# UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL GS - 4
"தகவல் உரிமைச் சட்டம் என்பது குடிமக்களை அதிகாரப்படுத்துவது மட்டுமல்ல, அது பொறுப்புணர்வு என்ற அடிப்படை கருத்தை மறுபரிசீலனை செய்கிறது."விவாதி.(UPSC 2018)
கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்.
கட்டுரை எண் : 1
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஒரு அரசு சாரா ஒரு தனியார் அமைப்பு என்று கூறிக்கொண்டு வருகிறது. மேலும் உலகிலேயே அதிக வலிமை வாய்ந்த விளையாட்டு அமைப்பாகவும், கோடிக்கணக் கான சொத்துகளை கொண்ட அமைப்பாகவும் உள்ளது.இருந்த போதும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மூவர்ண நிறம் தாங்கிய தேசிய சீருடையை அணிந்து, அசோகா சக்கரம் பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டுடன் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டி களிலும் பங்கேற்று வருகிறார்கள்.
கிரிக்கெட்டை பொருத்தவரை தேசத்தின் பிரதிநிதியாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தொடர் பாக கேள்வி எழுப்பும் நேரங்களில் தங்களை தனியார் அமைப்பு, எங்களை யாரும் கட்டுப்படுத்த இயலாது, நாங்கள் கேள்விக்குப் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர் கள் இல்லை என வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பிசிசிஐ-யை தகவல் அறியும் உரிமை சட்டத் துக்குள் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் வீரர்களின் ஊதியம், வாரியத்தின் ஆண்டு வரு மானம், எத்தனை ஆண்டு கால ஒப்பந்தம், வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றிய பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது பிசிசிஐ.
ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தையும் ஏன் அதன் கீழ் கொண்டு வரக்கூடாது என்று கேள்வி எழுப்பிய சட்ட ஆணையம், 1997-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை பிசிசிஐ, மத்திய அரசிடம் இருந்து ரூ.2,168 கோடிக்கு வரிச்சலுகை பெற்றிருப்பதை குறிப்பிட்டது. மேலும் பிசிசிஐ-யை தகவல் அறி யும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. இதையடுத்து சிஐசி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ கொண்டு வரப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது நிர்வாகக் கமிட்டியின் (சிஓஏ) கட்டுப்பாட்டில் பிசிசிஐ இயங்கி வருகிறது.
இந்த முடிவு குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறிய தாவது: சிஐசி உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி. இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுரை எண் : 2
கேள்வி கேட்டால் இனி பதில் சொல்ல வேண்டும்: ‘ஆர்டிஐ சட்டத்துக்குள் வந்தது பிசிசிஐ’: சிஐசி அதிரடி
மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை(பிசிசிஐ) தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய தகவல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுநாள்வரை தேசியக் கொடியை வெளிநாடுகளில் பயன்படுத்திவரும் பிசிசிஐ அமைப்பு, பிரச்சினை வரும்போதும், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் கேள்வி எழுப்பும் பட்சத்தில் தாங்கள் தனியார் அமைப்பு எங்களைக் கட்டுப்படுத்த முடியாது, கேள்விக்குப் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் இல்லை எனத் தெரிவித்து வந்தது. இனிமேல் அவ்வாறு சொல்வது இயலாது.
# தொடர்புடைய வினாக்கள்
உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணையத்தின் அறிக்கை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய தகவல் ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கை, பிசிசிஐயின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர முகாந்திரம் இருந்ததால், இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு நிருபர்களிடம் கூறுகையில், கீதா ராணி என்ற மனுதாரர், இந்தியவீரர்களை எந்த அடிப்படையில் பிசிசிஐ தேர்வு செய்கிறது, எந்த வழிகாட்டுதல் முறையில், நெறிமுறை அடிப்படையில் இந்திய தேசத்தின் பிரதிநிதியாக பிசிசிஐ இந்தியஅணியை விளையாட வைக்கிறது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கீதா ராணிக்கு மனநிறைவான பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டில் ஆய்வு செய்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணையத்தின் அறிக்கை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய தகவல் ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கை, பிசிசிஐயின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர முகாந்திரம் இருந்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் முழு அதிகாரம் பெற்ற, முற்றுரிமை பெற்ற தேசிய அளவிலான அமைப்பு பிசிசிஐ என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது.
ஆதலால், பிசிசிஐ அமைப்பின் சார்பில் தகுதியான பொது தகவல் அதிகாரிகள், துணை தகவல் அதிகாரிகள் ஆகியோரைச் சட்டத்தின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றஉ பிசிசிஐ தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மற்றும் ஆப்-லைன் மூலம் மனுக்களைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். பிசிசிஐ மட்டுமல்லாது பிசிசிஐ அமைப்பின் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்
இவ்வாறு ஆச்சார்யலு தெரிவித்தார்.
கட்டுரை எண் : 3
ஆர்.டி.ஐ: தகவல் கேட்டதற்காக தினமும் மன உளைச்சலில் மனுதாரர்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கடந்த ஓராண்டு காலமாக வெவ்வேறு மாதிரியான பதில்கள் வந்து கொண்டிருப்பதால், சரவண குமார் என்னும் மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசு சார்ந்த கேள்விகளை கேட்டு பதில்களைப் பெறுவதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டால் அதற்கு முறையாக பதில்கள் வருவதில்லை என்றும், சம்பந்தமே இல்லாமல் நூற்றுக் கணக்கான கடிதங்களை அனுப்பி மனுதாரரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தருமபுரியை சேர்ந்த அ.ப.சரவணக்குமார் என்ப வர் ‘தி இந்து’ விடம் கூறிய தாவது:
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு மூடப்போவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, “அண்ணா நூலகம் கட்டப்பட்டதன் நோக்கம் என்ன? அதனுடைய செயல்பாடுகள் எப்படி உள்ளது? அதை ஏன் மூட வேண்டும்? தமிழகத்தில் அண்ணா மறுமலர்ச்சி நூலகத் திட்டத்தின்படி எத்தனை கிராமங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன?” என்பன உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய மனுவை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்தாண்டு மார்ச் மாதம் அனுப்பி வைத்தேன்.
மனு அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிமுறை. ஆனால் எந்த பதிலும் வரவில்லை. எனவே, மீண்டும் தலைமைச் செயலகத்தின் மேல் முறையீட்டு அலுவலரிடம் மனு செய்தேன். இம்முறை எனது கேள்விகள் நூலகத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தலைமைச் செயலகத்திலிருந்து அனுப்பப்பட்ட எனது கடிதத்தின் ஒரு பக்கத்தை காணவில்லை என்று நூலகத்துறை அதிகாரிகள் கூறினார்கள். நான் மீண்டும், எனது மனுவின் நகலை அவர்களிடம் அளித்தேன். அப்போது, ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காகவே அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டதாக பதில் அளித்தார் கள். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்படி உருவாக்கப்பட வுள்ள நூலகங்கள் குறித்த கேள்விகள் 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பப் பட்டன. இதன்பேரில் தான் தினமும் வெவ்வேறு பதில் கடிதங்கள் வருகின்றன. இதுவரை 100-க்கும் அதிகமான கடிதம் வந்துள்ளன. ஒரு துறை என்றால், அதன் தலைமையிடமான இயக்குநரகத்தில் அந்த துறை சார்ந்த அனைத்து தகவல்களும் கட்டாயம் இருக்கும். ஆனால் மனுதாரர்களை அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் கிளை அலுவலகங்களுக்கு மனுவை அனுப்பி வைக்கிறார்கள்.
இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது. இந்த கடிதங்களில் உரிய பதிலையும் சொல்வதில்லை. தினமும் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார். பெரிய அளவில் தபால் கட்டுகள் குவிந்து கொண்டே போகிறது. மனு செய்பவர்களை முட்டாளாக்குவது போல் இருக்கும் இந்த நடைமுறை மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொது நூலகத் துறையின் கூடுதல் இயக்குநரி டம் கேட்டபோது, “மாநில அலுவ லகத்தில் எல்லா தகவல்களும் இருக்காது. அரசுக்கு தேவையான தகவல்கள் மட்டும் மாவட்டங் களிலிருந்து வாங்கிப் பெற்றுக் கொள்ளப்படும்” என்றார்.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரும் சட்டப்பஞ்சாயத்து இயக்க ஒருங் கிணைப்பாளருமான செந்தில் ஆறு முகத்திடம் கேட்டபோது, “இதற்கு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும். ஏதோ எந்திரங்கள் போல் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். உரிய பதில் வராவிட்டால் மேல் நடவடிக்கை நிச்சயம் என்ற நடைமுறை வேண்டும்” என்றார்.
கட்டுரை எண் : 4
விபரீதமான தவறும்.. விநோதமான பதிலும்.. பதிவுத்துறை அதிகாரிக்கு ரூ.25,000 அபராதம்- தகவல் ஆணையம் உத்தரவு
பண மதிப்பு நீக்கத்தால் தவணை சலுகை கேட்டு மனு
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களை அளிக் காத பதிவுத்துறை பெண் உயரதி காரிக்கு மாநில தகவல் ஆணை யம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித் துள்ளது. இதை 10 தவணையாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
சென்னை அம்பத்தூர் பதிவுத் துறை அலுவலகத்தில் ஒரு சொத்துப் பதிவுக்கான முன்னேற் பாடுகள் நடந்துவந்த நிலையில், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஒரு வழக் கறிஞர் கடிதம் அனுப்பியிருந்தார். சம்பந்தப்பட்ட சொத்தைப் பதிவு செய்ய நீதிமன்றத் தடையாணை உள்ளதை அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனபோதி லும், அந்த சொத்து பதிவு செய்யப் பட்டது பின்னர் தெரியவந்தது. இதுதொடர்பாக சில விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் அந்த வழக்கறிஞர் கேட்டிருந்தார். அதற்கும் அம்பத்தூர் சார் பதிவாளர் உரிய பதில்களை தெரிவிக்கவில்லை.
இது மாநில தகவல் ஆணை யத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணைக்குப் பிறகு மாநில தலைமை தகவல் ஆணையர் கே.ராமானுஜம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:
சம்பந்தப்பட்ட சொத்தைப் பதிவு செய்ய ஏற்கெனவே நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்று கூறுவது ஏற்புடைய தாக இல்லை. சம்பந்தப்பட்ட சொத்தை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், நீதிமன்றத் தடை உத்தரவு இருப் பதை சுட்டிக்காட்டி அம்பத்தூர் சார் பதிவாளருக்கு மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கடிதமும் எழுதியிருக்கிறார்.
‘வழக்கறிஞர் வெறும் கடிதம் மட்டுமே அனுப்பினார். அதில், நீதிமன்ற தடை உத்தரவு நகல் இல்லை’ என்ற பதிலும் ஏற்கும்படி இல்லை. ஏனென்றால், அந்த வழக்கறிஞர் இந்த தபாலை அனுப்ப ரூ.30-க்கு தபால்தலை ஒட்டியுள்ளார். ஆக, அந்த உறை யின் எடை 30 கிராம் இருந்திருக்க வேண்டும். எனவே, அந்த உறையில் ஒரே ஒரு தாள் மட்டுமே இருந்தது என்பதும் ஏற்கும்படி இல்லை.
ஒரு வேளை, கடிதம் மட்டுமே அதில் இருந்தாலும்கூட, சார் பதிவாளரே தானாக முன்வந்து அந்த வழக்கறிஞரிடம் நீதிமன்ற தடை உத்தரவு நகலை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பப் படும் பல கடிதங்கள் தனக்கு வருவதே இல்லை என்றும் அந்த அதிகாரி கூறுகிறார். ஆனால், அலுவலகத்தின் தபால் பதிவேடுகள் இதற்கு நேர்மாறாக உள்ளன. 2 கடிதங்களுக்கு பதில் அளித்ததாக கூறுகிறார். சம்பந்தப்பட்ட நபருக்கு அந்த பதில் போய்ச்சேரவே இல்லை. ஒரே ஒரு பதில் மட்டும் வந்து சேர்ந்திருக்கிறது. அதில், தகவல் கேட்கப்பட்ட தேதிகூட குறிப்பிடப் படவில்லை. அலுவலகத்தின் தபால் பதிவேடுகளில் பல விவரங்களை பென்சிலால் எழுதியுள்ளனர். இது எந்த அளவுக்கு நம்பகமானது என்பது தெரியவில்லை.
சம்பந்தப்பட சொத்துப் பதிவு, சட்டவிரோதமான வகையில் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் அந்த வழக்கறிஞர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த நோக் கமே நிறைவேறவில்லை. சார் பதி வாளர் கூறும் அனைத்து விளக்கங் களும் ஏற்கும் விதத்தில் இல்லை. எனவே, தகவல் உரிமை சட்டம் பிரிவு 20(1)ன் கீழ் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி தற்போது மாவட்டப் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரண மாக தன்னால் இந்த அபராதத்தை ஒரே தடவையாக செலுத்த இயல வில்லை என்று மாநில அரசிடம் அந்த அதிகாரி மனு செய்தார். இதை ஏற்று 10 தவணைகளில் ரூ.25 ஆயிரம் அபராதத்தை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தகவல் ஆணையத்திடம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
விபரீதமான தவறால் சிக்கலில் சிக்கிய அதிகாரி, மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை காரணம் காட்டி 25 ஆயிரம் ரூபாயைக் கட்ட சலுகை கேட்டதும், தலா ரூ.2,500 என 10 தவணையில் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும் சாமானிய மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கட்டுரை எண் : 5
கோவில் நிதியை பயன்படுத்தி அறநிலைய துறையினர்... குதுகலம்! தகவல் அறியும் சட்டம் மூலம் 'குட்டு' வெளியே வந்தது
தமிழகத்தில் வருமானம் அதிகமுள்ள கோவில்களின் நிதி, தர்ம காரியங்களுக்கு சம்பந்தமில்லாமல், கட்டடங்கள், பொருட்காட்சி என சகட்டுமேனிக்கு, அறநிலையத் துறை பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவில் நிதியை, அதற்கு நேரடி தொடர்பில்லாத தர்ம காரியங்களுக்கு செலவு செய்யலாம். ஆனால், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்ய, கோவில் அறங்காவலர்களுக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது.அறங்காவலர்கள் இதற்காக உரிய, 'நோட்டீஸ்' கோவில் நிர்வாகத்திடம் வைக்க வேண்டும்; ஆணையர் அனுமதி பெற வேண்டும். மேலும், தர்ம காரியங்களுக்கு மட்டும் தான், பணம் எடுக்க முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, அறநிலையத் துறைச் சட்டம் விதித்துள்ளது.ஆனால், அறநிலையத் துறை இதை மீறி, தங்களுக்கு வேண்டிய செலவுகளுக்கு, கோவிலுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத செலவுகளுக்கு, வருமானம் உள்ள கோவில்களில் இருந்து, மிகப் பெரும் அளவில் நிதி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆன்மிக நல ஆர்வலர் ஒருவர் கோரிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இந்த 'குட்டு' வெளிப்பட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் நிதியில், கமிஷனர் அலுவலக புதிய கூட்ட அரங்கம், 10.35 லட்சம் ரூபாய்; இலவச திருமணங்கள், 10 லட்சம் ரூபாய்; அரசு பொருட்காட்சி, எட்டு லட்சம் ரூபாய்; தனியார் நடத்திய பொருட்காட்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் என, செலவழிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதற்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது குறித்து, ஆன்மிக நல ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:பக்தர்கள் மூலமாகவும், கோவில் சொத்துக்கள் மூலமாகவும் வரும் நிதி, கோவில் பராமரிப்பு, பூஜை உள்ளிட்ட விதிமுறைக்கு உட்பட்ட தர்ம காரியங்களுக்கு மட்டுமே செலவழிக்க முடியும். ஆனால், அறநிலையத் துறை அதிகாரி களோ, தங்கள் இஷ்டத்திற்கு கோவில் நிதியை பல ஆண்டுகளாக செலவழித்து வருகின்றனர். சமீபத்தில், அறநிலையத் துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு தேவையான உணவுகள் வாங்க, கோவில் நிதியை செலவு செய்துள்ள தகவல் வெளியானது.இந்நிலையில், கோவிலுக்கு சம்பந்த மில்லாத பல்வேறு பணிகளுக்காக, கோவில் நிதியை செலவு செய்தது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. கோவில் கணக்கு வழக்குகளை கண்காணிக்க மட்டுமே, அறநிலையத் துறைக்கு உரிமை உள்ளது. ஆனால், கோவில் நிதியை, இஷ்டத்திற்கு செலவு செய்யும் அறநிலையத்துறையின் அதிகாரப்போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கு தொடருவோம்!கோவில் நிதியை, அதற்கு சம்பந்தமில்லாமல், அறநிலையத்துறையின் பணிகளுக்கு செலவிடுவது, தொடர்கதையாகி வருகிறது. இவை, சட்டப்படி குற்றம். இது தொடர்பாக, அறநிலையத் துறை மீது, வழக்கு தொடர உள்ளோம். டி.ஆர்.ரமேஷ்ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர்
வழக்கு தொடருவோம்!கோவில் நிதியை, அதற்கு சம்பந்தமில்லாமல், அறநிலையத்துறையின் பணிகளுக்கு செலவிடுவது, தொடர்கதையாகி வருகிறது. இவை, சட்டப்படி குற்றம். இது தொடர்பாக, அறநிலையத் துறை மீது, வழக்கு தொடர உள்ளோம். டி.ஆர்.ரமேஷ்ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர்
No comments:
Post a Comment