General Studies -III
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சூழலியல் இயக்கங்கள் தோன்றியபோது, வனாந்திரம் போற்றலும் வனவிலங்குகள் பாதுகாப்பும் முக்கியத்துவம் பெற்றன. நாளடைவில் சூழலியல் என்பது மக்களையும் மக்கள் வாழும் சமூகங்களையும் அவற்றின் பிரச்சினைகளையும் உள்ளடக்கியது என்கிற புரிந்துகொள்ளல்கள் எழுந்தன. கடந்த 1980களில் சுற்றுச்சூழலுக்காகப் போராடும் இயக்கங் களில் சூழல் நீதி குறித்த சில கேள்விகள் எழுந்தன.
முதல் கேள்வி, சர்வதேச நடைமுறைகள் பற்றியது. அதாவது, சுற்றுச்சூழல் சுமைகள் வடக்கு நாடுகளில் வாழும் பணக்கார, வெள்ளையின மக்களைவிட, தெற்கு நாடுகளில் வாழும் ஏழை, நிறம்கொண்ட மக்களையே அதிகம் அழுத்துவது ஏன் எனும் கேள்வி. உலக அளவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் பாதிக்கப்படும் மக்கள் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும்தான் அதிகம் வாழ்கிறார்கள். பணக்கார வடக்கு நாடுகள் ஏழ்மையில் உழலும் தெற்கு நாடுகளின் தலைகளில் தங்கள் கழிவுகளைக் கொட்டு வதற்கு ஹைட்டி நாடு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு.
அமெரிக்க மாநிலமான பென்சில் வேனியாவின் தலைநகரம் ஃபிலடெல்ஃபியா நகரில் ஆபத்தான கழிவுகளை எரிக்கும் நிலையம் ஒன்று உள்ளது. அதன் சாம்பல் கழிவுகளை ஒரு தனியார் நிறுவனத்திடம் கையளித்து எங்காவது கொண்டுபோய்க் கொட்டிவிடக் கேட்டுக்கொண்டார்கள். கேரளாவிலிருந்து கோழிக்கழிவுகளையும் குப்பைகளையும் தமிழக எல்லைப் பகுதிகளில் கொட்டிச் செல்வதுபோல, அந்த நிறுவனம் ஹைட்டி நாட்டுக் கடற்கரையில் கொண்டு கொட்டியது. பத்தாண்டுகால கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அது அங்கிருந்து அள்ளிச்செல்லப்பட்டது. அதற்கிடையே எத்தனை பேருக்கு என்னென்ன பாதிப்புகளை அது உருவாக்கியது என்பது யாருக்கும் தெரியாது. ஆபத்தான கழிவுகளை ஏழை நாடுகளில் கொட்டுவது இன்னும் தொடர்கிறது.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவுகின்றன. கச்சாப் பொருட்களையும் உதிரிப் பாகங்களையும் கொண்டுவந்து ‘மக்கிலடோரா’ என்றழைக்கப்படும் இந்த தொழிற்சாலைகளில் வைத்து உற்பத்தி செய்துவிட்டு, ஆபத்தான கழிவுகளை அருகேயுள்ள ஓடைகளில், ஆறுகளில் கலக்க விட்டுவிடுகிறார்கள். இவற்றிலிருந்து குடிதண்ணீர் பெறுகிற மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் பெரும் வேதனை அடைகிறார்கள்.
இரண்டாவது கேள்வி தெற்கு நாடுகளுக்குள் நடக்கும் நடைமுறைகள் பற்றியது. அதாவது மாசுபடுத்தும் தொழிற்சாலைகளும் மின் நிலையங்களும் கழிவுகள் கொட்டும் இடங்களும் ஏழைகள், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இடம்பெறுவது ஏன் எனும் கேள்வி. இந்தியாவை எடுத்துக்கொண்டால் மாபெரும் அணைத் திட்டங்களையும் கனிமச் சுரங்கங்களையும் எதிர்க்கும் ஆதிவாசிகளுக்கும் கடலோர அணுமின் நிலையங்களை, அழிவுத்திட்டங்களை எதிர்க்கும் மீனவ மக்களுக்கும் பெரும் பாதிப்புகள் வந்துசேருகின்றன. என்டோசல்ஃபான், டி.டி.ற்றி போன்ற கொடிய வேதியல் பொருட்கள் கொட்டப்பட்டு கேரளாவின் காசர்கோடு மாவட்ட மக்களும் பஞ்சாப் மாநில மக்களும் படும் துயரங்கள் சொல்லி மாளாதவை. ஆபத்தான மீத்தைல் ஐசோசயனேட் வாயுவை வெளியிட்டு போபால் நகரில் யூனியன் கார்பைட் தொழிற்சாலை ஏற்படுத்திய விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளும் இயலாதவர்களும்தான்.
அமெரிக்காவில் பேட்டன் ரூஜ் நகரம் முதல் நியூ ஆர்லியன்ஸ் நகரம் வரையிலான 85 மைல் நீள மிசிசிப்பி ஆற்றங்கரையில் ஏறத்தாழ 125 பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றின் கழிவுகளால் ஏழைக் கறுப்பின மக்கள் கடும் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அதேபோல நவாஹோ இந்தியர்கள் உள்ளிட்ட பல செவ்விந்திய மக்கள் அமெரிக்க அரசின் யுரேனியச் சுரங்கங்களால் பெரும் பாதிப்படைகின்றனர். அமெரிக்கப் பண்ணைகளில் வேலை செய்யும் புலம்பெயர் லத்தினோ மக்கள் ஏராளமான கொடிய பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படுகின்றனர்.
உலகெங்குமுள்ள நிறம்கொண்ட மக்கள் (people of color) உலகின் மாசுகளையும் கதிர்வீச்சுகளையும் அழிவுகளையும் அதிகமாகச் சுமக்கும்படிச் செய்திருக்கிறோமே, அதைத்தான் சூழலியல் இனவெறி (environmental racism) என்கிறோம். இந்தச் சூழலியல் வேற்றுப்படுத்துதல் (environmental discrimination) சுற்றுச்சூழல் கொள்கைகளை வகுப்பதிலும் சூழல் நியமங்களை, சட்டங்களை அமுல்படுத்துவதிலும் பெரிதாகப் பிரதிபலிக்கிறது. இந்த இனவெறிக் கொள்கைகளையும் திட்டங்களையும் அணுகுமுறையையும் எதிர்க்கும் சக்தி பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு இருப்பதில்லை.
உலகளவில் சூழலியல் இனவெறி ஆட்டிப்படைக்கும்போது, உள்நாட்டு அளவில் சூழலியல் பாசிசம் (environmental Fascism) சதிராட்டம் போடுகிறது. இயற்கையையும் ஏழைகளையும் கொல்லும் அரசியல்தான் சூழலியல் பாசிசம் என்று டாம் ரீகன் கூறுகிறார். இந்தச் சூழலியல் பாசிசமும் சக்தியற்றோரைத்தான் சாடுகிறது. குறிப்பாக ஏழைகள், சிறுபான்மையினர், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சூழல் நீதிக்கான போராட்டங்களில் இவர்களின் பங்களிப்பு அண்மைக் காலத்தில் அதிகரித்திருந்தாலும் அது இன்னும் வலுவாக உருவெடுக்க வேண்டும்.
சூழல் நீதிக்காகச் சிறுபான்மையினர், தலித் மக்கள் வலுவாகப் போராடாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது ஏழ்மை. நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடி நீதி பெறுவது மிகவும் செலவீனம் கொண்ட ஒரு விடயமாக மாறியிருக்கும் சூழலில் எல்லோராலும் அங்கே போய் நீதி பெற முடியாது. ஆளும் வர்க்கத்தின் அசுரபலத்தை எதிர்த்துப் போராடி நியாயம் பெற முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தாராளமாகப் பணம் செலவு செய்து, எல்லாத் தரப்பினருக்கும் லஞ்சம் கொடுத்து, ஏராளமான விளம்பரம் செய்து, அனைத்து மட்டங்களிலும் ஊடுருவித் தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ளும்போது, ஏழை மக்கள் அவர்களிடம் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அரசியல் சமூகமும் ஒரே உலகளாவிய வளர்ச்சி சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு இயங்கும்போது, சூழல் நீதிக்கு எந்த மரியாதையும் இங்கே கிடைப்பதில்லை.
சாதி, மத, இன, தேசிய, வகுப்பு, வருமான, பாலியல், வயது பேதங்கள் ஏதுமின்றி அனைத்துத்தரப்பு மக்களும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் பெற்றிருக்க வேண்டும் என்று வாதிடுவது, போராடுவது சூழல் நீதி (environmental justice) என்றறியப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வேறுபாடுகள் எதையும் பொருட்படுத்தாது அனைவரும் கண்ணியமாக நடத்தப்படுவதும் வளர்ச்சித் திட்டங்கள், சுற்றுச்சூழல் சட்டங்கள், கொள்கைகள் வகுப்பதில், அமுல்படுத்துவதில் அனைவருக்கும் அர்த்தமுள்ள பங்கேற்புக்கு வழிவகை செய்வதும்தான் சூழல் நீதி. சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான சுற்றுச்சூழல்தான் சுகாதாரமான வாழ்க்கைக்கு அடிக்கல்லாக அமைகின்றன. நாம் அனைவரும் வாழும், படிக்கும், வேலை செய்யும் சூழலால் நமது உடல்நலம், மனநலம், ஆன்மிக நலம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் சூழல் நீதியின் அடிப்படை.
சூழல் நீதியும் சமூக நீதியும் இரண்டறப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அனைத்துத் தரப்பினருக்குமான பாதுகாப்பு, வேற்றுப்படுத்துதலுக்கு எதிரான நிலைப்பாடு, இனவெறிக்கு எதிரான அணுகுமுறை, பாசிசத்துக்கு அடிபணியாமை போன்ற ஒத்த நோக்கங்கள் இரண்டுக்கும் பொதுவாய் அமைகின்றன. சூழலியல் சமத்துவம் நோக்கிய நமது பயணம் இன்னும் வீரியமாகத் தொடர வேண்டும்.
No comments:
Post a Comment