தவறு சிபிஐயிடம்(CBI) இல்லை; அரசு குறுக்கீட்டை நிறுத்துங்கள்
பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்தும் வகையிலும், சரியோ தவறோ, சட்டத்துக்கு உட்பட்டோ அல்லாமலோ என்று எந்த உத்தரவாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் நோக்கில் போலீஸ் சட்டம் – 1861 நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, போர் தொடர்பான செலவுகள் கடுமையாக அதிகரித்திருந்த நிலையில், நேர்மையற்ற சக்திகள் லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தச் சூழலுக்கு ஏற்ப செயல்படும் நிலையில், காவல் துறையும், பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் இல்லை என்று கருதப்பட்டது.
அப்போதுதான் 1941-ல், போர்த் துறையில், சிறப்பு போலீஸ் நிறுவகம் (எஸ்பிஇ) அமைக்க ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1946-ல், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய செயல்பாடுகள் அமையும் வகையில், டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவகச் சட்டத்தை அரசு நிறைவேற்றியது. காலப்போக்கில், எஸ்பிஇயிடம் மேலும் மேலும் வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன. 1963-ல், ஒரு தீர்மானத்தின் மூலம், பணியாளர் துறையின் கீழ் எஸ்பிஇயை சிபிஐயாக உருமாற்றம் செய்தது இந்திய அரசு. இத்தனை ஆண்டுகளில், பன்முகத்தன்மை கொண்ட, பல்வேறு விஷயங்களைக் கையாளும் விசாரணை அமைப்பாக படிப்படியாக சிபிஐ உருவெடுத்திருக்கிறது.
சிபிஐ மீது அவ்வப்போது விமர்சனங்கள் எழுகின்றன. “செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிரான வழக்குகளைக் கையாளும்போதெல்லாம், சிபிஐ மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்படுவது இன்றைக்கும் தொடர்கிறது” என்று 2009-ல் வெளியான ஒரு கட்டுரையில் நீதிபதி ஜே.எஸ்.வர்மா குறிப்பிட்டிருந்தார். சிபிஐ ஒரு கூண்டுக்கிளி என்று 2013-ல் உச்ச நீதிமன்றம் கூறியது.
விமர்சனம் சரியானதுதான். ஆனால், இதற்கு சிபிஐயைப் பொறுப்பாக்க முடியுமா? வெவ்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட கமிட்டிகள், சிபிஐயில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைத்திருக்கின்றன. 1978-ல், “தனது கடமைகள், செயல்பாடுகள் தொடர்பான தன்னிறைவுப் பட்டயத்தைக் கொண்டிருக்கும் வகையிலான ஏற்பாடுகள் இல்லாத நிலையை நீக்கும் வகையில், விரிவான சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்று எல்.பி.சிங் கமிட்டி பரிந்துரைத்தது.
சிபிஐயின் நம்பகத்தன்மையையும் பாரபட்சமற்றதன்மையையும் உறுதிசெய்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்யும் வகையில், ஒரு தனிச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று 2007-ன் நாடாளுமன்ற நிலைக்குழுவின் 19-வது அறிக்கை பரிந்துரைத்தது. “சட்டபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், உள்கட்டமைப்பு, நிதியாதாரங்கள் உள்ளிட்ட விஷயங்களில் சிபிஐயைப் பலப்படுத்துவது காலத்தின் தேவை” என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் (2008) 24-வது அறிக்கை ஏகமனதாகக் கருத்து தெரிவித்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பரிந்துரைகளில் ஒன்றுகூடச் செயல்படுத்தப்படவில்லை.
இதில் யாரைக் குற்றம்சாட்டுவது? அரசையா, சிபிஐயையா? போதுமான சட்டபூர்வப் பாதுகாப்போ, போதுமான மனித சக்தியோ, பொருளாதார வளமோ வழங்கப்படாத நிலையில், ஒரு நிறுவனத்தைக் குற்றம்சாட்டுவது நியாயமற்றது. சமீபகாலமாக சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்த சிலர், அதற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது உண்மைதான். ஆனால், அவர்கள் நியமிக்கப்பட்ட விதம் தவறானது; செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களின் செல்லப் பிள்ளைகள் அப்பதவியில் நியமிக்கப்பட்டனர்.
பிரச்சினை சிபிஐயிடம் அல்ல, அதன் கட்டமைப்பை வடிவமைக்கின்றவர்களிடம், அதன் அதிகாரங்களைத் தீர்மானிக்கின்றவர்களிடம்தான் இருக்கிறது. சிபிஐயின் செயல்பாட்டில் அரசு தலையிடுவதில்லை என்ற சூழல் இருந்தால், ஒரு முதல் தரமான விசாரணை அமைப்பாக சிபிஐ இருக்கும்!
- பிரகாஷ் சிங்,
எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் பொது இயக்குநர்.
சுயேச்சை அமைப்பின் கீழ் சிபிஐ வரவேண்டும்
சிபிஐ என்பது, இன்றைக்குப் பெரும்பாலும் அரசின் விருப்பங்களுக்கு ஏற்றவாறுதான் செயல்படுகிறது. முலாயம் சிங், மாயாவதி வழக்குகளே ஓர் உதாரணம். அரசு அவர்களுக்கு அழுத்தம் தர விரும்பும்போதெல்லாம், அவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை விசாரிக்க சிபிஐ பயன்படுத்தப்படுகிறது. அரசியல் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்போது, அவர்கள் மீதான வழக்குகள் முடங்கிவிடுகின்றன.
பிரதமர் மோடி, “உங்கள் நாவை அடக்குங்கள். உங்கள் மொத்த ஜாதகமும் என் கையில்” என்று காங்கிரஸுக்கு விடுத்த எச்சரிக்கையை இந்த அடிப்படையிலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அறிக்கையின் மூலம் மோடி என்ன சொல்லவருகிறார்? இன்றைய அரசு நீதித் துறைக்கும் அழுத்தம் கொடுக்கிறது.
கடந்த ஆண்டு, லாலு பிரசாத் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளும் இதே போன்ற கேள்விகளை எழுப்பின. குறிப்பாக, சோதனை நடத்தப்பட்ட நேரம், நடத்தப்பட்ட விதம் பற்றி. லாலு பிரசாத் மீதான வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒன்று. தனது எஜமானரின் அரசியல் விருப்பங்களுக்கேற்ப சிபிஐ நடந்துகொள்கிறதா என்பதை விவாதிக்க வேண்டும். லாலு வழக்கைப் பொறுத்தவரை, அவருடனான உறவை பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று மோடி அரசு விரும்பியது என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பல உதாரணங்கள் உண்டு.
ஏர் இந்தியா விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக பிரஃபுல் படேல் இருந்த காலத்தில் அந்தத் துறையில் ஊழல் நடந்ததாகக் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சொல்லிவருகிறோம். ஏர் இந்தியாவின் மேலாண்மை இயக்குநராக இருந்த ஜிதேந்தர் பார்கவா எழுதிய
‘தி டிஸ்சென்ட் ஆஃப் ஏர் இந்தியா’ எனும் நூலில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நடந்தது என்ன?
எங்கள் மனு ஆறு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதன் பின்னர், இது தொடர்பாக விசாரிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின் சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. ஆனால், இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் தருணம் குறித்து இந்த முறையும் கேள்விகள் எழுந்தன. எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லலாம். கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான எடியூரப்பா வழக்கைப் பார்க்கலாம். அரசின் சுரங்க ஒப்பந்தங்களைப் பெற்ற சுரங்க உரிமையாளர்கள், அவரது அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், சிபிஐ நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது. ஏன் சிபிஐ மேல்முறையீடு செய்யவில்லை?
அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து சிபிஐயை விடுவிப்பது தொடர்பாக ஊழலுக்கு எதிரான லோக்பால் இயக்கம் ஒரு எளிதான வாதத்தை முன்வைத்தது. சிபிஐ அதிகாரிகளைத் தன் விருப்பத்தின்பேரில் இடமாற்றல் செய்யும் அதிகாரம் அரசுக்கு இருந்தால், விசாரணை அமைப்பான சிபிஐக்குத் தன்னாட்சி இருக்காது. வழக்குகளைச் சுதந்திரமாக விசாரிக்கவும் முடியாது. மேலும், சிபிஐயில் அரசுக்கு வளைந்துகொடுக்கும் ஊழல் அதிகாரிகளும் உண்டு.
இந்தச் சூழலில், சுதந்திரமான அமைப்பின் கீழ் சிபிஐ கொண்டுவரப்பட வேண்டும். சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை ஆகிய மூன்று நிறுவனங்களும் அரசால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அரசின் அழுத்தம் காரணமாக அவை செயலற்ற தன்மைக்கு இட்டுச்செல்லப்படுகின்றன.
- பிரஷாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.
No comments:
Post a Comment