பி.ஏ.கிருஷ்ணன்
ஜவகர்லால் நேரு சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் தி போர்மெண்ட் என்ற பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுக்கும்போது சொன்னார்: “எங்களுக்கு (புரட்சி நடந்த காலகட்டத்தில்) அக்டோபர் புரட்சிபற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் மார்க்சிய சோஷலிசத்தின் தாக்கத்தால் அது எழுந்தது என்றும் லெனினின் தலைமையில் அது நடந்தது என்றும் தெரியும். மார்க்சிசம் என்றால் என்னவென்று தெரியாது; ஆனால் எங்கள் ஆதரவு லெனினுக்கும் (அவரோடு போராடிய) மற்றவர்களுக்கும்தான்.”
ரஷ்யப் புரட்சி யுகப் புரட்சிதான் என்பதில் ஏகாதிபத்தியவாதிகளுக்கே அந்தச் சமயத்தில் ஐயம் இல்லை. அவர்களை அதன் எளிதான வெற்றி குலை நடுங்கவைத்தது. உலகையே அது மாற்றிப் போட்டுவிடக்கூடும் என்று அஞ்ச வைத்தது. 1918இல் வந்த மாண்டேகு செம்ஸ்போர்ட் அறிக்கை கூறியது; “ரஷ்யாவில் நடந்த புரட்சி சர்வாதிகாரத்தின் மீதான வெற்றி என்று இந்தியாவில் நம்பப்படுகிறது. இந்தியாவின் அரசியல் ஆர்வத்திற்கு அது ஊக்கம் கொடுத்திருக்கிறது.”
நடந்து நூறு ஆண்டுகள் ஆன பின்பும் பழைய ஏகாதிபத்தியவாதிகளும் புது ஏகாதிபத்தியவாதிகளும் அதன்மீது கொண்டிருக்கும் கசப்பு அப்படியே மாறாமல் இருக்கிறது. ரஷ்யப் புரட்சியை மேற்கத்தியக் கண்ணோடு நாம் பார்க்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. நமது பார்வை நம் பார்வையாக இருக்க வேண்டும். நமது தேசிய விடுதலைக்கு அது அளித்த ஊக்கத்தை நாம் இன்று நினைவு கூர வேண்டும். அன்று விடுதலைக் காகப் போராடியவர்கள் அக்டோபர் புரட்சியை வேறுவிதமாகப் பார்த் தார்கள். உலகெங்கும் மக்கள் விடுதலை பெறுவதற்காக எடுக்கப்பட்ட முதல் அடி அது என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.
பாரதி பார்த்த புரட்சி
உலக அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாரதி, 1905ஆம் ஆண்டு நடந்த புரட்சியைப் பற்றியே கட்டுரைகள் எழுதியிருக்கிறான். இந்தப் புரட்சி ஜாரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக எழுந்தது. ஆனால் எடுத்து நடத்த சரியான தலைவர்கள் இல்லாததால் எளிதாக ஒடுக்கப்பட்டது. இந்தப் புரட்சியைப் பற்றி எழுதிய பாரதி, “ருஷ்ய ஜனங்களாகிய ஆடுகள்மீது அரசேற்றும் கடுவாய் அரசனும் அவனது ஓநாய் மந்திரிகளும் நெடுங்காலமாய்த் தரித்திருக்க மாட்டார்கள். இவர்கள் இறுதிக்காலம் வெகுசமீபமாக நெருங்கிவிட்டதென்பதற்குத் தெளிவான பல சின்னங்கள் தென்படுகின்றன,” என்று சொல்கிறான். “சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள்மீது ஈசன் பேரருள் செலுத்துவானாக,” என்று அவன் வாழ்த்துகிறான்.
பாரதியின் வாழ்த்து புரட்சியின்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது.
ட்ராட்ஸ்கி தனது லெனின் புத்தகத்தில் சொல்கிறார்:
“விளாடிமிர் இலிச் மிகவும் சோர்வாக இருந்தார். சிரித்துக் கொண்டே அவர் சொன்னார், ‘தடைசெய்யப்பட்ட, எங்கு சென்றாலும் விரட்டப்பட்ட நிலையிலிருந்து அதிகாரத்தை அடைவது மிகவும் கரடுமுரடானது.’ ‘தலை சுற்றுகிறது’ என்று ஜெர்மன் மொழியில் சொல்லிக் கொண்டு தனது முகத்திற்கு முன்னால் சிலுவைச் சின்னம் இட்டுக்கொண்டார்.”
இல்லாத ஈசனே தனக்கு அருள் புரிந்திருக்கிறான் என்று லெனினே ஒரு தருணத்தில் நினைத்திருக்கிறார். நம் பாரதியின் வாழ்த்துத்தான் பலித்திருக்க வேண்டும்!
கெரன்ட்ஸ்கியின் பிப்ரவரி புரட்சியைப் பற்றியும் எழுதிய பாரதி, “பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது. மனிதஜாதி முழுமைக்கும் விடுதலை உண்டாகப் போகிறது,” என்று எழுதினான். பின்னர் ‘வரப்போகும் யுகம்’ (The Coming Age) என்ற தலைப்பில் அவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில், “சோஷலிசம் என்று மேலைநாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்கு தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. மேலைநாட்டிற்கும் சரி கீழைநாட்டிற்கும் சரி, கௌரவமான வாழ்க்கை நடத்துவதற்கு ஒரே ஒரு மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொதுவுடைமையாக்கி அதில் சக தொழிலாளிகளாகவும் கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்கமாகும்” (தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பு).
யுகப் புரட்சி என்று கூறிய பாரதி, லெனினைப் பற்றியும் ‘காலைப் பொழுது’ பாடலில் எழுதியிருக்கிறான் என்று ரகுநாதன் கூறுகிறார்:
“கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்,
ஏழுநாள் முன்னே இறைமகுடம் தான்புனைந்தான்
வாழியவன்எங்கள் வருத்தமெலாம் போக்கிவிட்டான்
சோற்றுக்குப் பஞ்சமில்லை: போரில்லை; துன்பமில்லை;
போற்றற்குரியான் புதுமன்னன் காணீரோ,”
என்ற வரிகள் லெனினைக் குறிக்கின்றன என்று அவர் எழுதுகிறார்.
29 நவம்பர் 1917இல் எழுதிய தனது ‘செல்வம்’ என்ற கட்டுரையில், “ஏற்கெனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின், ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடைமையாகி விட்டது,” என்று எழுதிய பாரதி அதே கட்டுரையில் ‘கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது,’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் ‘ஸோஷலிஸ்ட்’ ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்துபோய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் ‘கூட்டு வாழ்க்கை’
குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்தில் ருஷ்யாவின்மீது பாய்வார்கள். அங்கு உடைமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த வல்லரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டு,” என்கிறார். உண்மையிலேயே அவ்வாறுதான் நடந்தது. 1917லேயே துவங்கிய உள்நாட்டுப் போர் 1922இல்தான் போல்ஷிவிக்குகளின் வெற்றியோடு முடிவடைந்தது. இதே நாடகம்தான் சோவியத் ஒன்றியம் தகர்ந்தபோது அரங்கேற்றப் பட்டது.
அன்னிபெசன்ட்- -& தாகூர்- & பாலர் -& திலகர்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற பல தலைவர்கள் ரஷ்யப் புரட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்று நம்பினார்கள்.
1917 டிசம்பரில் நடந்த கல்கத்தா காங்கிரஸில் அன்னிபெசன்ட் அம்மையார் இமாலயத்திற்கு மறுபுறம் சீனாவில் 1911இல் நடந்த புரட்சியையும் ரஷ்யப் புரட்சியையும் குறிப்பிட்டுப் பேசினார். 1905க்கு முன்னால் இந்தியர்கள் வெள்ளை அரசாங்கத்தை வேறுவிதமாகப் பார்த் திருக்கலாம். ஆனால் இந்தியர்கள் சுய ஆட்சி பெறும்வரை தங்களது அண்டை நாட்டாரைப் பொறாமையோடுதான் பார்ப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
ரவீந்திரநாத் தாகூர் மாடர்ன் ரிவ்யூவில் எழுதுகையில் இது மாற்றத்தின் யுகம் என்றார். ரஷ்யப் புரட்சியைப் பற்றி அதிகம் தகவல்கள் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அங்கு நடந்த போராட்டம் மனிதனின் தளராத ஆன்மா, அறவுணர்வற்ற செல்வக் குவிப்பிற்கு எதிராகக் கொடுத்திருக்கும் குரலா என்பதும் சரியாகத் தெரிய வில்லை என்றார். ‘ரஷ்யா தோற்காது. அறங்களின் கொடியைக் கையில் பிடித்துக்கொண்டு அது தோற்றாலும், அந்தத் தோல்வி காலையில் தெரியும் நட்சத்திரம்போல மறைந்து புதுயுகத்தின் உதயத்தை அறிவிக்கும்,’ என்றும் அவர் சொன்னார்.
1930இல் ரஷ்யாவிற்குச் சென்ற தனது அனுபவத்தை ‘ரஷ்யாவிலிருந்து எழுதிய கடிதங்கள்,’ என்ற புத்தகமாக எழுதினார். அதில் ரஷ்யாவின் வியக்கத்தக்க படிப்பறிவு முன்னேற்றத்தைக் குறிப்பிட்டு ஏகாதிபத்தியம் இந்தியாவில் கல்வியை எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதையும் கூறியிருந்தார். ஏழ்மையை ஒழிக்கவும் பொருளா தார முன்னேற்றம் அடையவும் ரஷ்யா உண்மையாக உழைப்பதைப் பற்றிக் கூறிய அவர், மனிதகுலத்தின் முன்னேற்றத்தைத் தங்கள் முன்னேற்றத்திற்கும் முன்னால் வைக்கும் இனம் என்றும் ரஷ்ய மக்களைப் பாராட்டினார். புத்தகம் வெள்ளை அரசால் 1934ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
பிபின் சந்திர பாலர் இந்தியத் தொழிலாளிகளை ஐரோப்பியத் தொழிலாளிகளோடு ஒன்றுசேர்ந்து போராடும்படி அழைப்பு விடுத்தார். போல்ஷிவிசம் என்றால் பணக்காரர், மேல்தட்டு வர்க்கத்தினரின் சுரண்டல் இன்றி மக்கள் சுதந்திரமாக வாழ்வதுதான் என்றார் பாலர்.
1920இல் இந்திய அரசு, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் போல்ஷிவிக் அரசிற்கும் இடையே தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்தது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசிற்கு வைஸ்ராய் எழுதினார். இதற்கிடையில் ரஷ்யாவில் நடக்கும் அரசு குறித்துப் பொய்ப் பிரசாரத்தை இந்திய அரசு அவிழ்த்துவிடத் தொடங்கியது.
அரசின் பிரசாரத்தை வலுவாகக் கண்டித்தவர் திலகர். ரஷ்யாவில் நடக்கும் ஆட்சி பிரித்தானிய ஆட்சியைப்போல மற்றைய நாடுகளைப் பிடித்து அடக்கி ஆளவில்லை என்ற அவர் தொழிலாளர்களுக்கு மூலதனத்தின் மீது அதிகாரம் இருக்கிறது என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்டார். போல்ஷிவிக் கொள்கைகள் கீதையில் கண்ணன் கூறுவதை ஒத்திருக்கின்றன என்று கருதிய அவர் கீதையிலும் தங்களின் தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைத்திருப்பவன் பாபம் செய்பவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றார்.
ஜனவரி 1918ஆம் ஆண்டு கேசரியில் அவர் எழுதிய ‘ரஷ்யத் தலைவர் லெனின்’ என்ற கட்டுரையில் லெனினைச் சமாதானத்தின் தூதுவர் என்று அழைத்தார். லெனினை ஜெர்மானிய யூதர் ஒருவரின் புதல்வர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுவதைக் கண்டித்ததுடன், நிலங்களைப் பெருநிலவுடைமையாளர்கள் கைகளிலிருந்து பிடுங்கி விவசாயிகளுக்கு அளித்ததால்தான் சாதாரண மக்கள், போர்வீரர்கள் மத்தியில் லெனினுக்குச் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்றார்.
எம்.என்.ராய்
இந்தியாவில் புரட்சி வெடிப்பதற்காக உலகெங்கும் ஆயுதம் தேடுவதில் ஈடுபட்டிருந்த ராய், மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர். 1920ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் காங்கிரஸில் பங்குபெற்றார். அந்த மாநாட்டில் இந்தியா போன்ற விடுதலை அடையாத நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயக விடுதலை இயக்கங்களுக்குக் கம்யூனிஸ்டு கட்சிகள் உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை லெனின் முன்வைத்தார். இதற்கு மாற்றாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நேரடியாக விவசாயிகளையும் தொழிலாளர்களையும் திரட்டி முன்னால் நின்று புரட்சிசெய்ய வேண்டும் என்ற கருத்தை ராய் வைத்தார். கடைசியில் முதலாளித்துவ ஜனநாயக விடுதலை இயக்கம் என்ற சொற்றொடர் எடுக்கப்பட்டு, ‘புரட்சிகர விடுதலை இயக்கங்கள்’ என்ற சொற்றொடருடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லெனின் எந்தவொரு விடுதலை இயக்கமும் அந்தக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முதலாளித்துவ ஜனநாயக இயக்கமாகவே இருக்கும் என்ற உறுதியுடன் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் பரிணாம வளர்ச்சி லெனின் சொன்னதுதான் சரி என்பதை உறுதி செய்கிறது. எம்.என்.ராய் பல திருப்பங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில்தான் சேர்ந்தார்.
மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரியார்
பாரதியோடு பாண்டிச்சேரி சென்ற இளைஞர்களில் MPBT Acharya என்று அழைக்கப்பட்ட மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரியார் ஒருவர். இந்தியா பத்திரிகையின் பதிப்பாளர், நிர்வாகி. பின்னால் ஐரோப்பா சென்று வ.வே.சு. ஐயர், சாவர்க்கர், லாலா ஹர்தயாள் போன்ற அன்றைய புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டவர். மகேந்திர பிரதாப் என்ற புரட்சி வீரருடன் காபூல் சென்று அங்கு ஆண்டுகொண்டிருந்த அமீரை இந்தியாவின்மீது போர்தொடுக்க ஆலோசனை சொன்னார் என்பதும் தெரியவருகிறது. அவருடன் ரஷ்யா சென்று மே 1919இல் லெனினைச் சந்தித்தார். இரண்டாம் கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலில் இவரும் பங்குபெற்றார். 1920ஆம் ஆண்டு தாஷ்கெண்டில் பிறந்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியை நிறுவியவர்களில் ஆச்சாரியாவும் ஒருவர்.
காந்தி
இந்திய விடுதலைப் போராட்டம் எந்த அந்நிய நாட்டையும் சார்ந்திருக்கவில்லை என்று காந்தி வலியுறுத் தினாலும் அவரும் கம்யூனிச ஏஜெண்டா என்ற கேள்வி பிரித்தானியப் பாராளு மன்றத்தில் சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் கேட்கப்பட்டது. 1934ல் கூட சிலர் இதையே திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாசித் தலைவர்களில் ஒருவரான ஹெர்மன் கோயரிங், காந்தியை போல்ஷிவிக் ஏஜெண்ட் என்று அவதூறு செய்தார். காந்தி 1924இல் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். “எனக்கு போல்ஷிவிசம் என்றால் என்ன என்பது சரியாகத் தெரியாது. ஆனால் அவர்கள் வன்முறை யில் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் எனக்குத் தெரியும். அவை என்னை அவர்களிடமிருந்து தள்ளி நிற்கவைக்கின்றன.”
ஆனால் கம்யூனிஸ்டுகள்து அவருக்கு மதிப்பு இருந்தது. 1928இல் யங் இந்தியாவிற்கு எழுதுகையில் போல்ஷிவிக் கொள்கைக்குப் பின்னால் கணக்கில்லாத மனிதர்களின் தூய்மையான தியாகம் இருக்கிறது என்பதை யாரும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது என்றும் லெனின் போன்ற உன்னத ஆன்மாக்களின் தியாகங்களினால் புனிதப்படுத்தப்பட்ட கொள்கை வீணாகப் போக முடியாது என்றும் சொன்னார்.
லெனின்
இந்தியாவில் நடக்கும் விடுதலைப் போராட்டத்தை அவர் கூர்மையாகக் கவனித்து வந்திருந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. 1908ஆம் ஆண்டு திலகர் ராஜத்துரோக வழக்கில் தண்டனை பெற்று பர்மாவில் இருக்கும் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். லெனின் இந்த தண்டனையைத் தனது கட்டுரை ஒன்றில் கடுமையாக எதிர்க்கிறார். பிரித்தானியக் குள்ளநரிகள் அவரை நாடு கடத்திவிட்டார்கள், இந்திய நீதிபதிகள் குற்றமற்றவர் என்று சொன்னபோதும் பிரித்தானிய நீதிபதிகள் அவர்களை மறுத்துரைத்துக் குற்றம் செய்தார் என்று தீர்ப்பு வழங்கி விட்டனர் என்று எழுதுகிறார். திலகரைப் போன்ற ஒரு ஜனநாயகவாதிக்கு அளித்த தண்டனையை எதிர்த்து மும்பை மக்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ரஷ்ய அரசிற்குத் தலைவரான பிறகும் அவர் இந்திய மக்களின் போராட்டங்களைக் கவனித்துவந்திருக்கிறார். 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலைச் செய்தியை அமிர்த பஜார் பத்திரிகாவில் படித்த லெனினின் செய்தியைக் கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் பிரதிநிதி ஒருவர் அந்தப் பத்திரிகைக்கு அனுப்பியிருந்தார்: இந்தியச் சகோதரர்களின் நியாயமான குறிக்கோள்களுக்கு சோவியத் அரசு ஆதரவு தருவதாக இந்திய மக்களுக்குத் தெரிவிக்கச் சொல்லி லெனின் என்னைக் கேட்டிருக்கிறார் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பத்திரிகைகள்
ஸ்டேட்ஸ்மேன், பயனீர் போன்ற அரசு சார்பு பத்திரிகைகள் அக்டோபர் புரட்சி யைக் கடுமையாகத் தாக்கிக் கட்டுரைகள் எழுதின. ஆனால் அமிர்தபஜார் பத்திரிகா கம்யூனிசக் கருத்துகளை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் தடுப்பது கடினம் என்று எழுதியது. “ஐரோப்பாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கருத்துகள் உலகம் முழுவதும் பரவுவதற்கு அதிக நாட்கள் எடுக்காது. முதலாளித்துவமும் சர்வாதி காரமும் அதிக நாட்கள் நீடிக்காது,” என்று அது எழுதியது.
1918இல் பிராவ்தா இந்திய மக்களிடமிருந்து லெனினுக்கு வந்த செய்தி ஒன்றை வெளியிட்டது. தில்லியிலிருந்து ஒருவர் பலதடைகளைத் தாண்டி அந்தச் செய்தியை மாஸ்கோவிற்குக் கொண்டு வந்திருந்தார். யாரென்று தெரியவில்லை. செய்தி இவ்வாறிருந்தது: “இந்தியா உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துக் கூறுகிறது. ஜனநாயகத்தின் வெற்றி இது. நீங்கள் பதவி ஏற்றுக்கொண்ட பின் அறிவித்த உயரிய மனிதாபிமானமிக்க கொள்கைகளை இந்தியா வியந்து பாராட்டுகிறது. நீங்கள் இந்தக் கொள்கைகளிடம் பிடிப்போடு இருக்க வலுத்தர வேண்டும் என்று இறைவனை இந்தியா வேண்டுகிறது.”
இந்து பத்திரிகை அதற்கே உரிய பாணியில் எழுதியது: போல்ஷிவிசம் என்பது சிவப்புப் பயங்கரவாதம். கொலைகள், குழப்பம், கொள்ளைகள், சட்டங்கள் உடைந்து போனமை போன்றவை பேற்றின் வேதனைகள். ஒரு நாடு அதன் உச்சநிலையை அடைவதின் சின்னங்கள்.”
தமிழில் சுதேசமித்திரன் பத்திரிகை ரஷ்யாவைக் குறித்து வந்த பொய்ச் செய்திகளைக் கண்டித்தும் உண்மையான செய்திகளை வெளியிட்டும் வந்தது என்று ரகுநாதன் கூறுகிறார்.
‘உலகை உலுக்கிய பத்து நாட்கள்’ புத்தகத்தை எழுதிய ஜான் ரீடின் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு அவர் சொல்வதைப் பார்த்தால் ரஷ்யாவில் போல்ஷிவிக்கு களின் ஆட்சி அவ்வளவு மோசமாக இல்லை என்றும் கூடியவரை ஒழுங்காகவும் முந்திய ஆட்சியை விட நேர்மையாகவும் இருக்கிறது என்று தெரியவருகிறது என்றும் சுதேசமித்திரன் எழுதியிருந்தது. மே 1918இல் ‘ருஷ்யாவின் பிரஸிடெண்டு மிஸ்டர் லெனினின் குணாதிசயங்கள்’ என்ற கட்டுரையையும் அது வெளி யிட்டிருந்தது.
10 ஏப்ரல் 1923இல் சுதேசமித்திரன் ஒரு தலையங்கம் எழுதியது. அதில் கம்யூனிசக் கொள்கைக்கு வலுவான ஆதரவு தரும் வகையில் ஒரு பகுதி அமைந்திருந்தது:
ருஷ்ய தேசத்தில் ஐந்து வருஷ காலமாக ஆட்சி செலுத்திவரும் போல்ஷிவிக்கர்கள் ஜனநாயகக் கொள்கைகளிலும் பொருளுரிமைக் கொள்கைகளிலும் வெகு உயர்ந்த நோக்கங்களைக் கொண்டவர்கள். ஐரோப்பாவிலுள்ள மற்ற வல்லரசுகளெல்லாம் பெரும் முதலாளிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் மற்ற தேசங்களில் வெளியாகும் பத்திரிகைகள் விசேஷமாக முதலாளிகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றன. ஆனதால் அந்தப் பத்திரிகைகளில் ருஷ்யாவைப் பற்றி வரும் விஷயங்களெல்லாம் பாரபட்சமில்லாமல் எழுதப்பட்டதென்று கொள்ள முடியாது. ருஷ்யதேச மகாஜனங்களோ போல்ஷிவிக்கர்களையே ஆதரித்து வருகிறார்கள். இவ்விதம் ஐந்து வருஷகாலத்திற்கு மேலாகவே தேச மகாஜனங்களுடைய நன்னம்பிக்கையைக் கவரக் கூடியவர்களைத் துர்க்குணம் நிரம்பியவர்கள் என்று கருதக் காரணம் ஒன்றும் இல்லை.”
“போல்ஷிவிக்கரின் பொருளுரிமைக் கொள்கைகள் தற்காலத்திய பெருமுதலாளிகள் சிலருக்கு அல்லது பலருக்கு வேம்பாக இருக்கலாம். ஆனால் பசியால் ஆயிரக்கணக்கான ஜனங்கள் மடியும்போது, எல்லோரும் பசியாற உண்ணக்கூடிய வழிகளைக் கண்டுபிடிக்க முயல்வது மேலான முயற்சி என்பதை எவரும் மறுக்க முடியாது. மதகுருமார்கள் உபதேசிக்கும் சடங்கு நுட்பங் களைக் காட்டிலும், போல்ஷிவிக்கர்களின் பெருமுயற்சியே இல்லார்க்கும் உள்ளார்க்கும் ஒரு பொதுவான கடவுளின் உண்மை மதத்தை அனுசரித்திருக்கிறது.”
உலகை உலுக்கிய புரட்சி
1918இலேயே ஸ்டாலின் சொன்னார்: “அக்டோபர் புரட்சியின் உலகம் தழுவிய மகத்துவத்தில் அடிப்படை யானது அது மேற்கில் இருக்கும் சோஷலிஸ்டுகளுக்கும் அடிமைப்பட்டிருக்கும் கீழைநாடுகளுக்கும் இடையே ஒரு பாலம் அமைக்கும் என்பதுதான். அது உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் புதிய புரட்சிகர முன்னணியை உருவாக்கும்.”
1917க்குப் பின் உலகில் எழுந்த எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் அக்டோபர் புரட்சிக்கும் இடையேயும் ஒரு பாலம் இருந்தது. உலக சோஷலிஸ்டுகள் எல்லோரும் விடுதலை இயக்கங்களின் சார்பாக வலுவாகப் பேசத் தொடங்கியது அக்டோபர் புரட்சிக்குப் பின்னால்தான். இரண்டாம் உலகப்போரில் ஏகாதிபத்தியத்திற்குச் சாவு மணி அடித்த ரஷ்யாவின் எதிர்க்கமுடியாத சக்திக்குக் காரணமும் அக்டோபர் புரட்சிதான்.
இந்திய, சீன, ஆசிய ஆப்பிரிக்க, தென்அமெரிக்க மக்கள் ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டாங்களை எப்போதும் மறக்க மாட்டார்கள். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அடிமை நாடுகளின் சார்பாகவும் முதல்முதலாகக் குரல் கொடுத்த சோவியத் ஒன்றியம் பிறக்கக் காரணமாக இருந்த அக்டோபர் புரட்சியையும் அவர்கள் மறக்க மாட்டார்கள்.
துணை நூல்கள்:
‘Lenin – Leon Trotsky’, 1925Marxists Internet Archives
‘அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்’ - தொ.மு.சி. ரகுநாதன் 1977 ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ பிரைவேட் லிமிடெட், சென்னை
‘The Russian Revolution and the Indian Patriots’, 1987, Dr Panchanan Saha, Manisha, Kolkata
‘Communism in India, Overstreet and Windmiller’, 1960 The Perennial Press, Bombay
‘Communism and Nationalism in India’, 1919-1947, 1987Shashi Bharati, Anamika Prakashan New Delhi
மின்னஞ்சல்: tigerclaw@gmail.com
No comments:
Post a Comment