காசநோய்

கடந்த 10 ஆண்டுகளில், காசநோய்க்கான மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 24% நோயாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டுக்கான சர்வதேச காசநோய் அறிக்கையின்படி 2014 - 15 ஆண்டில் மட்டும் காசநோய் மரணம் ஏறத்தாழ 50% அதிகரித்திருந்தது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம், போதிய மருத்துவக் கவனிப்பு இல்லாதது. காசநோயால் பாதிக்கப்பட்டால் தொடர்ந்து ஓராண்டுக்கு கவனமும் மருத்துவ சிகிச்சையும் நோயாளிக்குத் தரப்பட வேண்டும். நோய் கண்டறியப்பட்ட அடுத்த சில மாதங்கள் மட்டுமே முறையான மருத்துவ சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகள், அதற்குப் பிறகு கவனக் குறைவாக இருந்துவிடுகிறார்கள். காசநோய் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அவர்களுக்கு முழுமையாக சிகிச்சை தருவதும் அவசியம்.
இரண்டாவது காரணம், அதைவிட முக்கியமானது. இப்போது தரப்படும் மருந்துகளும் சிகிச்சையும் போதிய பலன் அளிப்பதில்லை. காசநோய்க்குத் தரப்படும் இரண்டு முக்கியமான மருந்துகளுக்கு காசநோய்க் கிருமிகள் கட்டுப்படுவதில்லை. இந்த மருந்துகள் மீதான எதிர்ப்புச் சக்தியை அந்தக் கிருமிகள் பெற்று விட்டிருக்கின்றன. அதனால் நோயாளிகள் குணமடைவதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது.
மூன்றாவது காரணம், காசநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கே உட்படுவதில்லை. காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு அரை நூற்றாண்டு காலம் கடந்த பிறகும்கூட, இன்னும் இதுகுறித்த விழிப்புணர்வு தேசத்தின் எல்லாப் பகுதிகளையும் சென்றடையவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
நம்மை மிகவும் அச்சப்பட வைக்கும் திருப்பம் என்னவென்றால், ஆண்டுக்கு ஆண்டு காசநோயால் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதுதான். இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 76,000 குழந்தைகளில் சுமார் 5,500 பேர் காசநோய்க்கான மருந்துகளால் குணப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காசநோய்க்குத் தரப்படும் 'ரிஃபாம்பிசின்' என்கிற மருந்துக்கு காசநோய் கிருமிகள் எதிர்ப்புச் சக்தி பெற்றுவிட்டன. அதனால் அந்த மருந்து பலனளிக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. 
காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின்படி, காசநோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று பரவியிருப்பது தெரிய வந்திருக்கிறது. காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உடனடியாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகளும், முதியோர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு விடுகிறார்கள்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர் வீட்டில் இருப்பது தெரியவந்தால், நோயாளிக்குச் சிகிச்சை முடியும்வரை அவருடன் ஆறு வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகளும் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும் நேரடித் தொடர்பு இல்லாமல் இருப்பது மிக மிக அவசியம். அரை நூற்றாண்டுக்கு முன்னால் நடத்தப்பட்டதுபோல, காசநோய் தடுப்புத் திட்டம் முழுமூச்சில் மீண்டும் நடத்தப்பட்டு, வீடு வீடாக காசநோய்க்கான சோதனை நடத்தப்பட்டாக வேண்டும். அப்போதுதான் நோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
தனியார் மருத்துவர்களை அணுகும் காசநோயாளிகளில் 50% மட்டுமே சிகிச்சையை முழுமையாகப் பெற்று குணமடைகிறார்கள். 2013-இல் காசநோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை அணுகியவர்களில் 65% மட்டுமே முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்தனர். காசநோய்க்கான மருந்துகளின் விலை அதிகரித்திருப்பதும் அந்த மருந்துகளின் நோயைப் போக்கும் சக்தி குறைந்து வருவதும் பலர் சிகிச்சை பெறாமல் இருப்பதற்குக் காரணங்கள்.
இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின்படி, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டச்சத்துக் குறைவால் காசநோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. காசநோய்க்கும் ஆரோக்கியமான உணவுக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், இதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிமுறை தெரியவில்லை. ஆங்காங்கே நடத்தப்படும் ஆய்வுகளின்படி, புரதச்சத்து மிக்க உணவு வகைகளும், வைட்டமின் ஏ, துத்தநாகம் உள்ளிட்ட தாதுப்பொருள்களும் உணவில் இருப்பது காசநோயாளிகள் குணமடைவதைத் துரிதப்படுத்துகின்றன.
காசநோயை எதிர்கொள்ள மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன்படி, இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 35 லட்சம் நோயாளிகள் ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுவதற்காக ரூ.500 மானியமாக வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. காசநோய் பாதிப்பால் ஏற்படும் அன்றாடக் கூலியிழப்பு அல்லது சம்பள இழப்பை ஈடுகட்டவும், ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறவும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று வரவும் வழங்கப்படும் மானியம் இது. 
சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதி வேகத்தில் காசநோய் பரவும் வாய்ப்பு மிக மிக அதிகம். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் காசநோயாளிகளின் எண்ணிக்கையும், காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு மக்கள் மன்றத்தில் உடனடியாக ஏற்பட்டாக வேண்டும். ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்ட வேண்டிய தருணம் இது

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN