்ப நிலை நிலவும் பகுதிகளில் வசிப்பவர்களும் வறுமையின் பிடியிலிருந்து தப்பவில்லை.








No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN