#உத்வேகம்
கிராமத்துப் பள்ளியின் மரத்தடி வகுப்புகளில் பயின்ற முனைவர். ஆர்.ஷக்கிரா பேகம், யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதி ஐ.எஃப்.எஸ். (Indian Forest Service)’ எனும் இந்திய வனப்பணி பெற்றுள்ளார். குஜராத் மாநிலப் பிரிவின் 2013-ம் ஆண்டு பேட் அதிகாரியான இவர், கிர் தேசிய வன உயிரியல் பூங்கா மற்றும் சரணாலயத்தின் துணைப் பாதுகாப்பு வன அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
முன்னாள் ராணுவ வீரரின் மகளான ஷக்கிரா, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்காவின் தொண்டமான்துறை கிராமத்தைச் சேர்ந்தவர். பல தடங்கல்களைக் கடந்து பள்ளிப் படிப்பை முடித்த இவர் புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின், மரபியல் பிரிவில் பட்டமேற்படிப்பு முடித்தார். இதே துறையில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய வேளாண்மை கவுன்சிலின் தகுதித் தேர்வு எழுதி வேளாண் விஞ்ஞானி ஆனார்.
2011-ல் முதல் முறை யூ.பி.எஸ்.சி.யின் குடிமைப் பணி தேர்வு எழுதியபோது நேர்முகத் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டது. 2012-ல் இந்திய வனப் பணிக்கான தேர்வு எழுதி வெற்றி கிடைத்தது. முதல்நிலைத் தேர்வு யூ.பி.எஸ்.சி. எழுதும் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால், ஐ.எஃப்.எஸ். ஆக விரும்புபவர்கள் இரண்டாம்நிலை தேர்வைத் தனியாக எழுத வேண்டும். இதன் வெற்றிக்குப் பின் அதற்கான நேர்முகத் தேர்வையும் எதிர்கொள்ள வேண்டும்.
“பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த நான் திடீரென ஆங்கிலத்துக்கு மாறியதும் தடுமாறினேன். பட்டப் படிப்பின் இறுதி ஆண்டில் அடுத்து என்ன செய்யப் போகிறாய் என என்னிடம் கேட்கப்பட்டபோது, ‘தாவர அறிவியலில் பட்டமேற்படிப்பிற்காகத் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதப் போகிறேன்’ என நான் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். ஆனால், இன்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, ஐ.எஃப்.எஸ். ஆன பிறகு எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்” என்கிறார் ஷக்கிரா பேகம்.
ஐ.எஃப்.எஸ்.ஸில் குறைவான பெண்கள்
பிளஸ் டூ முடித்தவுடனே திருமணம் என்கிற சூழலில் இருந்து ஷகிராவைக் காப்பாற்றியது அவருடைய மூத்த சகோதரி பிந்தியாதான். அவருடைய ஊக்கத்தாலும் உதவியானாலும்தான் சவால் நிறைந்த துறைகளில் ஒன்றான இந்திய வனப்பணியில் அவர் இடம் பிடித்திருக்கிறார். இந்திய வனப்பணியில் பெண்கள் மிகவும் குறைவு. 2013-ல்தான் ஷக்கிரா உட்பட 26 பெண்கள் இந்திய வனப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், கடந்த இரண்டாண்டுகளாக அதன் எண்ணிக்கை மீண்டும் குறைந்து 2014-ல் 9, 2015-ல் வெறும் 3 என்றாகிவிட்டது. தற்போது குஜராத் மாநிலப் பிரிவில் பணியாற்றும் பெண் ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் 8 பேர் மட்டுமே.
“கல்லூரி நாட்கள் முதல் ஐ.எஃப்.எஸ். பயிற்சியின்போது வரை 100, 200, 400 மற்றும் மாரத்தான் ஓட்டங்களில் பல மெடல்கள் வென்றிருக்கிறேன். ஆனாலும் நான் மிகவும் ஒல்லியாக இருப்பதால் 2011-ல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மதிப்பெண் குறைந்தது. அதிலும் முனைவர் பட்டம் பெற்ற நான் ஐ.எஃப்.எஸ். நழுவவிடக் கூடாது என்கிற விஷயம் கவுரவப் பிரச்சனையாக ஒரு கட்டத்தில் மாறியது” என்கிறார் ஷக்கிரா.
சிங்கங்களுக்கு இடையே பணி
கிர் தேசிய வன உயிரியல் சரணாலயத்தின் சிறுத்தைகள், சிங்கங்களின் நடமாட்டங்களுக்கு இடையேதான் ஷக்கிராவின் அரசுக் குடியிருப்பு அமைந்துள்ளது. தினந்தோறும் 523 சிங்கங்களின் கர்ஜனைகளை இவர் கேட்டுக்கொண்டே இருக்கிறார். “எங்கள் விலங்கியல் பூங்காவில் சிங்கம், சிறுத்தை, புலி, எறும்புதின்னி, புள்ளிமான், கடமான், நான்கு கொம்பு கலைமான், கேழற்பன்றி, முள்ளம்பன்றி, நீலப்பசு, தேன்வளைக்கரடி, புனுகுப்பூனை, காட்டுப்பூனை ஆகிய விலங்குகள் உள்ளன.
இவற்றின் உடல் நலம் குன்றுதல், விபத்துக்குள்ளாதல் உட்படப் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் எங்கள் பொறுப்பு. இதில், சிங்கம், புலி, சிறுத்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் அவற்றைக் கூண்டில் பிடித்துச் சிகிச்சை அளிப்பது மிகவும் சிலிர்ப்பான அனுபவம். இந்தச் சமயங்களில் காட்டு விலங்குகளின் குணங்களைப் புரிந்து செயல்படுவது மிகவும் அவசியம். ஆண்களை விடப் பெண்களால் இதைப் புரிந்து கொண்டு சிறப்பாகச் செய்ய முடியும் என்பது எனது கருத்து” எனக் கூறும் டாக்டர். ஷகிரா பேகம், பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் பெண் ஐ.எஃப்.எஸ்.
விலங்குகள் வாழ்வியல் குறித்த பயிற்சி ஐ.எஃப்.எஸ். அதிகாரிகளுக்கு அளிக்கப்படுவதால் அச்சம் விலகி விலங்குகள் மீது நேசம் பிறக்கிறது என்கிறார் ஷக்கிரா.
No comments:
Post a Comment