துயரங்களுக்கு இடையே ஐ.ஏ.எஸ். -- ஆர்.வினோத்பிரியா ஐ.ஏ.எஸ்



#உத்வேகம் 




புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்த அப்பாவை கவனித்துக்கொண்டே யூ.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாரானவர் ஆர்.வினோத்பிரியா. மனவுறுதிக்கு உதாரணமாக ஏழு முறை தேர்வெழுதி, கடைசி வாய்ப்பில் பாஸ் செய்தார். தற்போது, கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கிறார்.
அவருடைய அப்பா ராமய்யாவுக்குப் பூர்வீகம் திருநெல்வேலி. திண்டிவனத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைக்கவே மனைவி ராஜேஸ்வரி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அங்கே குடியேறினார். “பொது அறிவு வளர்க்க அப்பா எங்களுக்கு ‘காம்படிட்டிவ் சக்சஸ் ரிவ்யூ’ பத்திரிகையை வாங்கித் தருவார். அதைப் படிக்க ஆரம்பித்தேன். நான் பிளஸ் டூ படிக்கும்போது யூ.பி.எஸ்.சி. தேர்வில் ஏழாவது முயற்சியில் முதல் ரேங்க் பெற்று ஐ.எப்.எஸ். ஆன ஒருவரது நேர்காணலைப் படித்து ஈர்க்கப்பட்டேன்” என்கிறார் வினோத்பிரியா.
அதில் யூ.பி.எஸ்.சி. தேர்வு மிகவும் கடினமானது, இதற்காக கடுமையாகப் படிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார் அந்த சாதனையாளர். கடினமான பாடங்களைப் படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவது என்பது வினோத்பிரியாவுக்கு எப்போதுமே பிடித்த ஒன்று. அதே காரணத்துக்காக யூ.பி.எஸ்.சி. பக்கம் மனம் திரும்பியது.
பள்ளிப் படிப்பை அடுத்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் துறையில் பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி.-யை முடித்தார். அப்போது ஒரு நிகழ்ச்சிக்கு வந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.சி.-ன் உரைவீச்சு மீண்டும் வினோத்பிரியாவின் யூ.பி.எஸ்.சி. கனவை உயிர்ப்பித்தது.
2001-ல் முதன்முறையாக யூ.பி.எஸ்.சி எழுதியவரால் பிரிலிம்ஸில்கூடத் தேர்ச்சி பெற முடிய வில்லை. பிறகு, பல்கலைக்கழகத்தில் மூத்த ஆய்வாளர் பணி செய்து கொண்டே தொடர்ந்து முயற்சித்தார். ஏழு முறை யூ.பி.எஸ்.சி. எதிர் கொண்டதில் மூன்று முறை மட்டுமே அவர் பிரிலிம்ஸ் பாஸ் செய்துள்ளார். கடைசி முறையில் மெயின்ஸ் பாஸ் செய்து நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். இதற்காக, வினோத்பிரியா சந்தித்த துயரங்கள் ஏராளம்.

சகோதரன் இறப்பு, தந்தைக்குப் புற்றுநோய்


“அப்பா மட்டுமே சம்பாதிக்கும் நடுத்தரக் குடும்பச் சூழலில் யூ.பி.எஸ்.சி.க்குத் தயாராவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், கனவு கலைய மறுத்தது. முதல் முயற்சியின்போது எனது அண்ணன் சண்முகானாந்த் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். எங்கள் குடும்பம் நிலைகுலைந்தது. அப்போது நான் தமிழகத் தேர்வு பணி வாரியத்தின் குரூப்-1 தேர்வின் பிரிலிம்ஸ் பாஸ் செய்திருந்தேன். இதனால், யூ.பி.எஸ்.சி.யையும் என்னால் பாஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. 2004-ல் நான் 3 ஆவது முயற்சி செய்தபோது அப்பா புற்றுநோயால் அவதிப்பட்டார். என் தம்பியோ பி.டெக். படித்துக்கொண்டிருந்தான். ஒட்டுமொத்தக் குடும்பப் பொறுப்பையும் நானே சுமக்கும் சூழல் ஏற்பட்டது. அப்பாவுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து அவரை கவனித்துக்கொண்டே படிப்பைத் தொடர்ந்தேன். 

ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுக்கும் நிலை வந்தது. அப்போதும் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் அப்பாவோடு இருந்துகொண்டே யூ.பி.எஸ்.சி.க்குப் படித்தேன்” எனக் கண்கள் நிலைகுத்திய பார்வையுடன் சொல்கிறார் வினோத்பிரியா.

நண்பர்கள் செய்த உதவி


ஆசிரியர் மகள் என்பதால் பொதுவாக சக மாணவர்கள் வினோத்பிரியாவிடம் கலகலப்பாகப் பேச மாட்டார்கள். முதல் பெஞ்சில் உட்கார்ந்து படித்துவிட்டு அப்படியே வீட்டுக்குப் போய்விடுவார். பள்ளி வாழ்க்கை இப்படித்தான் நகர்ந்தது.
இந்த நிலை மாறியது முதுகலைப் பட்டம் படித்த காலத்தில்தான். தோழமையின் அருமையும் வலிமையும் இந்தப் பருவத்தில் வாய்க்கப்பெற்றார். அன்று நெருங்கிய நண்பரான டி.திருமுருகன் இன்று அவருடைய காதல் கணவர். அப்போது அவர் அளித்த உதவியும், ஊக்கத்தையும் இப்போதும் நினைத்துப் பூரிக்கிறார் வினோத்பிரியா.

பிற நண்பர்களுக்கும் யூ.பி.எஸ்.சி. பற்றி எடுத்துக் கூறி அவர்களையும் படிக்க ஊக்குவித்தார் திருமுருகன். அவருடைய உந்துதலால் வினோத்பிரியா மட்டுமின்றி பல நண்பர்கள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர். ஆனால், கைச்செலவுக்கே போதுமான பணம் இல்லாததால் தேவையான புத்தகங்களைக்கூட வாங்க முடியவில்லை. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழைக்கூட நண்பர்கள் படித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இரவலாக வாங்கிப் படிப்பார். அதே சூழலில் கஷ்டப்பட்டுப் பொது நிர்வாகப் பாடத்துக்கு மட்டும் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். சென்னை திரும்பியவர் அண்ணாநகரில் உள்ள தமிழக அரசு நடத்தும் யூ.பி.எஸ்.சி.க்கான இலவசப் பயிற்சி மையமான எஸ்.பி.ஐ.-யின் நுழைவுத் தேர்வில் தேர்வாகி இலவசப் பயிற்சி பெற்றார்.

தானே தயாரித்த ‘நோட்ஸ்’ அளித்த வெற்றி


ஆங்கிலத்தில் எழுதிய யூ.பி.எஸ்.சி. தேர்வுக்குப் புவியியலும் பொது நிர்வாகமும் விருப்பப் பாடமாக எடுத்தார். “ஆனால், குறிப்பிட்ட நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவில்லை. என்னுடைய நண்பர்களும் என்னைப் போலவே படிப்பவர்களிடம் வெவ்வேறு நூல்களை வாங்கிப் படித்தேன். பழைய வினாத்தாள்களையும் ரெஃபரன்ஸ் நூல்களையும் வைத்து நானே ‘நோட்ஸ்’ தயாரித்தேன்.
தோல்வியின்போது செய்த தவறுகளை சரிபார்த்து மறுமுறையில் இந்தக் கேள்வி வந்தால் எழுத புதிய நோட்ஸ் தயாரித்தேன்” என்கிறார் வினோத்பிரியா.
அதே நேரத்தில் வங்கித் தேர்வும் எழுதி வேலை கிடைத்தது. பல்லவன் கிராம வங்கி அதிகாரி ஆனார். அதன் பின்னர் சிண்டிகேட் வங்கியின் உதவி மேலாளராகவும் பணியாற்றினார். “2007-ல் ஆறாவது முறை தேர்வெழுதியபோது எனது தம்பி வேலைக்குப் போகவே எனது சுமை குறைந்தது” என்றவர், தன் கடைசி முயற்சியில் மெயின்ஸ் பாஸ் செய்த அனுபவத்தை விளக்கினார்.
திரைக்கதைகளையும் மிஞ்சும் அந்தச் சம்பவத்தில் மெயின்ஸ் முதல் தேர்வை சென்னையில் முடித்த அன்று காலை வினோத்பிரியாவின் தந்தை இறந்துவிட்டார். இதைக் கூறுவதற்காக அவருடைய தாய் கைபேசியில் அழைத்தபோது, விஷயத்தை ஊகித்தவர் கைபேசியை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்துவிட்டார். தேர்வு முடித்து திண்டிவனத்தில் தந்தையின் இறுதிச் சடங்கை முடித்து மறுநாள் காலை அவசரமாக சென்னைக்குத் திரும்பினார்.
அடுத்ததாக வந்த தேர்வுகளை எழுதியவர் கண்களில் நீர் பெருகி ஒடியபடி இருந்துள்ளது. இது அவருக்கு அருகில் அமர்ந்து தேர்வு எழுதியவர்களையும் சற்று சிரமப்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் 2010-வது பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான வினோத்பிரியா அந்த மாநில வருவாய்த் துறையின் உதவி ஆணையாளர், கோலார் மாவட்டப் பஞ்சாயத்தின் முதன்மை அதிகாரி, கர்நாடக நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறப்புத் திட்டத்தின் துணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்குப் பின் தற்போது வடமேற்கு மாநிலப் போக்குவரத்துத் துறையின் நிர்வாக இயக்குநராக ஹூப்ளியில் பணியாற்றிவருகிறார்.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN