நாணய மதிப்பு குறைவு (CURRENCY DEPRECIATION)

GENERAL STUDIES - 3 #UPSCTAMIL

Topic: Indian Economy and issues relating to planning, mobilization of resources, growth, development and employment.


Examine the causes behind India’s decreased merchandised exports and depreciating currency. Also discuss various options available to India.(250 words)


இந்தியாவின்  ஏற்றுமதி குறைவு  மற்றும் நாணய மதிப்பு குறைவு ஆகியவற்றிற்கான  காரணங்களை ஆராய்க.இந்தியாவுக்கு உள்ள  பல்வேறு வழிகளை  பற்றி விவாதிக்கவும்.


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் 


நன்றி : தமிழ் ஹிந்து 


சவாலை சந்திக்கும் ரூபாய்


இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. ஒவ்வொரு நாள் முடிவிலும் `இதுவரை வரலாறுகாணாத அளவில்’ என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. கடைசியாக கடந்த வாரத்தில் ரூ.74 என்கிற மதிப்புக்கு சரிந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இப்போது வரையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகளில் மிக மோசமாக மதிப்பு சரிந்த நாணயமாக ரூபாய் உள்ளது. இந்தோனேசியாவின் ருபியா, பிலிப்பைன்ஸ் பெசோ நாணயங்களும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளன.

காரணம் என்ன?

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் 40 டாலரிலிருந்து 75 டாலராக உயர்ந்துள்ளது. குறிப்பாக  ஈரான் மீது அமெரிக்க விதித்துள்ள வர்த்தக தடை காரணமாக சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
மேலும் ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்துள்ள இதர நாடுகளும் வர்த்தக தடைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் இந்த அழுத்தம் அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறது.
தவிர வளரும் சந்தை வாய்ப்புகளை கொண்ட நாடுகளான துருக்கி மற்றும் அர்ஜெண்டினா நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான சரிவினை சந்தித்துள்ளது. இதுவும் இதர வளரும் நாடுகளில் பெரும் தாக்கத்தினை உருவாக்குகிறது.
ரூபாய்மதிப்பு சரிவுக்கு வேறு பல அடிப்படையான காரணங்களும் உள்ளன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே சரிவு நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் ஏற்றுமதி,  தங்க ஏற்றுமதி வர்த்தகத்தில் நிலவும் பற்றாக்குறை, முதலீடுகள் வெளியேறுவது மற்றும் சர்வதேச அளவில் வளரும் நாடுகளில் நாணயங்களில் நடைபெறும் வர்த்தகமும் குறைந்து வருகிறது. இவையெல்லாம் சேர்ந்து நாணய சரிவை உருவாக்கி வருகின்றன.

என்ன நடக்கும்

ரூபாய் மதிப்பு சரிவு குறுகிய கால சிக்கல் என்றாலும், சரிவின் தீவிரத்தை உணர்ந்து அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்கிறார் எடல்வைஸ் எப்எக்ஸ் தரச்சான்று நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் குப்தா.
ரூபாய் மதிப்பு சரிவினால் பங்குச் சந்தையில் தாக்கம் தொடர்ச்சியாக எதிரொலிக்கிறது. பாண்டு சந்தையில் 10 ஆண்டு பாண்டுகளுக்கான ஆதாயமாக வட்டி விகிதம் 8.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த நிதிப்பாற்றக்குறையை சமாளிக்க ரூ.36,000 கோடி மதிப்புக்கு பாண்டுகளை சந்தையில் இருந்து வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கடன் பத்திரங்கள் வாங்கப்படுகின்றன.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் வட்டி விகிதத்தினை உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த நிதிக் கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் வட்டி உயர்வு இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது. இதனால் இந்திய பங்குச் சந்தை முதலீடுகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
முக்கிய தொழில்களுக்கான முதலீடுகள் உயரும்  என்பதால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். குறிப்பாக எதிர்பார்க்கப்பட்ட இலக்கிற்குள் கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. இதையும் தாண்டி அந்நிய முதலீடுகள் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.47,891 கோடி அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது. கடன் சந்தையிலிருந்து ரூ. 43,560 கோடி வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் அந்நிய முதலீடு அளவு 2 லட்சம் கோடியாக இருந்தது. அதில் கடன் சந்தையின் முதலீடு 1.48 கோடியாக இருந்தது. இதுவும் அடிப்படையான காரணமாக உள்ளது.

எப்படி நிறுத்துவது ?

ரூபாய் மதிப்பை சரிவை குறிப்பிட்ட இலக்கை வைத்து நிறுத்தும் வாய்ப்பு இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு உள்ளது. இதனால் குறுகிய கால திட்டங்களில் மதிப்பு சரிவை நிறுத்தும் சாத்தியங்கள் இல்லை என்கிறார் அமெரிக்க-மெரில் லிஞ்ச் அமைப்பின் யெஜேஷ் மேத்தா. ஆனால் மதிப்பு சரிவதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் டாலர் மதிப்பு மிக ஸ்திரமான நிலைக்குச் செல்லும் வாய்ப்பும் உருவாகியுள்ளது என்கிறார் இவர்.
ஐசிஐசிஐ வங்கியின் சர்வதேச சந்தைகள் தலைவர் பிரசன்னா கூறுகையில், டாலர் மதிப்பு 69 லிருந்து 70 வரை இருக்கையில் ரிசர்வ் வங்கியின் குறுக்கீடுகள் இருந்தன. ஆனால் குறிப்பிட்ட எல்லை வரைதான் குறுக்கிடக்கூடிய சூழல் இருந்தது என்கிறார்.
தற்போதுவரை ரிசர்வ் வங்கி 40000 கோடி மதிப்புக்கு டாலர் இருப்பு வைத்துள்ளது. அதனால் தேவையான சூழ்நிலையில் தலையீடு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்கிறார் இவர்.
நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலுக்கு ரிசர்வ் வங்கி என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாரொருவரும் கருத்து சொல்லத் தேவையில்லை என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய். வி. ரெட்டி. முதலில் ரிசர்வ் வங்கி எந்த விதமான உத்தரவுகள் மூலமும் இந்த விஷயத்தில் குறுக்கிட முடியாது. ஆனால் சந்தைக்கு சில சமிக்ஞைகளை அளிக்க முடியும். குறிப்பாக நம்மிடம் போதுமான அளவுக்கு டாலர் கையிருப்பு உள்ளது. இதைக் கொண்டு அடுத்த 9 மாதங்களுக்கன இறக்குமதி வர்த்தகத்தை சமாளிக்க முடியும்.

எப்டிஐ அதிகரிக்க வேண்டும்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த சூழலைப் புரிந்து கொண்டு, இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.  இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக  வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்கிறார் ரெட்டி.
ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது என இப்போது நாம் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்கக்கூடாது. அதேநேரத்தில் நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்கான தொடக்கமாக இது அமைந்துள்ளது.
சந்தைக்கு என்ன தேவையாக உள்ளது? எந்த உத்தியை எந்த நேரத்தில் பயன்படுத்துவது? எந்த வகையில் தகவல்களை அளிப்பது என்கிற விஷயங்களில் முதலில் முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்கு சந்தை உணர்ச்சிகரமாக வினையாற்ற வேண்டும் என்பது முக்கியமானது என்கிறார் ரெட்டி.
சர்வதேச அரசியல் போக்குகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்திய நாணயம் மட்டுமல்ல, பிற ஆசிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் நாணய மதிப்பிலும் கடந்த ஒரு மாதத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 75 டாலர் என்கிற மதிப்பில் உள்ள ஒரு பேரல் கச்சா எண்ணெய் 88-90 டாலர் வரையிலும் செல்ல வாய்ப்புள்ளது என்கின்றன கணிப்புகள். அதை சமாளிக்க என்ன அஸ்திரம் இந்தியா வைத்துள்ளது என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.


அலசல்: அச்சம் கொள்ள வைக்கும் ரூபாய்


ரூபாய் மதிப்பு படுவேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகரான மதிப்பில் கடந்த வாரத்தில் 70  ரூபாய்க்கும் கீழாக சென்று விட்டது. இந்த சரிவு போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில்   மேலும் குறையவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 2 சதவீத சரிவினை கண்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு சரிவுக்கு சர்வதேச அளவில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக துருக்கியின் பொருளாதார நெருக்கடியை காரணமாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். துருக்கியில் தனியார் துறை கடன் அதிகரித்துள்ளது. அந்நிய செலாவணி விகிதத்தின் ஆதிக்கமும் துருக்கியின் இந்த நெருக்கடிக்கு காரணமாக இருந்துள்ளன.
இதனால் துருக்கியின் லிரா நாணய மதிப்பில் ஏற்பட்ட சரிவு இதர நாட்டு நாணயங்களுக்கும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து அச்சப்பட தேவையில்லை என மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தையே ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனும் குறிப்பிட்டுள்ளார்.
டாலர் மதிப்பு உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. உள்நாட்டு நிதிப் பாற்றாக்குறை அளவும் பண மதிப்பு குறைவதற்கு காரணமாக உள்ளன என்கிறார் ரகுராம் ராஜன்.
டாலர் மதிப்பு உயர்வதால், ரூபாய் மதிப்பு குறைகிறது என எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் நாட்டின் கடன் அளவைவிட, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றால் பணமதிப்பு குறையும். முதலீட்டாளர்கள் இதைத் தான் கவனிக்கின்றனர் என்கிறார் ரகுராம் ராஜன். இந்திய பொருளாதாரம் இதர நாடுகளைவிட சிறப்பாக உள்ளது அதனால் உடனடியாக அச்சம் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவது நாட்டின் உடனடி தேவையாக உள்ளது. இதற்கு வட்டி விகிதங்களை அதிகப்படுத்தலாம்.  நிதிப் பற்றாக்குறையை இலக்கிற்குள் கட்டுப்படுத்துவதிலும் தீவிரமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணமதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் முழு ஆதரவினையும் பெற வேண்டும் என ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முழுவதும் பணவீக்க சரிவு இருக்கும்பட்சத்தில் நிலைமையை தீவிரமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதும் ராஜனின் யோசனையாக உள்ளது.
இந்த நிலைமையில் ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியா அந்நிய செலாவணிக்கு செலவிட வேண்டிய தொகை அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலைகளில் பெரும் மாற்றம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உணவு பண்டங்களுக்கான விலை ஏற்றத்துக்கு தானாகவே வழி வகுக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் சூழலும் எழுந்துள்ளது. இன்னொருபுறம் இந்தியாவுக்கு உள்வரும் அந்நிய செலாவணி குறையும் நிலையும் உருவாகும். 
இப்படியான பொருளாதார அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியை ரூபாய் மதிப்பு சரிவு கொண்டு வந்துள்ளது. உலக அளவிலான நெருக்கடியில் தற்போதுவரை  ரூபாய் மதிப்பு மட்டுமே அதிக அளவில் சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் இந்திய பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் வெறும் மாயை மட்டுமே.


நன்றி : BBC தமிழ் 

சரியும் ரூபாயின் மதிப்பு; உயரும் பெட்ரோல் விலை - என்ன நடக்கிறது?


தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுமுழுவதும் கடையடைப்பை நடத்தியுள்ள வேளையில், இது ஒரு மிகப் பெரிய பாதிப்பின் சிறு துவக்கமே என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்தின் செப்டம்பர் மாத முதல் வாரத்தோடு ஒப்பிடுகையில், பெட்ரோலின் விலை 25 சதவீதமும், டீசலின் விலை 13 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் என்ன தொடர்பு?

இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியே இந்த பிரச்சனைகளின் பிரதான மூலமாக பார்க்கப்படுகிறது.
ஆசிய கண்டத்திலுள்ள நாடுகளிலேயே இந்தியாவின் பணமதிப்புதான் இந்த வருடத்தில் மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் சுமார் 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளை விட்டு வெளியேறுகின்றனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக யுத்த கவலைகள் பிராந்தியத்திலுள்ள முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உதவில்லை.

இது இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்குமா?

"ரூபாய் மதிப்பு சரிவுக்கும் ஏற்றுமதிக்கும் ஒப்பீட்டளவில் தொடர்பு உள்ளது. ஒரு நாட்டின் பணமதிப்பில் தொடர் சரிவு இருக்கும்போது தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவது குறித்து ஏற்றுமதியாளர்கள் யோசிக்கலாம். ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு வரும் தொடர் சரிவு, அது இன்னும் சரிகிறதா என்பதை பார்த்து முடிசெய்வதற்கு ஏற்றுமதியாளர்களை தூண்டலாம்" என்று யெஸ் பேங்க்கின் தலைமை பொருளாதார நிபுணர் ஷுபாடா ராவ் கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல், இந்தியாவின் பணமதிப்பு குறைந்து வருவதால், கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி விலை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதற்கு உலகளவிலான பொருளாதார நிலை மட்டும்தான் காரணமா?

தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவீதம் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ள இந்தியாவின் எரிபொருள் விலை மாற்றத்திற்கு, சௌதி அரேபியா, இரான் போன்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அரசியல் சூழ்நிலை, தயாரிப்பு நிறுத்தம் போன்றவையும் காரணமாக அமைகின்றன.
கடந்த 2014 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் எரிபொருளின் விலை உலகளவில் குறைவாக இருந்த போதிலும், இந்தியாவில் சில்லறை விற்பனை விலை அதிகமாகவே இருந்தது. இதற்கு அரசாங்கத்தின் கொள்கைகளே காரணம் ஆகும்.
பெட்ரோல் விலையில் 45 சதவீதமும், டீசல் விலையில் 36 சதவீதமும் மதிப்பு கூட்டு வரிகள் மற்றும் கலால் வரிக்காக சென்றுவிடுகின்றன. இதைத்தவிர ஒவ்வொரு மாநிலமும் எரிபொருளின் மீது வேறுபட்ட வரிவிதிப்பை செலுத்துகின்றன. எனவே தான் மும்பையின் பெட்ரோல் விலை டெல்லியை விட அதிகமாக உள்ளது.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அரசாங்கம் தனக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் இருந்தாலும், எரிபொருள் மீதான வரியை நான்கு சதவீதம் குறைத்தது. ஆந்திரப்பிரதேச அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கவுள்ளதாக முடிவெடுத்திருந்தது. ஆனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் விலையை குறைப்பதற்கோ அல்லது வரியை குறைப்பதற்கோ தயாராக இல்லை.
"பொருளாதாரத்தை பொறுத்தவரை நீங்கள் வர்த்தகத்தில் மேற்கொள்ள நினைக்கும் இரண்டு மாற்றங்களையும் ஒரே சமயத்தில் செய்துவிட முடியாது. அதாவது, எரிபொருளின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் விரும்பினால், அதன் மீதான வரியை குறைப்பதை தவிர வேறு வழியில்லை. எரிபொருள்கள் மீதான மத்திய மற்றும் மாநில வரியை குறைக்க வேண்டும்" என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான சிஆர்ஐசிஐஎல்லின் தலைமை பொருளாதார நிபுணரான ஜோஷி கூறுகிறார்.

உங்களது வீட்டுப் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

எரிபொருளுக்காக செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா படுபாதாளத்தில் உள்ளது. ஒரு இந்தியர் தனது வருமானத்தில் அதிகபட்சம் 76 சதவீதத்தை எரிபொருளுக்காக செலவிடுவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எனவே, சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை சாதாரண மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
டீசலின் விலை உயர்வால் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லும் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது. இது பணவீக்கதை அதிகரிப்பதுடன், ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை கூட்டுவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது நடக்குமானால், எரிபொருளுக்கு மட்டுமல்லாமல் காய்கறிகள், வீடு மற்றும் வாகன கடனையும் நீங்கள் அதிகமாக செலவிட நேரிடலாம்.

'மோடினோமிக்ஸ்' என்னும் அரசியல்

"அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 72.32 ரூபாய். சில தலைவர்களின் வயதைவிட வேகமாக அதிகரித்து வருகிறது" என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் 2009-2014 வரையிலான ஆட்சிக்காலத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 ரூபாயை தொட்டபோது, அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதியால் தேர்தலில் வாக்குகளை கவரும் விடயமாக பயன்படுத்தப்பட்டதுடன், "நாட்டின் பொருளாதாரம் அல்லது ரூபாய் வீழ்ச்சியைப் பற்றி கவலை இல்லாமல் தனது ஆட்சியை தக்க வைப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் இந்த அரசாங்கத்தால் நாடு ஏமாற்றம் அடைந்துள்ளது" என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசாங்கம் பின்கால் வைக்கிறது.
எரிபொருள் விலை உயர்வு குறித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சர்வதேச சந்தையை இதற்கு குற்றஞ்சாட்டியது ஆச்சர்யமளிக்கும் விதமாக இருந்தது. ஆனால், அவர் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
"சில தருணங்களில் மக்களுக்கு சிரமம் இருந்தாலும் அவர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று பாஜக நம்புகிறது. இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கவலையளிக்கிறது" என்று சமீபத்தில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் அவர் கூறியிருந்தார். ஆனால், 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னரே 'மோடினோமிக்ஸ்' என்ற கூற்று அரசாங்கத்திற்கெதிரான விவகாரமாக மாறிவருகிறது என்பது மட்டும் உண்மை.

ரூபாயின் கதை

ஒரு காலகட்டத்தில் இந்திய நாணயம், அமெரிக்க நாணயத்துடன் வலுவாக போட்டி போட்டது. 1947இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது டாலரும், ரூபாயும் சமமாக இருந்தன. அப்போது இந்தியாவிற்கு கடன் ஏதும் இல்லை. பிறகு 1951இல் நாட்டில் முதல் ஐந்தாண்டு திட்டம் தொடங்கப்பட்டபோது, இந்திய அரசு வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்கத் தொடங்கியது. அதன்பிறகு ரூபாயின் பயணம் சரிவை நோக்கித் தொடங்கியது.
1975 தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 ரூபாயாக இருந்தது, பிறகு 1985இல் அது 12 ரூபாயாக சரிந்தது. 1991இல் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில், இந்தியா தாராளமயமாக்கல் பாதையை தேர்ந்தெடுத்த பிறகு வீழத் தொடங்கிய ரூபாயின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 47-48 என்ற அளவுக்கு வந்தது.




பணம்


ரூபாயின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பின் விளையாட்டை இப்படி புரிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாம் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்கிறோம் என்றும், இரு நாடுகளிடம் அந்நிய செலாவணி இருப்பு சமமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, அமெரிக்காவிடம் 67 ஆயிரம் ரூபாயும், இந்தியாவிடம் 1000 அமெரிக்க டாலர் உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு 67 ரூபாயாக இருப்பதால் இருவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு சமமாக இருக்கிறது என்று சொல்கிறோம்.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஒரு பொருளை இந்தியா வாங்குகிறது, அதன் மதிப்பு 6,700 ரூபாய். அதற்காக இந்தியா 100 டாலர்களை கொடுக்கிறது.
இப்போது இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பில் 900 அமெரிக்க டாலர் இருக்கிறது. இந்தியாவின் இருப்பில் இருந்து 100 டாலர் அமெரிக்காவிடம் சென்றுவிட்டது.

இந்த நிலை எப்போது சரியாகும்? அமெரிக்கா, இந்தியாவிடம் இருந்து 100 டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கும்போது தானே? ஆனால் அது நடைபெறாவிட்டால்? அதாவது அமெரிக்காவுக்கான நமது ஏற்றுமதி, நமது இறக்குமதியைவிட குறைவு.
நாணய விவகாரங்களில் நிபுணரான எஸ்.சுப்ரமண்யம் இவ்வாறு கூறுகிறார்: இதுபோன்ற நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தனது இருப்பில் இருந்து அமெரிக்க டாலர்களை வெளியிடுவதோடு, வெளிநாடுகளில் இருந்தும் அமெரிக்க டாலர்களை வாங்கி இந்தியச் சந்தைக்கு தேவையான டாலரை வழங்கவேண்டும்.

ரூபாயின் மதிப்பு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

தேவை மற்றும் வழங்கலின் அடிப்படையில் ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்கிறார் செலாவணி நிபுணர் எஸ்.சுப்ரமணியம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிலும் இதன் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு நாட்டிடமும் அந்நிய செலாவணி இருப்பு இருக்கும். அதைக் கொண்டுதான் வர்த்தகமும், பணப்பரிமாற்றமும் நடைபெறும். அந்நிய செலாவணி வரத்தைப் பொறுத்தே ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படும். அமெரிக்க டாலரை பொதுவாக எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்கின்றன. பெரும்பாலான நாடுகள் ஏற்றுமதிக்கான விலையை அமெரிக்க டாலர்களிலேயே குறிப்பிடுகின்றன.

ரூபாய் பலவீனமானது ஏன்?

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறது. ரூபாயின் மதிப்பு பொருளாதார காரணங்களுக்காக ஒரு சமயம் குறைந்தால், சில சமயங்களில் ஆட்சியின் நிலைமையினால் மாறும். பல சமயங்களில் இரண்டும் இணைந்தே ரூபாயின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.
டெல்லியில் இருக்கும் ஒரு பங்குச்சந்தை நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் ஆசிஃப் இக்பாலின் கருத்துப்படி, தற்போது ரூபாய் வீழ்ச்சியடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் அதிகரித்துவரும் விலை இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கான முதல் காரணம். கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது 75 டாலராக உள்ளது. இது, கடந்த மூன்றரை ஆண்டுகளின் உச்சபட்ச விலையாகும். அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, அதற்கான பணத்தை அமெரிக்க டாலர்களில் செலுத்துகிறது.
வெளிநாட்டில் இருந்து இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் தங்கள் பணத்தை திரும்ப எடுத்தார்கள். இந்த ஆண்டில் இதுவரை 46,197 கோடி ரூபாய்க்கும் அதிக அளவிலான பணம் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.
அமெரிக்க அரசு வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பதால், இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் பணத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுத்துச் சென்று அமெரிக்க பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.

ரூபாயின் வீழ்ச்சியின் தாக்கம் என்ன?


ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் நமக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? நாணய நிபுணர் எஸ்.சுப்ரமணியத்தின் கருத்துப்படி:
  • விலைவாசி அதிகரிக்கும்.
  • இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும்.
  • கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அடிப்படை தேவைகளான உணவுப்பொருட்கள், காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும்
  • இதைத்தவிர, அமெரிக்க டாலரில் செலுத்த வேண்டிய செலவுகள் மற்றும், நிலுவைக் கட்டணங்களுக்காக அதிக இந்திய ரூபாய் தேவைப்படும்.
  • வெளிநாட்டு சுற்றுலாவுக்கான செலவு அதிகரிக்கும்.
  • வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான செலவும் அதிகரிக்கும்.

ரூபாய் மதிப்பு வீழ்ந்திருப்பதால் யாருக்காவது நன்மை கிடைக்குமா?

சிலருக்கு நன்மை கிடைக்கும் என்கிறார் சுப்ரமணியம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு நன்மை ஏற்படும். அவர்களுக்கு கிடைக்கும் பணம் அமெரிக்க டாலராக கிடைக்கும். அதை ரூபாயாக மாற்றும்போது அவர்களுக்கு லாபம் அதிகமாகும்.
இதைத்தவிர, ஐ.டி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் பொருட்களை வெளிநாட்டில் விற்பதால் ரூபாயின் இறங்குமுகம் அவற்றிற்கு ஏறுமுகமாக இருக்கும்.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN