அ
டுத்த ஆண்டு ஜனவரி முதல் ‘ஹால்மார்க்கிங்’ செய்யப்பட்ட தங்கம், தங்க நகைகள் மட்டும்தான் விற்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. நகைக் கடைக்காரர்களோ இது அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடாது என்கின்றனர்.
நகைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தங்கம் எந்த அளவுக்குத் தூய்மையானது என்று இந்தியத் தர நிர்ணயக் கழகத்தின் (பி.ஐ.எஸ்.) வரையறைப்படி சோதித்துச் சான்றுரைப்பதுதான் ஹால்மார்க்கிங். இது நகை வாங்குவோரின் நலனைப் பாதுகாக்கும். தங்கத்தில் செய்யப்படும் நகைகளும் பொருட்களும் ஹால்மார்க்கிங் மையத்தில் உரிய வகையில் சோதிக்கப்பட்டு, தேச - சர்வதேசத் தரத்துக்கு ஏற்ப அதன் தூய்மையும் நுண்மையும் இருப்பது உறுதிசெய்யப்பட்டு சான்றுரைக்கப்படும்.
2018 ஜனவரியிலிருந்து எல்லா நகைகளும் தங்கத்தினாலான பொருட்களும் ஹால்மார்க்கிங்குடன் விற்பதற்குப் போதுமான அடித்தளக் கட்டமைப்புகள் இல்லை என்று தங்க நகைக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
‘உலகத் தர நாள்’ தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ஹால்மார்க்கிங் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். எத்தனை காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இனி நகை விற்போர் தெரிவிக்க வேண்டும் என்றார். 14, 18, 22 காரட் தங்கம் மட்டுமே இதன் அடிப்படையில் சான்றுரைத்து விற்கப்படும் என்றார். இந்தத் திட்டம் 2018 ஜனவரி முதல் சுமுகமாக அமலுக்கு வர இந்தியத் தர நிர்ணயக் கழகம் (பி.ஐ.எஸ்.) உரிய ஒழுங்காற்று நடைமுறைகளை அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் பாஸ்வான் கோரியிருக்கிறார். இந்தப் பட்டியலில் 20 காரட், 24 காரட்டும் சேர்க்கப்பட வேண்டும் இவ்விரண்டும் நுகர்வோரால் அதிகம் வாங்கப்படுகின்றன என்று அனைத்திந்திய நவரத்தினக் கற்கள், தங்க நகை வர்த்தக சம்மேளனத்தின் வட இந்திய மண்டலத் தலைவர் விஜய் கன்னா வலியுறுத்துகிறார்.
முறையான வர்த்தகத்துக்கு மாறுதல்
இந்தியாவில் ஆண்டுதோறும் 600 டன்கள் முதல் 700 டன்கள் வரையில் தங்கம் தேவைப்படுகிறது. இதில் 500 டன்கள் நகை செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியவை காசுகளாகவும் தங்கக் கட்டிகளாகவும் (பிஸ்கட்) இதர பொருட்களாகவும் மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. சில்லறை தங்க விற்பனையில் 20% மட்டுமே முறையான வர்த்தக வட்டத்துக்குள் வருகிறது. எனவே, ஹால்மார்க்கிங் நடைமுறையில் அதிக நகைகள் வராது என்று இடைத்தரகர் வட்டாரத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
ஆனால் இந்திய தங்கம் - வெள்ளி, நகைகள் விற்பனையாளர் சங்க தேசியச் செயலர் சுரேந்திர மேத்தாவோ, “கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, பெரும்பாலான தங்கம் - வெள்ளி நகைகள் விற்பனை முறையான வர்த்தக நடவடிக்கைகளின் கீழ் வந்துவிட்டது என்கிறார். பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னதாக வெறும் 40% மட்டுமே முறையான நடைமுறைகளின் கீழ் விற்கப்பட்டது. இப்போது அதன் அளவு 70% ஆக உயர்ந்துவிட்டது; வியாபாரிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் பணம் கொடுத்து வாங்குவது கிட்டத்தட்ட நின்றுவிட்டது. நுகர்வோரிடமிருந்துதான் பணம் பெறுகிறோம்.. அதுவும் கிராமங்களில்” என்றும் அவர் கூறுகிறார்.
ஹால்மார்க்கிங் செய்த நகைகளை மட்டும்தான் விற்க வேண்டும் என்பதால், அதற்கான வசதிகள் குறைவாக இருக்கும் ஊரகப் பகுதிகளிலிருந்து வியாபாரம் நகரங்களுக்கு மாறுகிறது. இப்போது விழிப்புணர்வுள்ள நுகர்வோர்கள் தரச்சான்றுரை பெற்ற நகைகளைத்தான் கேட்டு வாங்குகின்றனர் என்கிறார் மேத்தா. ஜனவரி முதல் ஹால்மார்க் நகைகளைத்தான் விற்க வேண்டும் என்றால், அத்தகைய மையங்கள் எண்ணிக்கை 1,200 முதல் 1,500 வரையில் தேவை என்கிறார்.
மையங்களுக்கு முழு வேலையில்லை
மேத்தாவின் புகாரை ஹால்மார்க்கிங் மையங்களின் இந்திய சங்கத் தலைவர் ஹர்ஷத் அஜ்மீரா மறுக்கிறார். “இப்போதுள்ள மையங்களின் நிறுவுதிறனிலேயே பாதிக்கும் குறைவாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. 2015-16 நிதியாண்டில் 3.5 கோடி நகைகளை ஹால்மார்க் முத்திரையிட்டு வழங்கினோம்.
2016-17-ல் 3.16 கோடி நகைகளை முத்திரையிட்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு 221 நகைகள் என்று 475 மையங்களில் சான்றுரைக்கிறோம். ஆண்டுக்கு 300 நாட்கள் வேலைசெய்கிறோம். ஆனால், எங்களால் தினந்தோறும் 2,000 நகைகளைச் சோதித்து சான்றுரைக்க முடியும். சில பகுதிகளில்தான் ஹால்மார்க்கிங் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 6 அல்லது 7 மையங்களில்தான் தங்க நகைகள் உற்பத்தியாகின்றன. இந்த இடங்களில் ஹால்மார்க் செய்துதர போதிய வசதிகள் இருக்கின்றன என்கிறார்.
ஹால்மார்க்கிங் கட்டாயம் என்பதை ஜனவரி மாதத்திலிருந்தே வலியுறுத்தாமல், படிப்படியாக அமல்செய்வது நல்லது என்றே அஜ்மீராவும் மேத்தாவும் கருதுகின்றனர். நகைக் கடைக்காரர்கள் கையிருப்பில் உள்ளவற்றுக்கு முதலில் ஹால்மார்க் முத்திரை பெற மூன்று மாத அவகாசம் தரப்பட வேண்டும் என்று மேத்தா கோருகிறார்.
ஹால்மார்க் முத்திரையை மூன்றாவது முகமை பதிப்பதற்குப் பதில், அந்தந்த நிறுவனங்களே சுயமாகச் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்கிறார் மேத்தா.
நகையை விற்பவர்களே சுயமாகச் சான்றுரைத்துக்கொள்வது கூடாது, அதை அரசின் மேற்பார்வையில் மூன்றாவது நிறுவனம்தான் செய்ய வேண்டும் என்று அஜ்மீரா வலியுறுத்துகிறார். தங்க நகைகள் தரத்துடன் இருப்பதும், அந்த வியாபாரம் முழுவதும் அரசின் வரிவிதிப்பு வட்டத்துக்குள் வருவதும் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகுந்த நன்மையைத் தரும்.
தமிழில்: ஜூரி
No comments:
Post a Comment