#உத்வேகம்
“ஐ.பி.எஸ். ஆக ஆண்களுக்கு இணையாகப் பெண்களாலும் பணியாற்ற முடியும்” என்கிறார் பூங்குழலி ஐ.பி.எஸ். இவர் 2014 பேட்ச்சின் கேரளா மாநிலப் பிரிவு அதிகாரி. கன்னூரின் பயிற்சி ஏ.எஸ்.பி.யாகப் பணியாற்றியவர். ஐதராபாத் அகாடமியில் அடுத்த கட்டப் பயிற்சிகளை முடித்து மாவட்ட ஏ.எஸ்.பி. பணிக்காகக் காத்திருக்கிறார்.
கரூரைச் சேர்ந்த பூங்குழலி பிளஸ் டூ-வில் அம்மாவட்டத்தின் இரண்டாவது மாணவி. தமிழ்ப் பாடத்தில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார். 2007-ல் பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வழக்கம்போல ஐ.டி. துறையில் வேலையில் சேர்ந்தார்.
ஆனால் துறுதுறுப்பும் சுடர்விடும் அறிவும் கொண்ட பூங்குழலிக்குச் சலிப்பு தட்டியது. செய்தித் தாள்கள் மூலம் யூ.பி.எஸ்.சி. ஆர்வம் உண்டானது. தொடர்ந்து முயற்சி செய்தவர் ஐந்தாவது முயற்சியில் ஐ.பி.எஸ். ஆனார்.
துணிச்சல் மிக்க பெண்ணாகவும் இருந்த பூங்குழலி யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்ததும் கேரளா பிரிவின் என்.ஜி.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., நிஷாந்தினி ஐ.பி.எஸ். ஆகியோரைச் சந்தித்து ஆலோசனையும் உந்துதலும் பெற்றார்.
முதலில் வீட்டில் தயக்கத்தோடுதான் சம்மதித்தார்கள்.
“முதல் வருடம் சென்னையில் ஒரு யூ.பி.எஸ்.சி. பயிற்சி நிலையத்தில் படித்தாலும் முதல் இருநிலைகளில் தேர்ச்சி பெற்றேனே தவிர நேர்முகத் தேர்வில் தவறவிட்டேன். இரண்டாவது முயற்சியிலும் இதேதான் நடந்தது. ஆரம்பத்தில் மன அழுத்தம் உண்டானது. தன்னம்பிக்கை குறைவினால் மூன்றாவது முயற்சியில் முதல்நிலை தேர்விலேயே தவறவிட்டேன். ஒரு மாற்றம் வேண்டி நான்காவது முயற்சிக்கு டெல்லிக்குச் சென்று வஜ்ரம் ராவ் பயிற்சி நிலையத்தில் படித்தேன். இதிலும் என்னால் தேர்ச்சி பெற முடியாமல் சென்னைக்குத் திரும்பினேன். ஐந்தாவது முயற்சியில் ஐ.பி.எஸ். ஆனேன்.
அத்தனை முயற்சிகளிலும் என்னுடைய பெற்றோர் எனக்கு ஊக்கமும் அளித்தது செலவும் செய்தது மிகப் பெரிய விஷயம்” என மகிழ்கிறார் பூங்குழலி.
அச்சம் தவிர்ப்போம்
ஐந்தாவது முயற்சிக்கு இடையே ரிசர்வ் வங்கியின் ‘கிரேட் பி’, தமிழகத்தின் குரூப் 1 ஆகிய தகுதித்தேர்வுகளை எழுதியது பூங்குழலிக்கு நல்ல பலனை அளித்தது. குரூப் 1-ல் தமிழகத்தின் நான்காவது ரேங்க் கிடைத்தபோது யூ.பி.எஸ்.சி.யில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது.
ஐ.பி.எஸ். பெண்களுக்கு ஒத்துவராது, ஐ.எஃப்.எஸ். ஆனால் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டிவருமே என பயந்து முதல் நான்கு முயற்சிகளில் அவ்விரண்டையும் பூங்குழலி தேர்ந்தெடுக்கவில்லை. பிறகு, உண்மையை உணர்ந்தவர், ஐந்தாவது முயற்சியில் அவ்விரண்டையும் குறிப்பிட்டதில் ஐ.பி.எஸ். கிடைத்தது.
ஐ.பி.எஸ். ஆனதால் இப்போது பெண்களுக்கு அதிகமாக சேவை செய்ய முடிவதை நினைத்து மகிழ்கிறார் பூங்குழலி. இவரது பேட்சின் 150 ஐ.பி.எஸ்.களில் 27 பேர் பெண்கள்.
முன்னுதாரணமானவர்
“பெண் என்பதற்காக என்னுடைய பெற்றோர் எந்தப் பாரப்பட்சமும் என்னிடம் காட்டியதில்லை. அதனால் நான் துணிச்சலாகவே வளர்ந்தேன். பயிற்சிக்காகத் தனியாகவே டெல்லியில் தங்கிப் படித்தேன். கன்னூரின் பயிற்சி ஏ.எஸ்.பி.யாக இருந்தபோது சத்திரக்கல் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் பணியில் நல்ல அனுபவம் கிடைத்தது. அரசியல் ரீதியாகப் பதற்றம் நிறைந்ததாகக் கருதப்படும் அந்தப் பகுதியில் சிறப்பாகப் பணியாற்றியதாகப் பாராட்டு பெற்றேன். குறிப்பாகப் பெண்கள், ஆண் அதிகாரியிடம் சொல்லத் தயங்கும் பிரச்சனைகளை என்னிடம் நேரடியாகச் சொன்னதால் பல வழக்குகளில் எளிதாகத் தீர்வு காண முடிந்தது. இப்போது, என்னிடம் ஆலோசனை கேட்கும் பெண்களுக்கு ஐ.பி.எஸ். தேர்ந்தெடுக்கச் சொல்கிறேன்” எனப் பெருமிதம் கொள்கிறார்.
No comments:
Post a Comment