சாதனையால் கிண்டலுக்குப் பதிலடி - சி.எம்.கார்ல் மார்க்ஸ்



#உத்வேகம் 



பலர் கிண்டலடித்தபோது, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு ஐ.சி.எல்.எஸ். எனும் இந்தியப் பெருநிறுவனச் சட்டப்பணி (Indian Corporate Law Service) பெற்றுள்ளார் சி.எம்.கார்ல் மார்க்ஸ். 2009 பேட்ச் அதிகாரியான இவர் தற்போது ஜார்கண்ட் மாநிலப் பதிவாளராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன் சென்னையின் நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தின் உதவிப் பதிவாளராகவும் பிறகு துணைப் பதிவாளராகவும் பணி செய்தார். அப்போது புதுச்சேரி மாநிலப் பொறுப்பு பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

மதுரையைச் சேர்ந்த மார்க்ஸ் தமிழ் வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பைப் படித்தார். இவருடைய தந்தை சி.மதிசேகரன், தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
மேற்படிப்பில் ஜவுளிப் பிரிவில் பிடெக் தேர்ந்தெடுத்தார் மார்க்ஸ். இதன் இறுதி ஆண்டில் துறையின் தலைவர் ஒரு முறை வகுப்பில் மாணவர்களிடம் “அடுத்து என்ன படிக்க விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார். அப்போது பலரும் கேட், எம்.டெக்., எம்.எஸ்., எம்.பி.ஏ. என்றபோது, மார்க்ஸ் மட்டும் ஐ.ஏ.எஸ். எனக் கூறியுள்ளார்.

இதைக் கண்டு துறைத் தலைவர் உட்பட அனைவரும் சிரித்துள்ளனர். தன்னைக் கிண்டலடித்தவர்களிடம் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பதைச் சவாலாக எடுத்துக்கொண்ட மார்க்ஸ், யூ.பி.எஸ்.சி. தேர்வை வெல்வதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இதற்காக 2003-ம் ஆண்டு முதல் எடுத்த ஆறு முயற்சிகளின் இறுதியில் ஐ.சி.எல்.எஸ். பெற்றிருக்கிறார்.

“எனக்கும் சில ஆசைகள் உண்டு என்பதை ஏற்காமல் என்னைச் சுற்றி இருந்தவர்கள் கிண்டலடித்தார்கள். இது உன்னால் முடியுமா என யாராவது கிண்டலடித்தால் அதைக் கண்டிப்பாகச் செய்து காட்டும் குணம் எனக்குச் சிறு வயது முதல் உண்டு. இதைப் பல விஷயங்களில் செய்து காட்டிய நான் யு.பி.எஸ்.சி.யிலும் வெற்றி பெற்றேன். எனது விருப்பத்தின்படி ஐ.சி.எல்.எஸ். அறிமுகப்படுத்தி அதன் முதல் பேட்ச் வெற்றியாளராகத் தேர்வு பெற்றேன். 2002-ல் பிடெக் முடித்தவுடன் யூ.பி.எஸ்.சி.க்கு எப்படித் தயாராவது என்பது பற்றிய எந்த அறிவும் இல்லாமல் முதல் முயற்சி செய்தேன்.

அடுத்த முயற்சியின்போது, யூ.பி.எஸ்.சி. எழுதி நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருந்த அன்பழகன் என் உறவினர் மூலம் அறிமுகமானார். தற்போது சத்தீஸ்கர் மாநிலப் பிரிவின் 2003 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது வழிகாட்டுதல் என் வெற்றிக்கு உதவியது. எனது விருப்பப் பாடமாகத் தமிழ் இலக்கியத்தையும் புவியியலையும் எடுத்திருந்தேன். சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் புவியியலுக்கு மட்டும் பயிற்சி பெற்றேன். இதன் நிர்வாக இயக்குநர் சங்கர் அளித்த ஆக்கமும், ஊக்கமும் எனது வெற்றிக்கு அடித்தளமிட்டன” என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

 - மார்க்ஸ்

புதியவர்களுக்கான யோசனை

“யூ.பி.எஸ்.சி. வெல்வது மிகவும் எளிது. இதற்காக முடிந்தால் கடினமாக உழைத்துப் படியுங்கள். இல்லை எனில், பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்தாலே மூளையில் பதிந்துவிடும். இது என் சொந்த அனுபவம். நாம் யூ.பி.எஸ்.சி.யை வெல்ல லட்சியம் கொள்வது அவசியம். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற நாம் வாழும் சூழல், பணியாற்றும் சூழல் குறித்த முழுமையான அறிதல் அவசியம். ஏனெனில், நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் தொடர்பானதாகவே நேர்முகத் தேர்வின் கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.” என யோசனை கூறுகிறார்.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN