இலக்கில் உறுதி அவசியம்- - முகம்மது சுஜிதா I.P.S


#உத்வேகம் 




வெற்றி பெற இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார் ஐ.பி.எஸ். பெற்ற முகம்மது சுஜிதா.எம்.எஸ். 2014-ம் ஆண்டு பேட்ச்சின் கர்நாடகா மாநிலப் பிரிவின் இளம் அதிகாரியான இவர் ஷிமோகாவில் பயிற்சி பெற்று ஏ.எஸ்.பி.யாகப் பயிற்சி முடித்து அடுத்த பணி ஏற்கத் தயாராக இருக்கிறார்.
தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தின் உயர்நிலை எழுத்தராகப் பணியாற்றிய முகம்மது சல்மானின் ஒரே மகள் சுஜிதா. பள்ளிப் படிப்பில் எப்போதுமே 90 சதவீதம் வாங்கினாலும் பிளஸ் ஒன்னில் மூன்றாவது குரூப்பான வணிகவியலை விரும்பித் தேர்ந்தெடுத்தார் சுஜிதா. கல்லூரிப் படிப்பை முடித்து மூன்றாண்டுகள் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தார்.
பின்னர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு யூ.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாரானார். இரண்டு முறை தேர்வு எழுதித் தோல்வியைத் தழுவியதால் சோர்வடைந்து மீண்டும் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு மேலாளரானார். இப்பணியைச் செய்தபடி மீண்டும் படித்து மூன்றாவது முயற்சியில் ஐ.பி.எஸ். ஆனார் சுஜிதா.
எதுவும் தடை இல்லை!
“அரசுப் பதவியில் உயர்ந்த பதவியை நான் பெற வேண்டும் என்கிற ஆசையோடுதான் அப்பா என்னை வளர்த்தார். நான் ஆறாவது படிக்கும்போது தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மச்சீந்திரநாதனைப் பார்த்து யூ.பி.எஸ்.சி. எழுதும் ஆர்வம் வந்தது. அதே ஆசையில் வளர்ந்தாலும் படித்தவுடன் கிடைத்த வேலையில் சேர்ந்தேன். முதல் இரண்டு முறை யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெல்ல முடியாமல் மீண்டும் ஐ.டி. வேலையில் சேர்ந்தபோது அங்கு என்னுடைய உயர் அதிகாரியான ஷிரயான்ஸ் என்னை மிகவும் ஊக்குவித்தார்.
மூன்றாவது முயற்சியில் நேர்முகத் தேர்வுக்காக பிரபா ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்றேன். மனிதநேயத்தின் பயிற்சியாளர் கார்த்திக், அங்கு படித்து வென்ற அரவிந்தன் ஐ.பி.எஸ். ஆகியோரும் வழிகாட்டியாக இருந்தனர். ஆணுக்கு நிகராக என்னை வளர்த்த என்னுடைய பெற்றோர் இப்படிப் பலரின் ஊக்கத்தினாலும் ஒத்துழைப்பினாலும் ஐ.பி.எஸ். ஆனேன்” எனப் பெருமிதம் கொள்கிறார் சுஜிதா.
பள்ளியில் மொழிப்பாடமாக இந்தியைப் படித்த சுஜிதா யூ.பி.எஸ்.சி.யிலும் அதையே தேர்ந்தெடுத்து எழுதினார். ஆனால், இந்தியில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் தமிழை மொழிப்பாடமாக எடுத்தார். இதற்காக மூன்று மாதங்கள் கடுமையாகப் படித்தார். விருப்பப்பாடமாக வரலாறு தேர்ந்தெடுத்தார்.
மேற்படிப்பு படிக்கவும் வேலைக்குச் செல்லவும் சுஜிதா வளர்ந்த சூழலில் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவருடைய பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதற்குச் சுஜிதாவின் தாய் முகம்மது அஜீஸா ஒரு பட்டதாரியாக இருந்தது முக்கியமான காரணம்.
இது என் வழி!
> யூ.பி.எஸ்.சி. எழுதுபவர்கள் அரசு இணையதளங்களில் அதன் துறைரீதியான அறிவிப்புகள் மற்றும் திட்ட விளக்கங்களைப் பின்தொடர்வது நல்லது.
> நம் பாடத்திட்டம் தொடர்பானவைகளை மட்டும் படித்துக்கொள்வது அவசியம். இந்தத் தேர்வுக்குப் படிக்க மிக அதிகமான விஷயங்கள் கிடைக்கின்றன. அத்தனையும் படிக்க நேரம் போதாது. ஆகவே எதைப் படிப்பது எதைத் தவிர்ப்பது என்பதைச் சரியாக முடிவு செய்யவேண்டும்.
> முக்கியமாக மாதிரித் தேர்வுகள் அதிகமாக எழுதிப் பழக வேண்டும். இதற்கான இணையதளங்கள் அதிகமாக வந்துவிட்டன.
> நமக்கு ஏற்படும் சந்தேகங்களை சக தேர்வாளர்கள் அல்லது பயிற்சி நிலையங்களின் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
> இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும்.
> தற்போது யூ.பி.எஸ்.சி.யில் அடிப்படைக் கேள்விகளைத் தவிர்த்துச் சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக அதிகமான கேள்விகள் வருவதாகப் பேச்சுகள் எழுகின்றன. இதை நம்பி அடிப்படைக் கேள்விகளை மட்டும் படிக்காமல் இருக்கக் கூடாது. ஏனெனில், இதை மறுதேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ளது.
> எல்லாவற்றுக்கும் மேலாக நாம் படிக்கும் அடிப்படைக் கேள்விகளின் விடைகள் நம் பணியில் அதிகம் பயன்படும்.
> டெல்லியில் பயிற்சி பெற்றால்தான் யூ.பி.எஸ்.சி.யில் வெல்ல முடியும் என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால் நான் முழுக்கச் முழுக்க சென்னையிலேயேதான் யூ.பி.எஸ்.சி.க்காகப் படித்தேன்; பயிற்சி பெற்றேன்.
> நேர்முகத் தேர்வில் மட்டும் தவறான தகவல்கள் அளித்து ஏமாற்ற முயற்சிக்கவே கூடாது. முதலில் அவர்கள் நம்மைவிடப் பல வருடப் பணி அனுபவம் பெற்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதைவிடவும் முக்கியம், நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் எப்போதுமே நமக்கு வெற்றி தேடித் தரும்.
ரேங்க்கில் ஐ.பி.எஸ். பெற்ற சுஜிதாவுக்கு நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது. அப்போது அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி, விருப்பப்பாடமான வரலாறு மற்றும் அவர் அதுவரை செய்த பணி தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் எளிதாகப் பதில் தந்தவர், அறியாத கேள்விகளுக்குத் தயங்காமல் ‘தெரியாது’ எனக் கூறி உள்ளார்.
“யூ.பி.எஸ்.சி. தேர்வு என்பது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றும் வேலை வாய்ப்பாகும். இதை அந்தத் தேர்வு எழுதுபவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகாவில் பணியாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. எனது பெற்றோர் அருகிலுள்ள தமிழகத்தில் இருப்பதால் அடிக்கடி சென்று அவர்களைச் சந்திக்க முடிவது சந்தோஷமே” என்கிறார் சுஜிதா.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN