எல்லைகளை விரிக்கும் நீதித் துறை



டந்த நவம்பர் 29-ல் சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி ‘என்கவுண்டர்’ வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணை நடவடிக்கைகளைச் செய்தியாக வெளியிடுவதற்குத் தடை விதித்தது. 2007-ல் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் வெறுப்பூட்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கிலும்கூட அலகாபாத் உயர் நீதிமன்றம் இதைப் போல தடை விதித்திருந்தது. அதையடுத்த சில நாட்களிலேயே வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றமும் இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதித் துறை, செய்தித் தணிக்கையை
அங்கீகரிக்கும் வகையில் தங்களது அதிகார எல்லையை விரிவுபடுத்தும் அபாயகரமான சூழலை இந்த இரண்டு சம்பவங்களும் பிரதிபலிக்கின்றன. எனவே இரண்டையும் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 1962-ல் கேதார்நாத் வழக்கில் அரசை விமர்சிப்பது தேசத்துரோகம் ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நீதிமன்றம் 2016-ல் அவதூறு சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இப்படி ஒன்றுக்கொன்று முரணான வகையிலேயே கருத்துச் சுதந்திரத்தை இந்திய நீதித் துறை அணுகிவந்திருக்கிறது. தற்போது, அது கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்ட விவாதங்களை நிராகரிக்கவும் தொடங்கியுள்ளது.
நீதிமன்றங்கள் தங்களது அதிகார எல்லைகளை மீறி, செய்திகளைத் தணிக்கை செய்வதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பது கவனத்துக்குரிய விஷயம். நீதித் துறையை விமர்சனம் செய்யும் ‘ஜாலி எல்.எல்.பி-2’ என்ற திரைப்படத்தில் காட்சிகளை நீக்கச் சொல்லி மும்பை உயர் நீதிமன்றம் கமிட்டியை உருவாக்கியது, ஆணுறை பாக்கெட்டுகளில் இடம்பெறும் படங்களுக்கு இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சிலின் அனுமதி பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது, திரையரங்குகளில், ஒவ்வொரு திரையிடுதலுக்கு முன்னரும் தேசிய கீதம் ஒலிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன.


Image result for judicial activism

அவற்றைத் தொடர்ந்து தற்போது சிபிஐ நீதிமன்றமும் அலகாபாத் உயர் நீதிமன்றமும் செய்திகளை வெளியிடுவதற்குத் தடை விதித்துள்ளன. இத்தடையானது, நமது அரசியலமைப்பின் அடிநாதமாக இருக்கும் ஜனநாயக முறையையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின்படி, நீதிமன்றங்களின் பணி என்பது நீதி வழங்குவதுதான். நீதியமைப்பால் வரையறுக்கப்பட்டபடியும் வெளிப்படையாகவும் ஜனநாயகமான முறையிலும் அவை செயல்பட வேண்டும். நீதித் துறையின் இந்த அதிகாரமும்கூட பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தேர்தல் மூலமாகவோ உருவானதல்ல. அரசியல் சட்டம் கூறியுள்ளபடியும், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலும் பெற்ற அதிகாரம்தான். மேலும் நீதிமன்றங்கள் எடுக்கின்ற சட்டபூர்வமான முடிவுகளின் நிலையான தன்மையும் தரமுமே அவற்றின்மீது நன்னம்பிக்கையை உருவாக்கியுள்ளன. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நீதிபதி டிப்லாக் பிரபு குறிப்பிட்டதுபோல, “நீதிமன்ற நடவடிக்கைகள் பொதுமக்களின் காதிலிருந்தும் கண்ணிலிருந்தும் மறைக்கப்படக் கூடாது. அதனால் நீதித் துறையின் தன்னிச்சையான போக்கு அல்லது தனிநபர் போக்குக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் நீதித் துறை நடவடிக்கைகளின்மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது.”

நீதிமன்றத்தின் அதிகார எல்லை எது?

துரதிருஷ்டவசமாக, செய்தி வெளியிடும் சுதந்திரத்தை மறுக்கும் வகையில் சிபிஐ நீதிமன்றமும் அலகாபாத் உயர் நீதிமன்றமும் தடைவிதித்துள்ளன. இதன் ஒரு பகுதியை உச்ச நீதிமன்றமே தொடங்கிவைத்தது. சில குறிப்பிட்ட சூழல்களில், நீதிமன்ற நடவடிக்கைகள் செய்தியாவதைத் தடுப்பதற்காக ‘தேதியைத் தள்ளிவைக்கும் ஆணை’களைப் பிறப்பிக்கலாம் என்று 2012-ல், உச்ச நீதிமன்றம் கூறியது. கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமை, நேர்மையான நீதி விசாரணைக்கான உரிமை ஆகிய இரண்டும் ஒன்றையொன்று முந்திக்கொள்ள முயற்சிக்கின்றன. இந்த இரண்டு உரிமைகளையும் சமநிலைப்படுத்தும் நோக்கத்தையே உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது. சில நேரங்களில், சில வழக்குகளுக்குக் கிடைக்கும் அதிகப்படியான கவனம் விசாரணையைப் பாதித்துவிடக்கூடும் என்று கருதிய உச்ச நீதிமன்றம், நியாயமானதாகவும் சரியானதாகவும் இருக்கும் என்கிறபட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றி செய்திகளை வெளியிடக்கூடாது என்று ‘முன்கூட்டியே கட்டுப்பாடு’களை விதிக்கலாம் என்றும் கூறியது.
இங்கு இரண்டு சிக்கல்கள் எழுகின்றன. முதலாவது, ‘ஊடக விசாரணைகள்’ என்ற கருத்தாக்கம்; போதிய சட்டப் பயிற்சியில்லாமல் அதே நேரத்தில் அரசியல் செல்வாக்குக்கு அப்பாற்பட்டு இயங்கவேண்டிய பனிரெண்டு பேர்களைக் கொண்ட ஒரு ஜூரி மன்றமான சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம் குறித்து முடிவெடுப்பதில் செய்திகள் தடையாக இருக்கும் என்று நினைக்கிறது. இந்தியாவில், 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜூரி முறையை ஒழித்துவிட்டோம், தற்போது நீதிபதிகளே வழக்குகளில் முடிவெடுக்கிறார்கள்.
நீதிபதிகள் என்னும் வரையறை, சட்டத்தைச் செயல்படுத்தும் வேலையோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை, அது தொடர்பான நீண்ட கால பயிற்சியையும் குறிக்கும். நீதிமன்றத்துக்கு வெளியே எந்தவிதமான கூக்குரல்கள் எழுந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் சட்டத்தைச் செயல்படுத்தும் இயல்பைக் கொண்டவர்களே நீதிபதிகளாக இருக்க வேண்டும். குறுக்கீடுகள் இல்லாத நீதி விசாரணை என்ற வாதம், சர்ச்சைக்குரிய வழக்குகளை முடிவுசெய்யும் நீதித் துறையின் தன்னம்பிக்கையையே சந்தேகிக்க வைத்துள்ளது.
இரண்டாவதும் மிக முக்கியமானதுமான விஷயம், உச்ச நீதிமன்றம் 2012-ல் அளித்த தீர்ப்பு. வழக்கத்துக்கு மாறான வகையில், ‘முன்கூட்டியே கட்டுப்பாடு’கள் விதிக்கத்தக்க வழக்குகள் என்னென்ன என்பதற்கான விளக்கங்கள் அந்தத் தீர்ப்பில் இல்லை. மேலும், அத்தகையக் கட்டுப்பாடுகளுக்கான கால அளவு என்ன என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில், ‘நியாயமான, ‘சரியான’ என்பது போன்ற எளிதில் வரையறுக்க முடியாத வார்த்தைகளை வருங்காலத்தில் நீதிமன்றங்கள் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டது.

தவறான செய்திகளை எப்படிக் கையாளலாம்?

நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் துல்லியமாக இல்லை; தலைப்புச் செய்திகளின் சுவாரஸ்யத்துக்காக, நீதிமன்றங்களின் கருத்துகளை முழுமையாகச் சொல்வதில்லை. சில சமயங்களில், அவை தவறாகவும்கூட இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அலகாபாத் நீதிமன்றம் அப்படி தவறாக வெளியிடப்பட்ட செய்தி என்று எதையுமே உதாரணம் காட்டவில்லை. தவறான செய்திகளை வெளியிட்டால் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இருக்கிறது. தவறான செய்திகளை ஒழித்தே ஆக வேண்டும் என்றால், நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்குக் கிடைக்கும் வகையில், படியெடுத்துக் கொடுக்க வேண்டும். அதுதான் சரியான வழிமுறையாக இருக்க முடியும். அது நடக்காத வரையில், ‘தவறான செய்தி’களைத் தடுக்கிறோம் என்ற காரணத்தைச் சொல்லி நீதிமன்ற நடவடிக்கைகளைச் செய்தியாக வெளியிடுவதற்குத் தடை விதிப்பது பூச்சாண்டி காட்டுகிற வேலை.
விசாரணை நீதிமன்றங்களும் உயர் நீதிமன்றங்களும் செய்திகளை வெளியிடுவதற்குத் தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றத்திடமிருந்தே சமிக்ஞையைப் பெற்றிருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றமே தனது வரம்பை மீறி அப்படியொரு தடையைப் பிறப்பித்தது. நீதிபதி கர்ணனைத் தண்டித்தபோது, மூத்த நீதிபதிகள் எழுவர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அமர்வு, “மேற்கொண்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் கூறுகின்ற எந்தவொரு கருத்தையும் வெளியிடக் கூடாது” என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் தேவையெனக் கருதினால் அப்படியொரு உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டதோ என்ற சந்தேகமும்கூட எழுகிறது.
செய்திப் பரவலாக்கமே அனைத்து வகையான சமூக, பொருளாதாரத் தீங்குகளுக்கும் தீர்வு. அதுவே சிறந்த தீர்வு!
- கவுதம் பாட்டியா,
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்.
© தி இந்து (ஆங்கிலம்)
சுருக்கமாகத் தமிழில்: புவி

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN