#உத்வேகம்
இவர் எட்டவா மாவட்ட துணை ஆட்சியர், சண்டவுலியில் தலைமை வளர்ச்சி அதிகாரியான பின் லலித்பூர், அம்பேத்கர் நகர், பலியா, கான்பூர் ஊரகம், பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றினார். பிறகு மாநிலக் கூடுதல் தேர்தல் அதிகாரி மற்றும் உபி மாநிலப் போக்குவரத்து கழகத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் பதவி வகித்தவர். தற்போது உபியின் மேற்கு பகுதி மாவட்ட காஸ்கன்ச் ஆட்சியராக இருக்கிறார்.
சிவகங்கையைச் சேர்ந்த நீதிபதி எஸ்.கற்பூர சுந்தர பாண்டியனின் மகன் விஜயேந்திர பாண்டியன். 9-ம் வகுப்புவரை படிப்பைக் கண்டாலே விஜயேந்திரனுக்கு வெறுப்பு. நெடுநெடுவென வளர்ந்ததால் கடைசி பெஞ்ச் வேறு.
அப்பாவுக்கு குளித்தலையில் மாற்றலானபோது விஜயேந்திரனின் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்ணுக்கு எந்தப் பள்ளியிலும் இடம் கிடைக்கவில்லை. ஒரு வழியாக திருச்சி நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனுமதி கிடைத்தது.
“எனக்குப் பள்ளியில் இடம் கிடைக்காததால் அப்பா சந்தித்த அவமானத்தை மன வேதனையுடன் என்னிடம் சொன்னார். அப்போதுதான் என்னுடைய தவறு எனக்கு முதல் முறையாக உறைத்தது. இனி என்னால் அப்பா தலை குனியக் கூடாது என வைராக்கியமாக முடிவெடுத்தேன்” என்கிறார் விஜயேந்திரன்.
படிப்பில் முழு கவனம் செலுத்தவே 10-ம் வகுப்பில் 403 மதிப்பெண்கள் கிடைத்தது. முதல் குரூப்பில் சேர வாய்ப்பிருந்தும், விருப்பப் பாடமாக மூன்றாவது குரூப்பை தேர்ந்தெடுத்தார். மூன்று பாடங்களில் சென்டம் பெற்று திருச்சி மாவட்டத்தின் முதல் மாணவரானார்.
“குளித்தலையிலிருந்து திருச்சிக்கு தினந்தோறும் 90 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது, படித்த பாடங்களை அசைபோடுவேன். அதுதான் படிப்பில் சாதிக்க உதவியது’’ என பெருமிதம் கொள்கிறார்.
நட்பால் அறிமுகமான லட்சியம்
பிறகு, புதுக்கோட்டையின் ஜே.ஜே.கல்லூரியில் பி.பி.ஏ சேர்ந்தார். இதை முடித்தவர் தன் குடும்ப வழக்கத்தால் எல்.எல்.பி பயில சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு கட்டத்தில் அரசு பணியில் சேர்ந்து சமூகத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் ஆசை வந்தது.
ஆனால் எப்படித் தயாராகுவது எனத் தெரியாத நிலையில் செந்தில் குமாரோடு (தற்போது அரசு நியமன ஐ.பி.எஸ். பெற்று பூக்கடை பகுதி துணை ஆணையராக உள்ளார்) நட்பு ஏற்பட்டது.
அவர் வழிகாட்டுதலில் எல்.எல்.பி.யுடன் சேர்த்து யூ.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி-க்கும் பயிற்சி பெற ஆரம்பித்தார் விஜயேந்திரன். வகுப்புத் தோழர்களின் வழிகாட்டுதலில் சென்னையிலேயே யு.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
முதல் முயற்சியிலேயே தேர்வில் வெல்ல வேண்டும் என்கிற கனவில் டெல்லி சென்று சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டார். ஆனால் டெல்லியில் தங்கிப் படிக்க அதிக பணம் செலவானதால் சென்னை திரும்பிவிட்டார்.
“எல்.எல்.பி. மூன்றாவது வருட இறுதித் தேர்வில் அரியர்ஸ் வைத்து யூ.பி.எஸ்.சி. முதல் முறையாக எழுதினேன். அதே நேரத்தில் மெயின்ஸ் எழுதும் முன்பே எல்.எல்.பி.யின் அரியர்ஸிலும் தேர்ச்சி பெற்றேன்.
மெயின்ஸில் உளவியல் மற்றும் புவியியல் விருப்பப் பாடமாக எடுத்தேன். ஆனால், நேர்முகத் தேர்வில் ஏழு மதிப்பெண்களில் தோல்வி ஏற்பட்டது. எந்தப் பணியும் கிடைக்காமல், இரண்டாவதாக முயற்சிக்க முடிவு செய்தேன்” என்கிறார்.
எல்.எல்.பி. முடித்தும் வழக்கறிஞராக பதிவு செய்தார். ஆனால் யு.பி.எஸ்.சி. பயிற்சியைத் தொடர பணம் இல்லை. தனியார் நிறுவனம் ஒன்றில் ஆளுமை பயிற்சியாளராக சேர்ந்தார். கிடைத்த சொற்பச் சம்பளத்தை சேமித்து மீண்டும் டெல்லிக்கு சென்றார்.
இரண்டாவது முயற்சியில் மெயின்ஸுக்கானப் பயிற்சியை அங்கு எடுத்தார். இதில் அவருக்கு ஐ.ஆர்.எஸ். கிடைத்து. இறுதியாக எடுத்த மூன்றாவது முயற்சியில் 67 ஆவது ரேங்குடன் விஜயேந்திரன் 2008-ல் ஐ.ஏ.எஸ். ஆனார்.
சட்டப்பிரிவில் யூ.பி.எஸ்.சி. எழுதாதது ஏன்?
யூ.பி.எஸ்.சி. எழுத நினைக்கும் பலருக்கு அதில் வெல்ல முடியுமா என்கிற பயம் இருக்கிறது. அச்சம் விடுத்து முழுமூச்சாக இறங்கி நம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்பது விஜயேந்திரனின் அனுபவப் பாடம். “சட்டப் பிரிவு பாடங்களிலும் யூ.பி.எஸ்.சி. எழுத வாய்ப்புகள் இருந்து.
ஆனால் நான் அதை தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் போட்டித் தேர்வில் வரலாறு, புவியியல், சமூகவியல், உளவியல் மற்றும் பொது நிர்வாகம் என பிரபலமான பாடங்களை எடுப்பதுதான் நல்லது. இவற்றுக்கான பயிற்சியும் புத்தகங்களும் கிடைப்பது சுலபம். ஆனால், சட்டம் போன்ற சிறப்புப் பாடங்களுக்கு அதன் பின்புலங்களை அறிந்திருப்பது அவசியம். எனினும், எனது எல்.எல்.பி. படிப்பும் அது தொடர்பான அனுபவங்களும் யூ.பி.எஸ்.சி.யின் நேர்முகத் தேர்வில் பதில் அளிக்க பெரிதும் கைகொடுத்தது” என்கிறார் விஜயேந்திரன்.
வெற்றி மந்திரம்
முதலாவதாகப் படிக்கும் நேரம் மிகவும் முக்கியம். விடியற்காலையில் படிக்க உட்கார்ந்தால் கடினமான பாடங்களையும் என்னால் சுலபமாக படிக்க முடியும். இதுபோல ஒவ்வொருவருக்கு ஒரு நேரம் சவுகரியமானதாக இருக்கும்.
பிரிலிம்ஸ் தேர்வுக்காக மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கேள்வி-பதிலை படித்திருப்பேன். மெயின்ஸ் கேள்விகளுக்கான பதில்களைப் பல நூல்களில் படித்துத் தொகுத்தேன். உதாரணமாக ஒரு நூலில் வரைபடம் நன்றாக இருக்கும் மற்றொன்றில் விளக்கம் சரியாக இருக்கும். இப்படி அனைத்தையும் தொகுத்து பதிலைத் தயார் செய்தேன்.
இந்தப் பயிற்சியில் முக்கியமாக நண்பர்களுடன் செய்த குழு கலந்துரையாடல் அதிகமாக உதவியது. எனக்கு அமைந்த நண்பர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது யூ.பி.எஸ்.சி. முடித்து பணியில் உள்ளனர். அமைந்தார்கள் என்பது மட்டுமல்லாமல் நான் லட்சியம்மிக்கவர்களோடு நட்பு வளர்த்தேன் எனவும் சொல்ல நினைக்கிறேன்.
- விஜயேந்திர பாண்டியனை, தொடர்பு கொள்ள : vijayias23@yahoo.co.in
Proud to have you as CTA
ReplyDeleteWhen worked as CTA in Tamilnadu, transfers and postings were given by him only to the influencial and recommended persons.. Bureaucracy backed by eliteness will result like this. No empathy on downtroden, physically challenged employees. Really an example of NOT BE LIKE HIM.
ReplyDelete