பாராளுமன்ற முடக்கம் ஜனநாயகத்தில் ஆரோக்கியமற்ற போக்கு (CAPF 2018 )

NON PERFORMING PARLIAMENT, UNHEALTHY TREND IN DEMOCRACY (CAPF 2018 )

பாராளுமன்ற முடக்கம் ஜனநாயகத்தில் ஆரோக்கியமற்ற போக்கு (CAPF 2018 )

TopicEssay

நன்றி : தமிழ் ஹிந்து 

18-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்


18  வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை முடங்கின. இதற்கு, காவிரி மீது அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் காரணமாக இருந்தன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாகம் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி வாரத்தின் தொடக்க தினமான இன்றும் மக்களவை கூடியவுடன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். தங்கள் கைகளில் காவிரி பிரச்சினையை குறிப்பிட்டு பதாகைகளை ஏந்தியிருந்தனர்.


காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்றபடி இருந்தனர். தங்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியபடி இருந்தனர்.
காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே, ‘எஸ்சி, எஸ்டிக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதையும், சிபிஎஸ்இ வினாத்தாள்கள் வெளியானதன் மீதும் அவையில் விவாதிக்க விரும்புகிறோம்’ எனக் குறிப்பிட்டார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான அனந்தகுமார், ‘எங்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதிக்க அரசும் விரும்புகிறது. ஆனால், தற்கு முன்பாக அவையில் அமளி இல்லாமல் அமைதி திரும்ப வேண்டும்’ எனத் தெரிவித்தார். எனினும் தொடர்ந்த அமளியால் அவை கூடிய சில நிமிடங்களில் கேள்வி நேரமும் நடைபெறாமல் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் கூடிய மக்களவையில் அமளி தொடரவே இன்று நாள் முழுவதிலும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு முன்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், ’அவையில் நிலவும் அமளியின் காரணமாக இன்றும் மத்திய அரசின் மீது பல்வேறு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தம்மால் விவாதத்திற்கு எடுக்க முடியவில்லை’ எனத் தெரிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மத்திய அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி கோஷம் எழுப்பியது. பல்வேறு வங்கிகளின் ஊழலை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ். அமளி செய்தது. சிறப்பு அந்தஸ்திற்காக தெலுங்தேசம் கோர, காவிரி பிரச்சினையை முன்வைத்து திமுக, அதிமுக உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இது, அவையின் துணைத்தலைவர் எம்.வெங்கய்யநாயுடு தனது இருக்கையில் அமருவதற்கு முன்பாகவே தொடங்ககப்பட்டு விட்டது. இதனால், அவையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் போனது. இன்றைய தினம் வெறும் ஆறு நிமிடங்களுக்காக நடைபெற்றது.
இது குறித்து மாநிலங்களவையில் பேசிய துணைத்தலைவர், ‘இதன்மூலம் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த தவறான நடவடிக்கைகளை நேரலையில் பார்த்து வருகின்றனர். நாடாளுமன்றத்தை வேடிக்கைக்குரியதாக நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த தவறான நடவடிக்கைகளை நேரலையில் பார்த்து வருகின்றனர். நாடாளுமன்றத்தை வேடிக்கைக்குரியதாக நீங்கள் செய்வது கண்டனத்துக்குரியது’ என எச்சரித்தார். தொடர்ந்து அவர், இன்றைய நாள் முழுவதிலும் அவையை ஒத்தி வைத்தார்.
நாளை மீண்டும் கூடவிருக்கும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் இந்த அமளி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நம் ஜனநாயகத்தை செப்பனிட வேண்டும்


இந்திய ஜனநாயகத்துக்கு ஏதோ ஆகிவிட்டது. நாடாளுமன்ற கூட்டத் தொடர்களைக் கெட்ட ஆவி பிடித்து ஆட்டுகிறது. மிகவும் மந்தமாக மீண்டுவரும் பொருளாதாரம் குறித்தும், மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் விவாதிக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்து பேச வேண்டிய ஊழல் எது என்று சிந்தித்து வருகிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் முடக்குவது எப்படி என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிந்தித்து வரும் வேளையில், எதற்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டோம் என்பதையே மறந்து குழி முயல்களைப் போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள்.
ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 3 வாரங்களாக ‘லலித்(மோடி)கேட்’ ஊழல் தொடரில் சிக்குபவர்கள் யார் என்று தொலைக் காட்சியில் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதை மிஞ்சிவருகிறது ‘வியாபம்’ ஊழல் தொடர். பாரதிய ஜனதா கட்சியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகிறது ‘வியாபம்’. தாங்கள் சொல்லும் ஆளும்கட்சி முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்று அறிவித்துவிட்டது காங்கிரஸ்.
இந்த நிலைமை இப்படியே தொடரக்கூடாது. அரசியல் சூழலை பாதித்துவரும் சில அம்சங்களைக் களைந்தே தீர வேண்டும்.
முதலாவதாக, நாட்டில் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு அல்லது சில மாநிலங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் மத்திய அரசு முக்கியமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் நிர்வாக முடிவுகளையும் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது.
இரண்டாவதாக, எதிர்க்கட்சிகள் நினைக்கும்போதெல்லாம் எதையாவது வலியுறுத்தி பிடிவாதம் பிடித்து அவை நடவடிக்கைகளை நடத்தவிடாமல் முடக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும். காலையில் அவை கூடி ஒத்திவைக்கப்பட்டதும் அடுத்து மீண்டும் கூடுவதற்குள் நாடாளுமன்றத்தின் மையப் பகுதிக்குள் எப்படி எகிறிக் குதிக்க வேண்டும், நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த எப்படி கோஷமிட வேண்டும், தேசத்துக்கான செயல்திட்டத்தை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இப்படி அடிக்கடி தொல்லை தந்த ஐரிஷ் உறுப்பினர்களை அவைக் காவலர்களைவிட்டு தூக்கி வீதியில் விட்டபோதுதான், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை கடுமை யானது என்று அவர்கள் உணர்ந்தனர்.
நம் நாட்டு நாடாளுமன்ற உறுப்பி னர்களை அதிக நாள்களுக்கு உழைக்க நாம் வலியுறுத்த வேண்டும். இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு 67 நாள்கள் மட்டுமே கூடுகிறது. பிரிட்டனில் 150 நாள்களுக்கு நடக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றம் ஆண்டுக்கு 200 நாள்கள் நடை பெறுகிறது. மழைக்காலக் கூட்டத் தொடர் ஏன் 3 வாரங்களுக்கு மட்டும் கூட்டப்பட வேண்டும், 3 மாதங்களுக்கு நடந்தால் என்ன? அவை உறுப்பினர்களில் மூன்றில் இரு பகுதியினர் விரும்பினால்கூட அவை கூடும் என்ற நடைமுறை இந்தியாவிலும் வரவேண்டும். நீண்ட நாள்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்தால் அவ்வப்போது எதிர்க்கட்சியினர் தங்களுடைய கோபத்தை, அதிருப்தியை வெளிப் படுத்த வாய்ப்பு ஏற்படும். முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க போதிய நேரம் கிடைக்கும். பிரிட்டனில் அவை கூடும் 150 நாள்களில் 20 நாள்களுக்கான விவாதப் பட்டியலை அல்லது நிகழ்ச்சி நிரலை எதிர்க்கட்சித் தலைவர்தான் தீர்மானிக்கிறார்.
மூன்றாவதாக, பிரிட்டனிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் இந்தியாவிலும் நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் இன்ன மாதம், இன்ன தேதியில்தான் நடைபெறும் என்று நிரந்தரப்படுத்த வேண்டும்.
இதனால் ஒவ்வொரு மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலையும் பார்த்து முடிவுகளை அறிவிக்கும் ஒழுங்கற்ற போக்குகள் முடிவுக்கு வரும். ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள் வதற்காகச் செய்யும் சமாதானங்களும் குறையும்.
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஆண்டின் குறிப்பிட்ட தேதிகளில்தான் தேர்தல் என்பதை சட்டப்பூர்வமாகவே நிர்ணயித்துவிட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தால்கூட எஞ்சிய கட்சிகளும் தலைவர்களும் சேர்ந்து மாற்று அரசை எஞ்சிய பதவிக்காலத்துக்கு நடத்தியே தீர வேண்டும். அப்படி இல்லையென்றால் அடுத்த தேர்தல் வரும் நாள் வரை குடியரசுத் தலைவர் ஆட்சிதான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் தேதியில் நிச்சயமற்ற தன்மை கூடாது என்பது என்னுடைய புதிய யோசனையல்ல. நிர்வாக சீர்திருத்த கமிஷன் இதை ஏற்கெனவே பரிந்துரைத்திருக்கிறது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அதை ஏற்று வழிமொழிந் திருக்கிறார்; நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் தேர்தல்கூட டெல்லியில் அரசு நிர்வாகத்தைச் செயல்படவிடாமல் முடக்கிவைக்கிறது என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டிருக்கிறார். இப்போது நாச்சியப்பன் தலைமையிலான குழு இந்த சீர்திருத்தம் குறித்துப் பரிசீலிக்கிறது. மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று அத்வானி கூறியிருந்தாலும் ஐந்தாண்டுகளுக்கு இடையில் ஒரு தேதியையும் உடன் நிர்ணயிப்பது, நிலைமை மோசமாகாமல் பாதுகாக்க உதவும் என்று கருதுகிறேன்.
மேற்கொள்ளப்பட வேண்டிய நான்காவது சீர்திருத்தம் யாதெனில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது மாற்று அரசியல் அணி எது என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்துத் தெரிவிக்க வேண்டும். ஜெர்மனியில் அப்படித்தான் நடைமுறை. அப்போதுதான் ஆட்சி யைக் கவிழ்த்துவிட்டு அப்புறம் பேரம் பேசிக்கொள்ளலாம் என்ற அணுகு முறை தவிர்க்கப்படும். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் களிடமும் சட்டப் பேரவை உறுப்பினர்களிடமும் ஒழுங்கும் கட்டுப்பாடும் ஏற்படும்.
ஐந்தாவது சீர்திருத்தம் விளையாட்டு சங்கங்களிலிருந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலக்கிவைப்பது. சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுக் கப்பட்ட உடனேயே விளையாட்டு அமைப்புகளிலிருந்தும் விலகிவிட வேண்டும் என்ற சட்டம் இயற்றப் பட்டிருந்தால் லலித் மோடி விவகாரமே பெரிதாகியிருக்காது.
வெற்றிகரமான ஜனநாயகம் என்பது மக்களுடைய மாறுபட்ட தேவைகளுக்கேற்ப சட்டங்களை இயற்றுவதிலும் திட்டங்களை வகுப்பதிலும்தான் இருக்கிறது. நாம் ஏன் தேர்ந்தெடுத்து அனுப்பினோம் என்பதை நம்முடைய பிரதிநிதிகளின் முகத்துக்கு நேராக நாம் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்முடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்லவும், விவாதிக்கவும், தீர்வு காணவும்தான் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கின் றனர்.
மக்களுடைய வரிப் பணத்தையும் மக்களுக்கான நேரத்தையும் வீணாக்குவதற்காக அல்ல. நாம் எப்படி நடந்தாலும் மக்கள் நம்மை எதுவும் கேட்கமாட்டார்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நினைத்துவிடக்கூடாது.

பாராளுமன்ற விவாதங்கள் எங்கே?


மார்ச் மாதம் வந்து விட்டால் தனிநபர் வருமான வரி செலுத்துதல், நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர கணக்குகளை முடித்துக் கொண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல் என்பது வாடிக்கையாகும். அத்துடன் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டையும் இரு அவைகளிலும் விவாதித்து விட்டு சில, பல வேண்டிய மாற்றங்களை எல்லாம் செய்து விட்டு மார்ச் 31–க்குள் நிறைவேற்றுவதும் முக்கிய கடமையாகும். காரணம் அப்படி நிறைவேற்றப்பட்ட பிறகு தான் எல்லா அமைச்சகங்களுக்கும் தேவையான நிதியை ஒதுக்கி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுகளை தடையின்றி தொடர முடியும்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டின் முக்கியத்துவம் அரசு எந்த துறைக்கு எத்தகைய முக்கியத்துவம் தருகிறது. அதற்கான திட்டங்கள் என்ன? அப்படி ஒதுக்கீடு செய்யப்படும் தொகை சரிதானா? மேலும் அப்படி தரப்பட்ட நிதி இதற்கு முந்தைய ஆண்டில் சரியாக உபயோகமானதா? அல்லது கிடப்பில் பயனற்று இருந்ததா?
இப்படி பல கேள்விகளுக்கு விடையை தானே ஜனநாயக நாட்டில் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவது? அதை சரிவர செய்திட மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய கடமையாகும், உண்மையில் அதற்கு என்று தானே அவர்கள் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அங்கு அனுப்பிடப்பட்டு உள்ளார்கள்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் சமாச்சாரங்களை சரிவர விவாதித்து, தேவையான மாற்றங்களுடன் இறுதி வடிவம் பெற்று நிறைவேற்றப்படுகிறதா? என்ற சந்தேகக் கேள்வி எழத்தான் செய்கிறது.
இந்த முறை கடந்த வார இறுதியில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா 21 திருத்தங்களுடன் எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டு விட்டது. முப்பது நிமிடங்களில் இந்திய ஜனநாயகத்தின் அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டாக ரூ.90 லட்சம் கோடிக்கான நிதி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது!
ஆக மார்ச் 31–க்குள் நிறைவேற்றப்பட்டு விட்டதால் அடுத்த நிதி ஆண்டில் தேவைப்படும் நிதி அனைத்து துறைகளுக்கும் கிடைத்து விடும் என்பதால் அரசு இயந்திரம் எந்த சிக்கலுமின்றி செயல்படும் என்பது மகிழ்ச்சியான செய்தி என்பதும் உண்மை தான். ஆனால் ஜனநாயக நாட்டில் இப்படி எந்த விவாதமுமின்றி நிறைவேற்றப்படுவது, ஜனநாயகத்தின் மீது அரசியல்வாதிகளின் யுத்தம் போல் அல்லவா இருக்கிறது!
ஆட்சியில் உள்ளவர்கள் மீது குற்றம் கூறி விடவும் முடியாது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்துத் தான் மக்கள் தேர்வு செய்ததால், அவர்களது திட்டங்கள் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி வரவேற்கலாம்.
ஆனால் எது அவசியம்? எது தேவையற்றது? என்பதை எப்படி அரசிடம் கூறுவது? எதிர்கட்சிகள், அரசின் ஆதரவு கட்சிகளின் கடமை தனிநபரின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் அல்லவா?
ஆனால் எதிர்கட்சிகள் குறிப்பாக தேசிய காங்கிரஸ், தெலுங்கு தேசம், அண்ணா தி.மு.க. கட்சிகளின் பிரதிநிதிகள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளிதுமளியில் ஈடுபட்டு வந்ததால் அவையில் விவாதம் ஏதும் நடக்க அவகாசமே இல்லை.
குறிப்பாக மக்களவையில் தற்போதைய கூட்டத்தொடரில் ஒரு நிமிடம் கூட இன்று வரை எந்த நடப்பும் நடத்த முடியாமல் தவிக்கிறது. அதை சுட்டிக்காட்டி ராஜ்ய சபாவின் தலைவர் நமது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் மனவேதனைப்பட்டு, இப்படி கூச்சல் குழப்பம் மட்டும் தொடர்ந்தால் பாராளுமன்றத்தின் மீது மக்களின் நம்பிக்கை முழுமையாக போய்விடும், அதன் காரணமாக நாடு பாதை தவறி போய்விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலங்களின் பிரச்சினையை பற்றி மத்திய அரசு அக்கறையின்றி செயல்பட்டால் அவர்களுக்கு புரிய வைக்க பாராளுமன்றத்தில் போராட்டம் தேவை தான். ஆனால் இப்படி தொடர்ந்து அவையை முடக்கி விட்டால் தேசத்தின் நலனையே பாதிக்கும். முக்கிய மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமல் மறைமுகமாக அதிவேகத்தில் அமுலுக்கும் வந்தால் பாதிப்பு நாட்டு மக்களுக்குத் தான்.
மத்திய அரசை எதிர்க்க வேண்டியது தான், அதே சமயம் முக்கிய விவாதங்களில் பங்கேற்கவும் வழிமுறைகள் கண்டாக வேண்டும். மோடி அரசு எதிர்க்கட்சி எம்.பி.க்களை மறைமுகமாக தூண்டிவிட்டு, தங்களுக்கு சாதகமான சில, பல சட்ட திருத்தங்களை செய்து கொள்வதும் புதிய மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதும் அரசியல் சூழ்ச்சியாகவும் அல்லவா தெரிகிறது.
இப்படி எந்த விதத்திலும் சமீபமாக செம்மையாக செயல்படாத எம்.பி.க்களுக்கு பல மடங்கு ஊதிய உயர்வும், அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டு நன்கொடை சட்டத்தில் மாற்றங்களும் அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் தாராளமாக வெ ளிப்படையாக நிதியை தரலாம் போன்ற சட்டங்கள் எந்த விவாதமும் நடத்தப்படாமல் அப்படியே மோடி அரசால் கொண்டு வரப்பட்டு இருப்பதை உற்றுப் பார்க்கும்போது பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை கண்டு மக்கள் கவலைப்படுவது சரிதான் என்பது புரிகிறது.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN