#கேள்வி - பதில் சவால் #UPSCTAMIL
'முதன்மை தேர்வுகளை முடித்துவிட்டாலே பாதி கிணற்றைத் தாண்டிய கணக்குதான்' எனப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனுபவசாலிகள் கூறுவது வழக்கம். மெயின் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது நமக்கான போட்டி கூடவும் செய்கின்றது, குறையவும் செய்கிறது. போட்டியாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைகிறது. (UPSC தேர்வுகளைப் பொறுத்தவரை சுமார் 6 லட்சத்திலிருந்து 18 அல்லது 20 ஆயிரமாக) அதேசமயம் அதிக ஆற்றல்மிக்கவர்களே
மெயின்தேர்வுக்கு தகுதி பெறுவதால் போட்டி இன்னும் கடுமையாகிறது. இப்படியொரு நிலையில், மெயின் தேர்வுகளில் நிலவும் போட்டியை எளிதில் எதிர்கொள்ளும் எளியமுறை போட்டிகளைப் பற்றியெல்லாம் மறந்துவிட்டு, படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது.
முதன்மைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வெறும் 'டிக்' அடிக்கும் வேலை என்றால், மெயின் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு குறிப்பிட்டுள்ள சொற்களின் எண்ணிக்கையின்படி விடையளிப்பதே நம் வேலை. ஒரு சில வரிகளில், பத்திகளில், பக்கங்களில் என கேள்விகளுக்கு ஏற்றதுபோல் நாம் அளிக்கும் விடைகளில்தான் வெற்றி இருக்கிறது.
UPSC தேர்வுகளைப் பொறுத்தவரை மெயின் தேர்வுகளில் மொத்தமாக 9 தாள்கள் உள்ளன. அவற்றில் இரண்டு தாள்கள் - தமிழ் (அல்லது ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழி) மற்றும் ஆங்கிலம் நமது ரேங்க் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தாளுக்கு தலா 300 மதிப்பெண்கள் கொண்ட இந்த இரு தாள்களிலும் தகுதி பெற்றால் மட்டுமே போதும். அடுத்ததாக கட்டுரைத்தாள் - இதற்கு 250 மதிப்பெண்கள். இந்தத் தாளை நாம் நம்முடைய தாய் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம். கட்டுரைகளை எழுதும் முறைகள், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வியூகங்களைப் பற்றியும் வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
UPSC மெயின் தேர்வின் முக்கிய அங்கம், பொதுப்பாடங்கள். நான்கு தாள்களை (ஒவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்களைக் கொண்டவை. பொதுப் பாடத்தின் முதல் தாளைப் பொறுத்தவரை - இந்திய வரலாறு, கலாசாரம், உலக வரலாறு, புவியியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கொண்டது. பொதுப் பாடத்தின் இரண்டாவது தாளை எடுத்துக்கொண்டால் அதில் நிர்வாகம், அரசியல் அமைப்பு (Polity), சமூக நீதி மற்றும் சர்வதேச உறவுகள் ஆகியவை இடம் பெறும். பொதுப் பாடம் மூன்றாவது தாளில் அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல், பல்லுயிர் ( Biodiversity), பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவை உள்ளன. பொதுப் பாடத்தின் நான்காம் தாளில் நெறிமுறைகள் (ethics), நேர்மை மற்றும் தகுதி (aptitude) சார்ந்த கேள்விகளே இடம்பெறும்.
ஆக, UPSC மெயின் தேர்வில் 250 * 4 என்றரீதியில் பொதுப் பாடங்களில் இருந்து மட்டும் 1000 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறுகின்றன. மொத்தம் உள்ள 1,750 மதிப்பெண்களில் 1000 மதிப்பெண்கள் பொதுப் பாடங்களில் இருந்து வருவதை வைத்தே, பொதுப் பாடங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். UPSC மெயின் தேர்வில் இறுதியாக இடம்பெறுகின்றவை விருப்பப் பாடங்களுக்கான இரண்டு தாள்கள் ( 2x 250 ). UPSC நிர்ணயித்துள்ள விருப்பப் பாடங்களில் எவற்றை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். நாம் தேர்வு செய்யும் பாடத்தில் நாம் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை.
இவற்றையெல்லாம் சேர்த்தால், மொத்தமாக 1750 மதிப்பெண்களுக்கு UPSC மெயின் தேர்வில் கேள்விகள் இடம் பெறும். இதில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து மெயின் தேர்வு எழுதுகின்றவர்களில் சுமார் 10ல் ஒரு பங்கினர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். உதாரணமாக 20,000 பேர் மெயின் தேர்வினை எழுதினால் அதில் 2,000 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் 275 மதிப்பெண்கள் அதிகபட்சமாக வழங்கப்படும். இந்த 275 மதிப்பெண்களும், மெயின் தேர்வின் மொத்த மதிப்பெண்ணோடு 1750 சேர்த்து 2025 மதிப்பெண்களுக்கு நாம் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தரவரிசை பட்டியல் (Ranking) வழங்கப்படும்.
TNPSC group 1 மெயின் தேர்வுகள் மொத்தமாக மூன்று தாள்களைக் கொண்டவை. மூன்றுமே பொதுப் பாடங்கள் தான். முதல்தாளில் இந்திய வரலாறு மற்றும் கலாசாரம், அறிவுத் திறன் (mental ability) ' இந்தியா மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் ஆகியவையும் இரண்டாவது தாளில் இந்திய அரசியல் அமைப்பு, உலக அரசியல், இந்திய புவியியல், தமிழ்ச் சமுதாயம், அதன் பாரம்பர்யம், கலாசாரம் மற்றும் வளர்ச்சி, தமிழகம் சார்ந்த நிர்வாகம் மற்றும் அரசு இயந்திரம் பற்றிய தகவல்கள் ஆகியவையும் மூன்றாவது தாளில் அன்றாட நாட்டு நடப்புகள், சர்வதேச நடப்புகள், தமிழக நடப்புகள், பொருளாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தைச் சார்ந்த பொருளாதார பிரச்னைகள் ஆகியவையும் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு தாளுக்கும் 300 மதிப்பெண்கள்வீதம் TNPSC மெயின் தேர்வுகளில் மொத்தமாக 900 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறுகின்றன. இவற்றில் தமிழ் மற்றும் தமிழகம் சார்ந்த சிறப்புப் பகுதிகள் நீங்கலாக மற்ற அனைத்தும் நாம் UPSC மெயின் தேர்வுகளில் பார்த்தவைதான். ஆக, TNPSC மெயின், UPSC மெயின் என்று தனித்தனியாக படிக்கத் தேவையில்லை.
No comments:
Post a Comment