நவீன இந்தியாவில் பெண்

General Studies- I:

Topic
Modern Indian history from about the middle of the eighteenth century until the present

Expected Question for UPSC  exam (Tamil): 


THE WOMEN'S QUESTIONS AROSE IN MODERN INDIA AS A  PART OF THE 19TH CENTURY SOCIAL REFORM MOVEMENT. WHAT ARE THE MAJOR ISSUES AND DEBATES CONCERNING WOMEN IN THAT PERIOD? (UPSC CSE 2017)


நவீன இந்தியாவில் பெண் பற்றிய கேள்வியானது 19ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தங்களுள் ஒன்று. இந்த காலகட்டத்தில் நிலவிய முக்கிய பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் என்ன? (UPSC CSE 2017)


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்  

contact mail ID  tnpscprime@gmail.com





சமூகசீர் சமூகசீர்திருத்தகளும் வேதாந்தங்களும்



மேலைநாட்டு இலக்கியம், கல்வி, அரசியல் சிந்தனைகள், கலாசாரம் இவற்றுடன் புதிதாகத் தோன்றிய ‘மத்திய தர வகுப்பினர்’ என்ற பிரிவினரின் தாக்கத்தையும் முதலில் உணர்ந்த மாநிலம் வங்காளம் தான். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே கல்வி, சமயம், சமுதாயம் என்று
அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களைவிட நூறு ஆண்டுகள் முன்னோக்கிச் செல்லும் மாநிலமாக வங்காளம் விளங்கியது. “இந்தியாதான் வங்காளத்தின் மாகாணமோ” என்று வங்காளத்தின் முற்போக்குச் சிந்தனைகள் குறித்து வியந்தவர் காந்திஜி.
மேலைநாட்டுக் கல்வியும், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றமும் இந்திய சிந்தனையாளர்களிடையே ஒரு புதிய தேசிய உணர்வை ஏற்படுத்தின. ‘தேசிய எழுச்சிவாதிகள்’ எனப்பட்ட சீர்திருத்தவாதிகள், ‘தேசிய மறுமலர்ச்சி’ என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் மூலம் குடும்பம் என்ற கட்டமைப்பிலும், பெண்கள் மீதான கருத்தாக்கத்திலும் மாற்றம் ஏற்படுத்த முனைந்தனர். சமுதாய எழுச்சியை ஏற்படுத்தாமல், தேசிய முன்னேற்றமும், அரசியல் சுதந்திரமும் முழுமையடையாது என்றனர். இதன் மூலம், இந்தியாவை ஒரு ‘நாகரிகமடைந்த நாடாக’ வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினர். ஆங்கிலேய அரசும், இவர்களுடன் இணைந்து பல சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்தியது. ஏனெனில், “நாகரிகமற்ற இனங்களை நாகரிகப்படுத்துவதற்காகவே தங்கள் இனம் படைக்கப்பட்டது என்றும் அதற்காகவே காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தனர்.” எனவே, இத்தகைய சட்டங்களை இயற்றுவதன் மூலம் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றனர்.
‘இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி’ என்று அழைக்கப்பட்ட இராஜாராம் மோகன் ராய் காலத்தில் சமூக எழுச்சி வீறுகொண்டது. இந்துச் சமயத்தில் பின்பற்றப்பட்ட தவறான கருத்துக்கள், நடைமுறைகளைக் கடுமையாக எதிர்த்தார். பாமர மக்களுக்கும் புரியும் வகையில் வேதாந்தத்தை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். சாதிப் பிரிவினையால் தான் மக்கள் நாட்டுப்பற்று இல்லாது காணப்படுகின்றனர் என்றார். மதம் என்ற பெயரில் பெண்கள் மீதான அடக்குமுறைகளை, கொடுமையாகக் கடுமையாகச் சாடினார். பலதார மணங்களை எதிர்த்தார். ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தையும் கைம்பெண் முறையையும் எதிர்த்தார். 1822-இல் எழுதிய “பெண்களின் பண்டைய உரிமைகள்” என்னும் நூலில் பெண்களின் சொத்துரிமை குறித்து வாதிட்டார். இவருக்கு ஆதரவாக, வில்லியம் பெண்டிங், டேவிட் ஹேர், துவாரகநாத் தாகூர், பிரசன்ன குமார் தாகூர் போன்றோரும் வாதிட்டனர்.
அதே சமயம், அத்தகைய சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்த பிற்போக்குவாதிகளும் இருந்தனர். சமூக சீர்திருத்தத்தைவிட அரசியல் சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்தனர். தங்கள் நாட்டில் சீர்திருத்தம் செய்வதற்கு காலனிய ஆட்சியாளர்க்கு உள்ள அதிகாரத்தையும் எதிர்த்தனர். “முதலில் இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம் அளிக்கட்டும். பின்னர் அதே நாளில் நூறு கைம்பெண்களுக்குத் தாம் மறுவிவாகம் செய்துவைப்பதாக பாலகங்காதர திலகர் சூளுரைத்தார். பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி என்பது ‘குரங்கு கையில் கொடுக்கப்படும் கத்தியைப் போன்று ஆபத்தானது” என்றார்.
இவ்வாறு, இந்தியாவில் சமூக சீர்திருத்தம் என்பது ஒரு முக்கோண சட்டத்திற்குள் மாட்டிக் கொண்டிருந்தது. இச்சூழலில், இந்தியா என்னும் நாடு, அதன் இனம் ஆகியவற்றின் ‘பாரம்பரியத்தை சுமக்கும் ஒரு தேசிய அடையாளமாகப் பெண்ணை’ சித்திரித்துக் காட்ட தேசிய எழுச்சிவாதிகள் முயன்றனர். இதன் மூலம் ‘குடும்பம்’ என்னும் இந்தியப் பாரம்பரியத்தின் மீது காலனி சக்தி பதியாதவாறும் பார்த்துக்கொள்ள விரும்பினர். எனவே, ‘குடும்பம்’ என்னும் கட்டமைப்பைச் சிதைக்காமல், அதே சமயம், அதன்மீது தேவையற்றுப் படர்ந்திருக்கும் நச்சுக்களை மட்டும் அகற்றி இந்தியப் பாரம்பரியத்திற்குப் புதிய பொலிவை அளிக்க விரும்பினர்.
*      இந்திய சமுதாயத்தை நவீனமானதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்;
*      அதே சமயம், இந்தியக் குடும்பப் பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டும்;
*      பெண்ணையே இந்தியப் பாரம்பரியத்தின் அடையாளமாகக் காட்ட வேண்டும்;
*      இதற்கென சில சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்;
*      அச்சீர்திருத்தங்களை எதிர்க்கும் பிற்போக்குவாதிகளையும் எதிர்கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில், தேசிய எழுச்சிவாதிகள் ஒரு சூட்சுமமான வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். பண்டைய வேதாந்தங்களில் குறிப்பிடப்படாத, இடைக்காலத்தில் பின்பற்றப்பட்ட சில பழக்க வழக்கங்களை மட்டுமே மாற்ற விரும்பினர். இதற்கு, இவர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டியவை பண்டைய வேதாந்தங்களைத்தான். உதாரணமாக, ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம், கைம் பெண் நோன்பு, இதனால் ஏற்பட்ட இழிநிலை ஆகியவற்றைத் தான் சீர்படுத்த விரும்பினர். இவை, பிற்காலத்தில் மேல்தட்டு வகுப்பினரால் மட்டுமே பின்பற்றப்பட்ட பழக்கங்களாகும். வேதங்கள் பற்றிய கடும் விவாதம் நடைபெற்றது. இவ்விவாதங்களின் கருப்பொருளாக, மையப் பொருளாக இருத்தப்பட்டவள் பெண். தன் மீதான, தன்னைப் பற்றிய விவாதங்களில் கலந்துகொள்ள முடியாத மௌன சாட்சியாகத்தான் பெண் வைக்கப்பட்டு இருந்தார்.
‘ஒரு நாட்டு நாகரிகத்தின் குறியெண் பெண் தான்’ என்று பின்னாளில் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியத்தின் சீரிய நெறிக்குப் பெண்ணே அடையாளமாகக் காட்டப்பட்டாள். கல்வி கற்ற பெண் குடும்பநலன், குழந்தைநலன் பேணுவதில் சிறப்பாகச் செயல்படுவாள் என்று சொல்லப்பட்டது. கல்வி கற்ற பெண், தன் கணவன் பேசும் கருத்துக்களைப் புரிந்துகொள்ளக்கூடிய நல்ல துணையாக இருப்பாள் என்று கூறப்பட்டது. குடும்பப்பாரத்தைச் சீராக சுமந்து செல்லவும், கணவனை ‘வீணை வாசித்து மகிழ்விக்கவும்’, சிறந்த தலைமுறையினரை உருவாக்கவும் பெண் கல்வி அவசியம் என்றே விவாதிக்கப்பட்டது. பெண் கல்வியால் அந்தப் பெண் எப்படி மேம்பாடு அடைகிறாள் என்பதைவிட அதனால் அவள் சார்ந்த குடும்பம் எப்படி மேம்பாடு அடைகிறது என்ற கண்ணோட்டம் தான் இன்னமும் உள்ளது.
19-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்தில் சாஸ்திரங்களும், பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டன. பெண்களின் இழிவான நிலை, அவர்கள் அனுபவித்த கொடுமைகள், இன்னல்களை மையமாகக் கொள்ளாமல், அவற்றைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதே மையமாகக் கொள்ளப்பட்டது. பெண் ஒரு விவாத அரங்கமாக வைக்கப்பட்டு ஆனால் “இந்தியப் பாரம்பரியம்” என்பதை மையமாகக் கொண்ட விவாதங்கள்தாம் நடைபெற்றன. சாஸ்திரங்களை சேதப்படுத்தாமல் பெண் மீதான நடைமுறைகளைச் சீர்படுத்த இயலுமா என்பதே விவாதமாக இருந்தது.
சதியும்’, சாஸ்திரமும்: ‘சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று முயற்சித்தபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினருமே சாஸ்திரங்களைத் தான் நாடினர். Tunfatal Muwahiddin (A gift to Deisto) என்னும் முற்போக்கான நூலை பாரசீக மொழியில் எழுதியவர் இராஜாராம் மோகன் ராய். பகுத்தறிவுவாதத்திற்குப் பெரும் முக்கியத்துவத்தை அளித்த நூல். ‘சமயம்’ என்ற ஒன்றையே மறுக்கும் நிலையில் அந்தப் புத்தகத்தை எழுதினார். ஆனால், அதே இராஜாராம் ‘சதி’ பற்றி வாதிடும்போது ‘சாஸ்திரம் என்ன சொல்கின்றது?’ என்பதையே மேற்கோள் காட்டினார்.
“Abstract of Arguments regarding the burning of widows as a Religious Rite” என்ற ஒன்றை 1830-இல் வெளியிட்டார். அதிலும், உடன்கட்டை ஏறும் பழக்கத்தை இந்து சமயம் அனுமதித்துள்ளதா என்று தான் வினவியிருந்தார். இதற்காகவே, பண்டைய சாஸ்திரங்கள் எளிமையாக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதனால், சாஸ்திரங்கள் அதுவரை பெறாத இன்னும் உயர்ந்த அந்தஸ்தையே பெற்றன. பிரிட்டிஷ் அரசும் இந்து பண்டிட்டுகளின் கருத்துக்களையே நாடியது. 1817இல் உச்சநீதிமன்றத் தலைமை பண்டிட்டான மிருக்குஞ்சயா வித்யாலங்கர், ‘சதி’ என்னும் பழக்கம் சமய சாஸ்திரங்களால் ஏற்கப்படவில்லை என்று அறிவித்தவுடன்தான் 1829-இல் ‘சதி’ பழக்கம் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டது
‘விதவா’ மறுமணம்: 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே விதவா மறுமணம் பற்றியும் பெரும் விவாதம் நடைபெற்றது. இராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், மலபாரி ரானடே, தயானந்த சரஸ்வதி ஆகியோர் விதவா மறுமணத்திற்கு ஆதரவாக வாதாடினர். ஆனால், இங்கும் சாஸ்திரங்களின் ஒப்புதலையே எதிர்நோக்கினர். மேல்தட்டு வகுப்பினரிடம் விதவா மறுமணம் மறுக்கப்பட்டிருந்தது. கீழ் வகுப்பினர் இடையே மறுமணம் பழக்கத்தில் இருந்தது. எனவே, கல்கத்தா, அலகாபாத், மெட்ராஸ், பாம்பே ஆகிய நகரங்களிலிருந்த நீதிமன்றங்கள் இம்முயற்சியை எதிர்த்தன. கீழ்ச்சாதி, மேல் சாதியினரிடையே எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறி எதிர்த்தனர். எனவே, 1837-இல் இந்திய சட்டக் கமிஷன் இம்முயற்சியைக் கைவிட்டது.
1855-இல் மீண்டும் இவ்வியக்கத்தைப் புதுப்பித்தனர். இச்சமயம், சாஸ்திரங்களின் உதவியை நாடியதுடன், ‘பெண்களின் பவித்ரம்’ என்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. விதவா மறுமணம் மறுக்கப்படுவதால் ஒழுக்கக்கேடு ஏற்படுவதாக வித்யாசாகரே கூறினார். பெண்களின் பாலியல் உறவை வரையறை செய்வதற்காகவே மறுமணம் என்பது ஏற்கப்பட்டது. 1856-இல் விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது. அதே சமயம், மறுமணம் செய்துகொள்ளும் பெண் தன் முதல் கணவன் மூலமாகப் பெற்ற சொத்துரிமையை இழக்கவும் வகை செய்தது. இதிலும், அவள் தன் கற்புநிலையை மீறினாள் என்பதற்கான தண்டனையாகவே வழங்கப்பட்டது. அதே சமயம், பெரும்பான்மையான கீழ்மட்ட இனத்தில் பழக்கத்திலிருந்த மறுமண முறை சிறுபான்மையான மேல்மட்டத்தினருக்காக சட்டப்படி ஏற்கப்பட்டது. இதனால், மறுமணம் என்ற உரிமையை எந்த இழப்பும் இல்லாமல் அனுபவித்துவந்த பெரும்பாலான கீழ்மட்ட பெண்கள் இச்சட்டப்படி தங்கள் சொத்துரிமையை இழந்தனர்.
‘கரேவா’: மறுமணம் குறித்து பிரிட்டிஷாரின் போக்கு வேறுபட்டதாக இருந்தது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பழக்கத்தில் இருந்த விதவா மறுமணம் என்பதை ஒரு இழப்பின் அடிப்படையில் சட்டப்படியாக்கியது. ஆனால், பஞ்சாபில் ஜாட் இனத்தவர்களிலே காணப்பட்ட ‘கரேவா’ என்னும் பழக்கத்திற்கு பிரிட்டிஷ் அரசு வேறு விதமான ஆதரவை அளித்தது.
பெரும் நிலக்கிழார்களான ‘ஜாட்’ இனத்தவர் இடையே காணப்பட்ட விதவா மறுமணம் என்னும் பழக்கம்தான் ‘கரேவா’. முதல் கணவனின் சொத்தின் மீது முழுமையான உரிமைகளைப் பெற்றிருந்த மனைவி அதை விற்பதற்கும் உரிமை பெற்றிருந்தாள். ஆனால், அவ்வாறு குடும்பச் சொத்து கைமாறி விடக்கூடாது என்பதற்காக, அக்குடும்பத்திலுள்ள ஒரு ஆண்மகன், மிக இளம் வயதாக இருந்தாலும் கூட, அப்பெண்ணை மறுமணம் செய்துகொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால், அந்த இனப் பெண்கள் அத்தகைய மறுமணத்தை விரும்பவில்லை. பல முறை அரசாங்கத்திடம், இம்முறையைத் தடை செய்யும்படி விண்ணப்பித்தார்கள். ஆனால், இவ்வினத்தவர்கள் செலுத்தும் சொத்துவரிக்காகவும், இராணுவப் பணிக்காகவும் இவர்களது ‘பழக்கத்தில்’ தலையிட மறுத்துவிட்டது பிரிட்டிஷ் அரசு.
இந்தியாவைப் பொறுத்தவரை ‘சமயமும் பெண்களும்’ என்பது மிகுந்த உணர்வுபூர்வமானவை என்பதால் பிரிட்டிஷ் அரசு இவ்விவகாரங்களில் தலையிடாமல் இருந்தது. எனினும், சில சீர்திருத்தங்களால் ‘இந்துமதம் ஆபத்திற்குள்ளாகிறது’ என்று கடும் கண்டனக் குரல் எழுப்பியதால், ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களை மீட்பதைவிட, அந்த ஆணாதிக்கத்துடன் ஒத்துப் போவதே சிறந்தது என்பதை பிரிட்டிஷ் அரசு உணர்ந்திருந்தது.
ரக்மாபாய் வழக்கும் தேசியவாதிகளும்:

தாதாஜி பிகாஜி என்பவருக்கு 11 வயதில் திருமணம் செய்விக்கப்பட்ட ரக்மாபாய் தன் கணவருடன் சேர்ந்து வாழவில்லை. பருவ வயது அடைந்தாலும் சேர்ந்து வாழ மறுத்தார். உடல்நலமில்லாத, ஒழுக்கக் கேடான கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்தார். ஆனால், பிகாஜியோ, தன் மனைவியைத் தன்னுடன் சேர்ந்து வாழ ஆணையிட வேண்டும் என்று 1884-.இல் கீழ்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கீழ்நீதிமன்றம் ரக்மாபாயிற்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. உடனே, இந்துமத வாதிகளும், பாலகங்காதர திலகர் போன்ற தேசிய வாதிகளும் கொதித்தெழுந்தனர். பிகாஜிக்கு ஆதரவாகப் பெரும் நிதி திரட்டப்பட்டு பம்பாய் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் ஆணையின்படியும் பிகாஜியுடன் சேர்ந்து வாழ ரக்மாபாய் மறுத்துவிட்டார். ரக்மா பாய் கைது செய்யப்பட்டதுடன் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், இந்துச் சட்டப்படி, அவர் மறுமணம் செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டது.
ரக்மாபாய் வழக்கில் பழமைவாதிகள், பிற்போக்கான தேசியவாதிகள் ஆகியோருடன் பிரிட்டிஷ் அரசும் இணைந்து அப்பெண்ணிற்கு எதிராகத்தான் செயல்பட்டது.
குழந்தைத் திருமணச் சட்டம்: விவாதங்கள், விளைவுகள்: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட மற்றொரு விவாதம் குழந்தைத் திருமண ஒழிப்பாகும். திருமண வயதை நிர்ணயித்தல், திருமண வாழ்க்கையைத் துவங்குவதற்கான வயதை நிர்ணயித்தல் என்று பல விவாதங்கள் நடைபெற்றன. 1922-1927க்கு இடையில் பல சட்டங்கள் ஏற்பட்டன. 1930-ஆம் ஆண்டு ராய் சாஹேப் ஹர்பிலாஸ் சாரதா என்பவரால் கொண்டு வரப்பட்ட சட்டப்படி, திருமண வயது 15 என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், குழந்தைத் திருமண ஒழிப்புச் சட்டத்தின் மீதான விவாதம் பிற விவாதங்களிலிருந்து வேறுபட்டிருந்தது. குழந்தைத் திருமணத்தால் மிக இள வயது பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமில்லாமல் பிறக்கின்றன. ஆரோக்கியமில்லாத குழந்தைகளால் நல்லதொரு சமுதாயத்தை, நாட்டை உருவாக்க முடியாது. அந்நியர் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றால் திடகாத்திரமான மிகச் சிறந்த புத்திரர்கள் தேவையென்றும் அதற்காக, குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர். சீர்திருத்தவாதிகள், இளம் வயது திருமணத்தால், மகப்பேறால் மரணமடையும் இளம் பெண் குழந்தைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. பால்ய விவாகத்தால் பால்ய விதவைகளானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். ஆனால், இங்கும் சமூக சீர்திருத்தத்தில் பெண்களின் நிலை விவாதிக்கப்படவில்லை.
பெகராம் மலபாரி, ரானடே, கேசவ சந்திர சேனன் போன்றவர்கள் குழந்தை மண ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சில நாட்களில், ரானடே, 11 வயதான ரமாபாய் என்ற குழந்தையைத் திருமணம் செய்துகொண்டார்.
கேசவ சந்திர சேனன் வயதுக்கு வராத தமது 13 வயது மக ளை 16 வயதான கூச்பிகார் இளவரசனுக்கு, சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்வித்தார். இவர் சார்ந்திருந்த ‘இளம் பிரம்மாக்கள்’ சங்கம் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது ‘இத்திருமணம் ஒரு விதிவிலக்கு’ என்று நியாயம் கற்பித்தார்.
அதே சமயம், பிரிட்டிஷ் அரசும் இச்சட்டத்தை நீர்க்கச் செய்யும் வகையில் சில நுட்பமான முறைகளைக் கையாண்டது.
*      கிழக்கிந்திய கம்பெனியின் 1780-ஆம் ஆண்டு, 1797-ஆம் ஆண்டு சட்டங்கள் இன்னமும் நடைமுறையில் இருப்பதாக அறிவித்தது. இவற்றின் படி, ஒரு இந்துத் தந்தை தன் மகளுக்குச் செய்விக்கும் திருமணத்தில் வேறு யாரும் இடையூறு செய்வது தண்டனைக்குரியதாகும். இதனால், பால்ய விவாகத்தைத் தடுக்க முயலும் சீர்திருத்தவாதிகள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.
*      பால்ய விவாகம் செய்விப்போர் மீது மிகக் குறைவான அபராதத் தொகையே வசூலிக்கப்பட்டது. நாளடைவில், இந்தத் தொகையும் திருமணச் செலவாகக் கருதப்பட்டு பெண் வீட்டாரிடமிருந்து பிள்ளை வீட்டார் வசூலிக்கத் தொடங்கினர்.
*      மேலும் பிரிட்டிஷ் எல்லைக்குள் நடத்தப்படாமல் திருமணங்கள் பிரெஞ்சு அல்லது டச்சு இந்திய எல்லைக்குள் நடத்தப்பட்டன.
பெண்கள் மீதான இடர்களை நீக்குவதில் சீர்திருத்தவாதிகள், மற்றும் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வாகவே குழந்தைத் திருமணச் சட்டமும் விளங்கியது.
முடிவுரை: தொடக்ககாலச் சீர்திருத்தவாதிகளும், தேசியவாதிகளும் இந்தியப் பாரம்பரியத்தையும், பழக்கவழக்கங்களையும் பாதுகாக்கவே விரும்பினர். இந்தியாவை நவீனப்படுத்த முயன்றாலும் அது அடிவேர் வரை செல்லவில்லை. ‘மேல் நுனிகளை மட்டுமே வெட்டிச் சீர்படுத்த’ விரும்பினர். சாஸ்திரங்களின் அங்கீகாரம் இல்லாத பழக்க வழக்கங்களை மட்டுமே சீர்படுத்த விரும்பினர். அனைத்திற்குமேல், பெண்ணின் கற்பியலிற்குப் பெரும் முக்கியத்துவம் அளித்தனர். பெண்களையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் பாதுகாக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் பிரதிநிதியாகத்தான் பெண் கருதப்பட்டார். பாலின சமத்துவம் என்ற கண்ணோட்டம் சிறிதுமில்லை.
எனவே தான், சமூக சீர்திருத்த இயக்கத்தில், ‘பெண் மீதான சாஸ்திரியக் கோட்பாடுகள்’ பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர “பெண் மீதான வன்முறைகளும் அதற்கான தீர்வுகளும்” பற்றி விவாதிக்கப்படவில்லை. ‘பெண்’ சாஸ்திரங்களின் வரையறைக்குள் மட்டுமே வைக்கப்பட்டாள்; ‘பெண்’ என்ற அறிவும், உணர்வும் கொண்ட ‘தனிமனுஷியாக’ அவள் மதிக்கப்படவில்லை. விடுதலைப் போராட்ட காலத்திலும் ‘இந்தியப் பெண்மை’ என்பது ‘தேசியத்தின் அடையாளமாகத் தான்’ கருதப்பட்டது. பாரத மாதா, இந்திய அன்னை என்றெல்லாம் பெண் தொடர்ந்து பாரம்பரியத்தின் பிரதிநிதியாகத்தான் சித்திரிக்கப்பட்டாள்.
(உங்கள் நூலகம் செப்டம்பர் 2011 இதழில் வெளியானது)

கட்டுரை எண் 2:


நவீனத்துவத்தின் மெய்யான தொடக்கம்:

இந்தியாவில் நவீனத்துவத்தின் தொடக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தின் வருகையால் உருவானது அல்ல. மாறாக சமூக மற்றும் மதம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்கள்தான் நவீனத்துவத்தை தொடங்கிவைத்தன. இதுவே மேற்கத்திய வரையறை அடிப்படையில் “மறுமலர்ச்சி” என அழைக்கப்பட்டது. எனினும் சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் ஒன்றல்ல. சீர்திருத்தம் என்பது மிகவும் ஆழமான சமூக மற்றும் அறிவுசார் விழிப்புணர்வை உள்ளடக்கியது ஆகும். வங்கத்தில் இராஜாராம் மோகன்ராய் உருவாக்கிய இயக்கம்தான் இதன் தொடக்கம் ஆகும். அன்றைய சூழலில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் துன்பங்களையும் அகற்றிடவும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வரவும் இராஜாராம் மோகன்ராய் முனைந்தார். வட இந்தியாவில் தயான்ந்த சரஸ்வதி, மராட்டியத்தில் ரானடே உருவாக்கிய “பிரார்த்தனா சமாஜ்”, ஆந்திராவில் விரேசலிங்கம் தொடங்கிய இயக்கம் ஆகியவையும் இத்தகைய சீர்திருத்தங்களின் தொடக்கம் ஆகும்.
எனினும் இந்த சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு வலுவான பொது அம்சம் இருந்தது. அது என்ன? இந்த இயக்கங்கள் எல்லாம் உயர் சாதியினர் மற்றும் மேல்தட்டு வர்க்கங்களால் தொடங்கப்பட்டவை ஆகும். புதியதாக உருவாகிக்கொண்டிருந்த மத்தியதர வர்க்கத்தின் சமூக மற்றும் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வதே இவற்றின் நோக்கமாக இருந்தது.
தென்னகத்தின் சீர்திருத்த இயக்கங்கள்:
அதே சமயத்தில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. இங்கு மறுமலர்ச்சி தாமதமாகவே தொடங்கியது. ஏனெனில் இப்பகுதிகள் 19ம் நூற்றாண்டில் பின் தங்கியவையாக இருந்தன. எனவே மத்தியதர வர்க்கம் தாமதமாகவே தோன்றியது. இதனைவிட மிகமுக்கியமான வேறுபாடு உண்டு. இந்தியாவின் வடபகுதியில் உருவான சீர்திருத்த இயக்கங்கள் உயர்சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினரால் தொடங்கப்பட்டது. ஆனால் தென் பகுதியில் இத்தகைய சீர்திருத்த இயக்கங்கள் அடிமட்ட சாதியினரால் தொடங்கப்பட்டது. கேரளாவில் நாராயணகுருவும் அய்யன்காளியும் தொடங்கினர். தமிழகத்தில் பெரியாரும் அயோத்திதாசரும் சீர்திருத்த இயக்கங்களை தொடங்கினர். மராட்டியத்தில் ஜோதிபா புலே அவர்களின் சீர்திருத்த இயக்கமும் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கது.
இந்த தலைவர்கள் தொடங்கிய இயக்கம் வெறும் சீர்திருத்த இயக்கம் மட்டுமே என்று கூறிவிடமுடியாது. இவர்களின் செயல்கள் சீர்திருத்தங்கள் சார்ந்து இருக்கலாம். ஆனால் அவர்களின் கருத்தாக்கங்கள் மிகவும் தீவிரமாக இருந்தன. சாதிய கட்டமைப்பில் மாற்றங்களை இவர்கள் கோரவில்லை. மாறாக சாதிய அமைப்பு முழுவதுமே அகற்றப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். இவர்களின் வலுவான கருத்து பிரச்சாரம் புதிய சிந்தனைகள் கொண்ட ஒரு நவீன சமூகம் உருவாகிட உதவியது. இவர்கள் கல்வி, தொழில்மயம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தனர். இவர்கள் சமூக மாற்றத்தின் சித்தாந்த முன்னோடிகளாக திகழ்ந்தனர். சாதிகளற்ற வர்க்கமற்ற சமூகமே அவர்களின் இலட்சிய வேட்கையாக இருந்தது.
சீர்திருத்த இயக்கங்கள் முன்வைத்த நவீன கருத்துகள்
இந்தியாவின் வடபகுதி மற்றும் தென்பகுதியில் உருவான அனைத்து சீர்திருத்த இயக்கங்களுக்கும் சில பொதுவான அம்சங்கள் இருந்தன. தம் சமகாலத்தில் நிலவிய சமூக கலாச்சார சூழலில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர இந்த இயக்கங்கள் முயன்றன. பகுத்தறிவுக்கு பொருந்தாத மதம் சார்ந்த சடங்குகள் தொடங்கி பெண்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகள் வரை வாழ்வியலின் பல்வேறு அம்சங்களில் மாற்றம் கொண்டுவர விரும்பினர். மக்களுக்கு சிலை வழிபாடின் மீது இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரம் என இவர்கள் கருதினர். எனவே சிலை வழிபாடின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை அகற்றுவது என்பது முன்னுரிமை பணியாக இருந்தது.
பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரார்தனா சமாஜம் ஆகிய அனைத்துமே சிலை வழிபாடினை எதிர்த்தன. தமது பிரார்த்தனைகளில் சிலை வணக்கத்தை அகற்றினர். பெரியார் சிலை வழிபாடினை எவ்வளவு கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாராயண குரு இப்பிரச்சனையில் இதே நிலை கொண்டிருந்தார். எனினும் இதனை நடைமுறை படுத்துவதில் நிதானம் கடைபிடித்தார். இப்பிரச்சனையில் “துல்லிய தாக்குதல்” எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதால் புதிய அணுகுமுறையை செயல்படுத்தினார். ஒரு கல்லை சிவன் சிலையாக உருவகப்படுத்திவிட்டால் அதற்கு எப்படி ஆன்மீக சக்தி வந்துவிடும் என கேள்வி எழுப்பினார். பின்னர் சிலைக்கு பதிலாக கண்ணாடியை பயன்படுத்தினார். பின்னர் சிலை வழிபாடை முழுவதுமாக அகற்றினார். சிலர் நாராயணகுரு சிலை வழிபாடினை ஆதரித்தார் என கூறுகின்றனர். அது உண்மை அல்ல. சிலை வழிபாடினை எதிர்ப்பதில் அவரின் கருத்து  பெரியார், ராஜாராம் மோகன்ராய் ஆகியோரின் கருத்துகளுக்கு உடன்பட்டே இருந்தது. சிலை வழிபாடினை எதிர்த்த நாராயணகுருவை இன்று சிலர் வழிபடும் சிலையாக மாற்றியிருக்கும் கொடுமையை என்னவென்று கூறுவது?
பெண்களின் சுயமரியாதை:
இந்த சீர்திருத்த தலைவர்கள் அனைவருமே கவனம் செலுத்திய இன்னொரு பிரச்சனை பெண்களின் நிலை குறித்தது ஆகும். அவர்களின் சமகாலத்தில் பெண்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். சொல்ல முடியாத துன்பங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. செல்லரித்து போன கொடுமையான சடங்குகளின் அடிமைச் சங்கிலியிருந்து பெண்களை விடுவிப்பது அவசியமாக இருந்தது. சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய நடைமுறையை எதிர்த்து இயக்கம் உருவாக்கிய ராஜாராம் மோகன் ராயின் செயல்கள் தொடங்கி அனைத்து சீர்திருத்த தலைவர்களும் பெண்கள் விடுதலைக்கு வலுவாக குரல் தந்தனர். இது வெறும் பெண்கள் மீதான பச்சதாபம் அல்ல. மாறாக பெண்களின் விடுதலை மற்றும் சுயமரியாதையை மீட்பது எனும் நோக்கம் இதில் இருந்தது. பெண்விடுதலையின் நீண்ட வரலாற்றில் இந்த நோக்கம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் முக்கியத்துவம் சிறிதளவும் குறைந்தது அல்ல.
சமூகம் மற்றும் மதம் சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்த முயற்சிகள்தான் இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் முதல் கட்டம் ஆகும். சமூகத்தின் புத்தாககத்திற்கு இந்த சீர்திருத்தங்கள் மிக அவசியம் என இந்த கட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்காலம் இந்த சமூக சீர்திருத்தங்களில்தான் அடங்கியுள்ளது என கருதப்பட்டது. எந்த அளவிற்கு துரிதமாக சமூகம் செல்லரித்து போன நடைமுறைகளிலிருந்தும் மூடநம்பிக்ககளிருந்தும் விடுபடுகிறதோ அந்த அளவிற்கு வேகமாக இந்திய சமூகம் முன்னேறும் என இந்த சீர்திருத்த இயக்கங்கள் கருதின.
அதே நேரத்தில் இந்த சீர்திருத்த இயக்கங்கள் அரசியல் போராட்டத்திலிருந்து விலகி நின்றன. அன்னிய ஆட்சி குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் அவை வலுவாக முன்வைக்கப்படவில்லை. சமூக பலவீனங்களை அகற்றிவிட்டால் அரசியல் பிரச்சனைகளக்கு எளிதாக தீர்வு காணலாம் என மதிப்பீடு செய்தனர்.. அக்காலகட்ட அறிவுஜீவிகளுக்கு “காலனிய நவீனம்” குறித்த ஒரு சாதகமான மதிப்பீடு இருந்தது. காலனியாளர்கள் புகுத்திய நவீன அம்சங்கள் இந்திய சமூகத்தின் பிற்போக்கு தன்மையை பின்னுக்கு தள்ள உதவும் என கருதினர். சமூக விடுதலைக்கும் காலனியாதிக்கத்திற்கும் இருந்த தொடர்பு சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை.
சமூக மாற்றத்தை பின்னுக்கு தள்ளிய இந்திய தேசியம்
இந்த சீர்திருத்த இயக்கங்களுக்கு இணையான காலகட்டத்திலும் அதற்கு பின்பும் உருவான இந்திய அறிவுஜீவிகள் காலனி ஆதிக்கம் குறித்து சரியான மதிப்பீடு உருவாக்கினர். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் சமூக பிரச்சனைகளுக்கான போராட்டமும் இணைந்து நடத்தப்பட வேண்டும் என எண்ணினர். இது மறுமலர்ச்சி காலத்தின் இரண்டாவது கட்டம் ஆகும். இந்திய தேசிய இயக்கம் மறுமலர்ச்சி இயக்கத்தின் அவசியத்தையும் உணர்ந்தது. அதாவது அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்துடன் சமூக மாற்றத்திற்கான போராட்டம் இணைக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டது. இது மிகவும் சாதகமான வளர்ச்சிப்போக்கு ஆகும். ஆனால் இது தொடரவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று!
காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போரட்டம் வலுவடைந்த பொழுது அரசியல் போராட்டத்திற்கு அளித்த முக்கியத்துவம் சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தரப்படவில்லை. “இந்திய தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பின் தோற்றமும் அதன் மறைவும் இதனை தெளிவாக்குகிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பில் அரசியல் மட்டுமே பேசவேண்டும் எனவும் சமூக முரண்பாடுகள் குறித்து பேசக்கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ரானடே போன்றவர்கள் “இந்திய தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பை உருவாக்கினர். இது காங்கிரசின் அங்கம் போலவே செயல்பட்டது. காங்கிரஸ் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் அதே இடத்தில் இந்த அமைப்பும் கூடியது; சமூக சீர்திருத்தம் குறித்த பல விவாதங்கள் நடத்தப்பட்டன; தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால் குறுகிய காலத்திலேயே இது செயலற்று போனது. தேசிய இயக்கம் எதற்கு முன்னுரிமை அளித்தது என்பதை இது தெளிவாக வெளிப்படுத்தியது.
ஒத்துழையாமை இயக்கம் வரிகொடா இயக்கம் என தொடர்ச்சியான போரட்டங்கள் மூலம் தேசிய இயக்கம் வலுவடைந்து முன்னேறியது. ஆனால் சமூக மறுமலர்ச்சி இயக்கம் பின்தங்கியது. ஒரு புறம் தேசிய இயக்கம் பீடுநடை போட்டு முன்னேற்றம் காண மறுபுறம் சமூக இயக்கம் பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி கிடந்தது. சாதிய உணர்வும் மத உணர்வும் மேலோங்கிட இந்நிலை வழிவகுத்தது. காந்திஜியின் சில நடவடிக்கைகள் அரசியல் போராட்டத்துடன் சமூக மறுமலர்ச்சி போராட்டத்தை இணைத்திட வாய்ப்பு உருவாக்கியது.  கிராம சுயராஜ்யம், தீண்டாமை ஒழிப்பு மதஒற்றுமை ஆகியவை குறித்தும் காந்திஜி சில இயக்கங்களை உருவாக்கினார். இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாவது கால கட்டத்தில் இது முக்கியமான தருணமாக இருந்தது. ஆனால் இது முழுவீச்சை அடையவில்லை. காங்கிரஸ் இயக்கம் முழுவதையும் இதனை நோக்கி செயல்படுத்துவதில் காந்திஜி வெற்றிபெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அரசியல் போராட்டத்திற்கும் சமூக மறுமலர்ச்சி போராட்டத்திற்கும் இடையே உருவான இந்த இடைவெளி இந்திய சமூகத்தில் பல பாதகமான பின்விளைவுகளை உருவாக்கியது. சமூக அரங்கில் பின்தங்கிய உணர்வை தேசிய உணர்வு விளைவித்தது. காங்கிரசுக்கு தலைமை தாங்கியவர்களின் ஒரு பகுதியினருக்கு முற்போக்கு கருத்துகள் இருந்தாலும் அது நடைமுறையில் பிரதிபலிக்கவில்லை. மறுமலர்ச்சி இயக்கத்தின் முதல் கட்டம் சமூக பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து அரசியல் போராட்டத்தினை பின்னுக்கு தள்ளியது. மறுமலர்ச்சியின் இரண்டாவது கட்டம் அரசியல் போராட்டத்திற்கு முன்னுரிமை அளித்து சமூக பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளியது.
மார்க்சியமும் மறுமலர்ச்சியும் சங்கமித்த மூன்றாவது கட்டம்
இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது கட்டம் காலனியாதிக்கத்தின் முடிவில் தொடங்குகிறது.  இந்த மூன்றாவது கட்டம்  மார்க்சியமும் மறுமலர்ச்சியும் சங்ககமித்த காலம் ஆகும். உண்மையில் மறுமலர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் மார்க்சியத்தினுள் பொதிந்துள்ளன. மறுமலர்ச்சியின் அம்சங்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஒன்றிணைந்த நிகழ்ச்சி நிரல் ஆகும். சாதிய கட்டமைப்பை அகற்றுவது அல்லது பாலின சமத்துவம் என்பது தொடர்ந்து கம்யூனிஸ்டு இயக்கத்தின் பிரிக்கமுடியாத கோட்பாடுகளாக உள்ளன. மூன்றாவது கட்டம் என்பது முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தின் தொடர்ச்சியே ஆகும். சாதிய ஒழிப்பு, பாலின சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை முதல் இரண்டு கட்டங்களிலும் இடம் பெற்றிருந்தன.
இடதுசாரி இயக்கத்தின் இலக்கு என்பது சமகால கலாச்சார சமூக நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது என்பது அல்ல; மாறாக இவற்றை முற்றிலும் மாற்றுவது என்பதே இலக்கு ஆகும். அவ்வாறு அடிப்படை தீவீர மாற்றத்திற்கு முயலும்பொழுது இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சி என்பதற்கு புதிய பொருள் தர முனைகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது கட்டத்தை இடதுசாரி இயக்கம் வெற்றிகரமாக உருவாக்கிட இயலவில்லை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. இது ஆச்சர்யமாக அல்லது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை.
தேவை மறுமலர்ச்சியின் நான்காவது கட்டம்
மறுமலர்ச்சி என்பது முற்று பெற்ற நிகழ்வு அல்ல. அது தொடர் நிகழ்வு. சமூகம் அல்லது பொருளாதாரத்தில் முக்கிய பெரிய மாற்றங்கள் நிகழும்பொழுது மறுமலர்ச்சியின் பல்வேறு அம்சங்களிலும் இந்த மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்வுகளை இரண்டாவது முறையாக மறு ஆக்கம் செய்ய இயலாது. அது போல மறுமலர்ச்சியின் முதல் கட்டத்தில் உருவாக்கப்பட்ட மதிப்புகளை மாறுபட்ட இன்றைய சூழல்களில் அரங்கேற்க இயலாது. ஏனெனில் முதலாளித்துவமும் நவீன தாராளமயமும் முற்றிலும் வேறுபட்ட புறச்சூழலை உருவாக்கியுள்ளன. முதல் கட்டத்தின் மதிப்புகள் செல்லாதவையாக ஆகிவிட்டன என இதன் பொருள் அல்ல! ஆனால் சமூக சூழலும் காலமும் மாறிவிட்டன. எனவே அந்த மதிப்புகளை புத்தாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
மறுமலர்ச்சியின் முதல் காலகட்டம் என்பது காலனிய நிலபிரபுத்துவ சூழல் ஆகும். அந்த சூழலில் உருவான மறுமலர்ச்சியின் மதிப்புகளை அப்படியே பொருத்துவதற்கு பதிலாக இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சியை புதியதாக மீண்டும் படைக்க வேண்டும். இந்த மறுமலர்ச்சி என்பது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் மக்களின் கோணத்திலிருந்து படைக்கப்பட வேண்டும். சோசலிச மனித நேயம் என்பது
அரசியல் சமூக சமத்துவத்தை தனது குறிக்கோளாக கொள்வது மட்டுமல்ல; கலாச்சார மற்றும் அறிவுசார் விடுதலையையும் தனது இலட்சியமாக கொண்டுள்ளது.
சமூகத்தில் தற்சமயம் நிலவும் வன்முறையும் சகிப்பற்ற தன்மையும் மறுமலர்ச்சியின் முதல் காலகட்டத்தில் உருவான மதிப்புகளின் தோல்வியால் விளைந்தவை அல்ல! மாறாக அந்த மதிப்புகளை இன்றைய சூழலுக்கு பொருத்துவதில் நமக்கு உருவான பின்னடைவுதான் முக்கிய காரணம் ஆகும். தொழில்நுட்பமும் அறிவியலும் உருவாக்கும் புதிய வசதிகள் மூலம் எதார்த்த புறஉலகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் கலாச்சார கருத்துகளின் சூழலோ சீரழியவில்லை என வைத்துக்கொண்டாலும் தேக்கம் அடைந்துள்ளது.
சமூகத்தில் பல்வேறு மதிப்புகள் மேலும் மேலும் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளதை தடுக்க நம் முன் உள்ள வழி அரசியலுக்கும் கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதுதான்! அரசியல் என்பது கலாச்சாரத்தை தூண்ட வேண்டும்; கலாச்சாரம் அரசியலை செழுமைப்படுத்த வேண்டும்.
இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் நான்காவது கட்டம் குறித்து சிந்திக்க இது சரியான தருணம் எனில் மிகை அல்ல!
(பிரண்ட்லைன் இதழில் கே.என். பணிக்கர் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது)

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN