இந்தியாவின் இரண்டாவது பிரதமரும் என்னுடைய அன்புத் தகப்பனாருமான லால் பகதூர் சாஸ்திரியைநினைக்கும்போதெல்லாம், அவரை அன்போடு நாங்கள் அழைத்த ‘பாபுஜி’ என்ற சொல் தான் நினைவுக்குவரும். அவர் நாட்டுமக்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கியதைப்போல எங்களுக்கும் சிறந்த தகப்பனாராக இருந்தார். வீட்டில் அவரைப்பார்க்கவும் பேசவும் வாய்ப்புக்காக நாங்கள் பல நாட்கள் காத்திருந்திருக்கிறோம். சில நாட்கள் பள்ளிக்கூடத்துக்குப்புறப்படுவதற்கு முன் அலுவலகக் கதவு வழியாக அவரை எட்டிப் பார்த்து, ‘போய் வருகிறோம்’ என்போம். அது காதில்விழுந்ததும் கண்ணாடியைத் தாழ்த்திக்கொண்டு தலையை நிமிர்த்தி எங்களைப் பார்த்து புன்னகைத்து விடையளிப்பார்.இந்தப் புன்னகையே எனக்கும் என்னுடைய சகோதரர்கள் அனில், அசோக் ஆகியோருக்கும் பெரிய திருப்தியைஅளித்துவிடும்.
நாடே குடும்பம்
ஒரு சமயம், இரண்டு வாரங்களுக்கும் மேல் அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை, எனக்குக் கடுமையான ஏக்கம்ஏற்பட்டது; அவர் வீட்டுக்குவரும் வரை கண் விழித்திருப்பது என்று முடிவு செய்தேன். இரவு வீட்டுக்கு வந்த அவர்,நெடுநேரமாகத் தூங்காமல் நான் விழித்திருப்பது கண்டு துணுக்குற்றார். “ஏன் இன்னும் தூங்கவில்லை, ஏன் கோபமாகஇருக்கிறாய்?” என்று கேட்டார். நான் பதிலே சொல்லாமல் இருந்ததும் என் தலையைக் கோதிவிட்டு சமாதானப்படுத்தினார்.
“பாபுஜி நீங்கள் எப்படிப்பட்ட தகப்பனார், நாங்கள் என்ன படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம் என்று கூட ஒரு நாளும்அழைத்து எங்களைக் கேட்பதே இல்லையே” என்று கேட்டேன். “நீ புத்திசாலியான பையன்; இந்த நாட்டு மக்கள் ‘பிரதமமந்திரி’ என்ற பெரிய பொறுப்பை என் தோள்களில் நம்பிக்கையோடு ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்த நாட்டுக்கே தலைவன்என்றானதால், என்னுடைய குடும்பம் உங்களுடன் சுருங்கிவிடவில்லை; இந்த முழு நாடே என் குடும்பம், அனைவருடையநலனுக்கும் நான் பொறுப்பாளி. நான் சொல்ல வருவதை நீ புரிந்துகொள்வாய்” என்றார்.
கிராமங்களின் மீதே கவனம்
வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதால் நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற கிராமப்புற வளர்ச்சி தொடர்பாகதெளிவான கொள்கையும் திட்டமிடலும் அமலாக்கமும் அவசியம் என்று அவர் கருதினார். கிராமங்களிலிருந்துஇளைஞர்கள் வேலைக்காக நகர்ப்புறங்களை நோக்கிச் செல்வதைத் தடுக்க, கிராமங்களில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றுவிரும்பினார். படித்த இளைஞர்கள் உடனே வேலையில் சேரும் வகையில் தொழில்பயிற்சிக் கல்வி கற்றுத்தரப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே அனைவருடைய இலக்காகவும் இறுதி லட்சியமாகவும் இருக்க வேண்டும்என்றார். தெளிந்த சிந்தனையோடும் அறிவியல்பூர்வமாகவும் திட்டமிட்டு ஐந்தாண்டு திட்டங்களை வகுத்துச்செயல்படுத்தினால் நம் நாடு பொருளாதாரத்தில் முன்னேறும் என்று 1964-லேயே கூறினார். “நாம் இப்போது நான்காவதுஐந்தாண்டு திட்ட தயாரிப்பில் இருக்கிறோம். வேளாண்மைக்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில் துறையும்முக்கியமானதுதான்; தொழில் துறையும் வேளாண் துறையும் இணைந்து பணியாற்றினால்தான் இப்பொழுது இருக்கும்குழப்பத்திலிருந்து மீண்டு உற்சாகமான நிலைக்கு நாட்டை வழிநடத்திச் செல்ல முடியும்” என்று பேசினார். தொழில்புரட்சியுடன், பசுமைப் புரட்சி – வெண்மைப் புரட்சி ஆகியவையும் இணைந்தால்தான் மக்களின் பொருளாதார அந்தஸ்தைஉயர்த்த முடியும் என்று தொலைநோக்குடன் சிந்தித்தார்.
நிர்வாகத்தை முடுக்கிவிட…
அரசு நிர்வாகம் திறமையாகவும் நேர்மையாகவும் இருந்தால்தான் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் சரியானஈடுபாட்டோடு அமல்படுத்த முடியும் என்று நம்பினார். இதற்கு நிர்வாகச் சீர்திருத்தத்தை விரிவாகவும் ஆழமாகவும் செய்யநினைத்தார். பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக மறுகட்டமைப்புக்கும் அரசு நிர்வாகம் சீர்திருத்தப்பட வேண்டும் என்றுவலியுறுத்தினார். பொருளாதார மாற்றத்தை உருவாக்க துடிப்பான அரசு நிர்வாகம் தேவை என்பதால் ‘நிர்வாகச் சீர்திருத்தஆணையத்தை’ உருவாக்கினார். அதன் பிறகு பொருளாதார வளர்ச்சி ஏற்பட இது முக்கியமான காரணமாக இருந்திருக்கும்என்று கருதுகிறேன்.
வேளாண் துறையின் நிலையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மிகுந்த அக்கறையுடன் பார்க்கப்பட வேண்டும் என்றுஉணர்ந்தார். 1964 டிசம்பரில் கல்கத்தா நகர இந்தியத் தொழில் – வர்த்தகசபைக் கூட்டத்தில் பேசியபோது, அன்னியச்செலாவணி கையிருப்பு உயர்ந்துகொண்டிருப்பது, தொழில் துறையில் உற்பத்தி அதிகரித்துவருவது, வேளாண் சாகுபடியில்தேக்கநிலை ஆகியவற்றைத் தொட்டுக்காட்டினார்.
“வேளாண் துறையில் உற்பத்தியை நீண்டகால அடிப்படையில் உயர்த்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும்எடுப்பதுதான் நம்முடைய முதலும் முக்கியமுமான கடமையாகும்; வேளாண் துறை உற்பத்தியைக் கணிசமாகப் பெருக்கமுடியும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை” என்று அந்தக் கூட்டத்தில் பேசினார். அவருடைய இந்தநம்பிக்கைதான் இப்போது நம் நாட்டில் உணவு தானிய உற்பத்தியில் ‘உபரி’ என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. நான்மட்டுமல்ல, மேலும் பலரும் கூட, ‘லால் பகதூர் சாஸ்திரிதான் பசுமைப் புரட்சியின் தந்தை’ என்று உறுதியாக நம்புகிறோம்.
அவருடைய மேஜையில் ஒரு பொன்மொழி இருக்கும். “ஓ நானக், சின்னஞ்சிறிதாக இரு – பசும் புல்லைப்போல; ஏனையதாவரங்கள் சிறிது காலம் கழித்து வாடிவிடும், பசும்புல் எப்போதும் பச்சைப்பசேலென்று இருக்கும்”. பலமுறை படித்தும்அதன் உட்பொருள் எனக்கு விளங்கவில்லை; ஒரு நாள் என் தந்தையை நிறுத்தி, இதை நீங்கள் விளக்க வேண்டும் என்றேன். “அழகான பூ எல்லோரையும் சிறிது நேரம் கவர்ந்து இழுக்கும்; அந்தப் பூ தனது மணத்தை இழந்து வாடிய பிறகு மக்கள் அதைவருத்தமே படாமல் தூக்கி வீசிவிடுவார்கள். பசும்புல் ஆண்டு முழுக்க தரையில் கண்ணுக்குப் பசுமையாக காட்சி தந்துகொண்டிருக்கும். நான் எப்போதுமே புல்லைப்போல இருக்க முயற்சிக்கிறேன், அழகான பூவாக அல்ல; என்னுடையவாழ்க்கையின் லட்சியம் என்னவென்றால் எல்லோருக்கும் எல்லா காலத்திலும் மகிழ்ச்சியையும் ஒற்றுமை உணர்வையும்ஏற்படுத்துவதாகும்” என்றார்.
கல்விக்கு முக்கியத்துவம்
“வாழ்க்கையில் நான் என்னவாக இருக்க வேண்டும்” என்று உடனே கேட்டேன். “மிகப் பெரிய கட்டிடத்தின் அஸ்திவாரம்போல இரு; கட்டிடம் இடிந்து விழலாம், அஸ்திவாரம் குலையாது” என்றார். பாபுஜி எங்களைவிட்டு அவ்வளவு விரைவாகமறைந்துவிடுவார் என்று நாங்கள் நினைத்ததே இல்லை. இப்போது அவர் இல்லாவிட்டாலும் அவருடைய இந்த வார்த்தைஎனக்கு மிகப் பெரிய உந்துதலாகத் தொடர்கிறது.
நிர்வாகச் சீர்திருத்தம் முக்கியம் என்பதைப் போலவே கல்வித் துறை சீர்திருத்தமும் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டியது என்று அவர் உணர்ந்தார். என்னிடம் எதை எதிர்பார்த்தாரோ அதைத்தான் நாட்டில் உள்ள எல்லாமாணவர்களிடமிருந்தும் எதிர்பார்த்தார். வளமான, வலிமையான இந்தியா உருவாக இந்தியாவின் மாணவர்கள் சிறந்தஅடிக்கற்களாகத் திகழ வேண்டும் என்று விரும்பினார். “கல்வியில் நிறைவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒருதிருப்புமுனை; படிப்புக்குத் தகுந்த வேலையை நாடுவதுதான் இயற்கை. நம்முடைய வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்துஅமல் செய்யப்படும்போது அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.
அவர் உருவாக்கிய “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற கோஷம் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது; பொருளாதாரவளர்ச்சியும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் நம்முடைய எதிர்காலத் திட்டங்களுக்கு வழிகாட்டும் சக்தியாகத் திகழவேண்டும்!
- சுனீல் சாஸ்திரி, உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்.
தமிழில்: சாரி, ©: தி இந்து ஆங்கிலம்.
No comments:
Post a Comment