INTERNATIONAL RELATION
சபாகர் துறைமுகத்தின் முதல் பகுதி செயல்பாட்டை தொடங்கி வைத்த ஈரான் அதிபர் ஹஸன் ரௌஹானி. (கோப்புப் படம்)
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எப்போதுமே நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இந்தியர்கள் மீது, இந்தி படங்கள் மீது ஆப்கான் மக்களுக்கு அலாதி பிரியம் உண்டு. இடையில் பாகிஸ்தான் இருந்தாலும் அதையும் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்பு நிலவுகிறது. அதனால்தான் தீவிரவாதத்துக்கு எதிரான போரில், ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா உதவி வருகிறது. அந்நாட்டின் ராணுவ வீரர்களுக்கு போர்ப் பயிற்சி அளிப்பது, போலீஸ் துறைக்கு காவல் பயிற்சி அளிப்பது போன்ற உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இதுபோக பெருமளவில் மானிய உதவிகளையும் செய்கிறது.
ஆப்கனிஸ்தான் நிலத்தால் சூழப்பட்ட நாடு. கடல் வழி மார்க்கம் கிடையாது. கப்பல் மூலம் வரும் பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் இறங்கி, அங்கிருந்து லாரிகள் மூலம் ஆப்கனிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுவதுதான் வழக்கம். இந்தியாவில் இருந்து கோதுமை லாரிகள் நேரடியாக ஆப்கான் செல்ல வேண்டுமென்றால், அவை பாகிஸ்தான் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதற்கு பாகிஸ்தான் அனுமதி வேண்டும். தன்னுடைய வர்த்தகம் பாதிக்கும் என்பதாலும் இந்தியாவுடனான மோதல் காரணமாகவும் இதுபோன்ற ஒரு ஏற்பாட்டுக்கு பாகிஸ்தான் சம்மதிப்பதில்லை. சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு சென்றால், செலவு அதிகரிக்கும். என்ன செய்யலாம் என யோசித்த இந்தியாவின் மூளையில் உதித்ததுதான் சபாகர் துறைமுகத் திட்டம்.
ஈரான் நாட்டின் தென்முனையில் ஓமன் வளைகுடாவில் அமைந்த இயற்கையான துறைமுகம் சபாகர். இங்கு துறைமுகம் அமைப்பது தொடர்பாக ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல ஆண்டுகள் முன்பே ஒப்பந்தம் போடப்பட்டது. 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயும் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஈரான் அதிபர் கடாமியும் கையெழுத்திட்டனர். சபாகர் துறைமுகம் மூலம் பெர்சிய வளைகுடா நாடுகள், ஆப்கனிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கடல்வழி மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகளை உருவாக்கி வர்த்தகத்தை அதிகரிப்பதுதான் இரு நாடுகளின் நோக்கமும். ஆனால், அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இந்தத் திட்டம் நிறைவேறாமல் முடங்கியது. அணு ஆயுத பரவல் தடுப்பு விவகாரம் தொடர்பாக, அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளைக் கொண்டுவந்தது. இதனால் இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அதன்பிறகு, அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் உருவானதால், மீண்டும் இந்தத் திட்டம் சூடுபிடித்தது.
சீனாவின் நிதியுதவியோடு பாகிஸ்தானில் உருவாகி வரும் குவாடர் துறைமுகத்தில் இருந்து 72 கி.மீ. தூரத்தில்தான் சபாகர் இருக்கிறது. இதனாலேயே இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது சபாகர் துறைமுகம். மேலும் ஆப்கனிஸ்தானில் இருந்து சபாகர் துறைமுகத்துக்கு சாலை வசதியை பல கோடி செலவில் இந்தியா செய்திருந்தது. அதோடு, 2015-ம் ஆண்டில் ஈரானின் அணுஆயுதத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்திருந்தது. அப்போது ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி இந்தியா வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து சபாகர் திட்டம் குறித்து வலியுறுத்தினார். அடுத்த ஆண்டே இந்தியா - ஆப்கனிஸ்தான் - ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடந்தன. ரூ.549 கோடியில் சபாகர் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் முடிந்து, கடந்த 30-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன்படி, இங்கு 2 பெர்த்துகளை இந்தியா இயக்கும்.
இந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்கள் இங்கு தங்கிச் செல்லும். எரிபொருள் வளமிக்க ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் ஆப்கனிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தத் துறைமுகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது இந்த துறைமுகம் ஆண்டுக்கு 25 லட்சம் டன் சரக்குகளை மட்டுமே கையாளும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதை ஆண்டுக்கு 8 கோடி டன்னாக அதிகரிப்பதுதான் எதிர்காலத் திட்டம்.
ஆப்கனிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து முதல் கட்டமாக 1 லட்சம் டன் கோதுமை கப்பலில் புறப்பட்டு, அக்டோபர் 29-ம் தேதி சபாகர் துறைமுகத்தை சென்றடைந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம் ஆப்கனிஸ்தானுக்கு கோதுமை கொண்டு செல்லப்பட்டது. இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தானில் இருந்து கோதுமையை ஆப்கனிஸ்தான் இறக்குமதி செய்து வருகிறது. இதில் பாகிஸ்தான் கோதுமைதான் விலை அதிகம். இப்போது இந்தியாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பாகிஸ்தான் கோதுமைக்கு மவுசு மங்கி விட்டது. அங்குள்ள கோதுமை மாவு மில்கள் மூடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஐஎன்எஸ்டிசி திட்டம்
சீனா தனது வர்த்தக உறவுகளை பலப்படுத்த அமல் செய்து வரும் ஒரே வர்த்தக மண்டலம். ஒரே ரோடு (One Belt One Road) திட்டம் போன்று, இந்தியாவும் சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து காரிடார் (International North south Transport corridor) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2000-மாவது ஆண்டில் உருவான இந்தத் திட்டத்தில் ரஷ்யா, ஈரான், இந்தியா பங்குதாரர்கள்.
ரஷ்யா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகள் வரை இந்தியப் பொருட்களை விரைந்து ஏற்றுமதி செய்ய இந்த திட்டம் உதவும். இதன்படி, மும்பையில் இருந்து கப்பலில் கிளம்பும் சரக்குகள் முதலில் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு செல்லும். அங்கிருந்து சாலை வழியாக காஸ்பியன் கடலில் உள்ள மற்றொரு துறைமுகமான பந்தார் இ அன்ஸாரிக்கு செல்லும். அங்கிருந்து கப்பல் வழியாக ரஷ்யாவின் அஸ்ட்ராக்கன் துறைமுகம் செல்லும். அங்கிருந்து ரஷ்ய ரயில்வே மூலம் ஐரோப்பிய நாடுகள் வரை சரக்குகள் பயணம் செல்லும். இதற்காக மூன்று நாடுகளும் இணைந்து துறைமுகம், சாலை வசதிகளை உருவாக்கும். இந்த திட்டம் முழுமையாக நிறைவேறும்போது, சபாகர் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கும். இதனால், இந்தியாவில் வர்த்தகம் 17 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி தி ஹிந்து தமிழ்
No comments:
Post a Comment