பெட்ரோலுக்குப் பதிலி இல்லாதவரை இந்தியாவின் பிரச்சனை மேலும்மேலும் மோசமடையும்
கச்சா எண்ணெய் நுகர்வில் இந்தியா உலகின் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. உலகின் தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் தேவையின் அடிப்படையிலான வளர்ச்சி வேகம் குறைந்துவரும் நிலையில் இந்தியாவின் பெட்ரோல் தேவை அதிகரித்துவருகிறது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கான மிக முக்கியமான இடமாக இந்தியாவைப் பார்க்கின்றது சர்வதேச பெட்ரோல் தொழிற்துறை. ஏற்கெனவே தனது கச்சா எண்ணெய்த் தேவையில் 80% இந்தியா இறக்குமதி செய்கிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்துவரும் நிலையில் எதிர்காலத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக பொருளாதாரப் பாதிப்பு அதிகரிக்கும். 2014 மத்தியிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இறக்குமதி விலை குறைவாக இருப்பதன் காரணமாகச் சூழல் இந்தியாவிற்குச் சாதகமாக இருந்தபோதிலும் நிலைமை இனிமேல் மோசமடையத் தொடங்கும்.
2013-14இல் சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 105 டாலரிலிருந்து 2015-16இல் 46 டாலராக வீழ்ந்தது. சர்வதேச விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் ஆட்சிக்குவந்த நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்த விலைக் குறைவின் பலனை நுகர்வோருக்குத் தராமல் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு வரியை அதிகரித்து அதிக வருமானம் ஈட்டியது. அதாவது பெட்ரோல் இறக்குமதியின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாக இருந்தபோது நுகர்வோர் என்ன விலை கொடுத்து பெட்ரோல் வாங்கினார்களோ அதே விலையை இப்போதும் தருகிறார்கள். ஆனால் மிக சமீபத்தில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை அக்டோபர் 31ஆம் தேதி 59 டாலராக உயர்ந்தது. இது இதே ஆண்டு ஜூலை 31ஆம் தேதி 51.2 டாலராக இருந்தது. சில்லறை விற்பனையில் பெட்ரோலின் விலை தினமும் அதிகரிக்கப்பட்டு வந்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் எண்ணெய் மீதான வரியை அரசாங்கம் குறைக்க வேண்டிவந்தது.
சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களின் காரணமாக முன்னர் எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த சர்வதேசச் சந்தை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் சங்கத்தால் (ஓபெக்), குறிப்பாக உலகிலேயே அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியாவால் கட்டுப்படுத்தப்படுகிறது. 2011ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எண்ணெய் விலை அதிகமாக இருந்தமை அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் (மரபுசாரா பெட்ரோலியம்) உற்பத்தியையும் முதலீட்டையும் அதிகரிக்கச் செய்தது. பூமிக்கடியில் இருக்கும் பாறைகள் மீது அதிக அழுத்தத்துடன் திரவத்தைப் பீய்ச்சுவதன் மூலம் அவற்றில் பிளவுகளை ஏற்படுத்தி எடுக்கப்படும் எண்ணெயே ஷேல் எண்ணெய் எனப்படுகிறது. கடந்த காலத்தில் ஷேல் எண்ணெய் எடுப்பது என்பது மிகவும் செலவுபிடிக்கும் விஷயமாக இருந்தது. 2014 மத்தியில் விலை பெரிய அளவில் வீழ்ந்தபோதிலும் விலைச் சரிவைத் தடுக்க ஓபெக் உற்பத்தியைக் குறைக்கவில்லை. இது அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தியை லாபமற்றதாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விலைச் சரிவு பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களாலும் உற்பத்தியாளர்கள் விலை உயரும்வரை காத்திருந்ததாலும் ஷேல் எண்ணெய் உற்பத்தி மீண்டும் வெற்றிகரமானது.
இறுதியில் விலைச் சரிவு ஓபெக் நாடுகளையே பாதித்தது. இந் நாடுகள் பலவற்றின் பட்ஜெட் எண்ணெய் வருமானத் தையே சார்ந்திருக்கிறது. உலகளாவிய விநியோகத்தைக் குறைக்கவும் விலையை அதிகரிக்கவும் 2016 இறுதியில் ஓபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது என முடிவு செய்தன. அதிலிருந்து விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
இறக்குமதியைச் சார்ந்திருக்கும் காரணத்தால்தான் பெட்ரோல் இறக்குமதி செய்ய வேண்டிய நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா முயற்சி செய்துவருகிறது. பெருமளவிலான இறக்குமதியை ஓபெக் நாடுகளிலிருந்து செய்வதும் தொடர்கிறது. வர்த்தகத் துறையிடம் இருக்கும் புள்ளிவிவரங்களின்படி ஓபெக் நாடுகளிலிருந்து 2017 ஜனவரி முதல் ஜூலை வரை செய்யப்பட்ட இறக்குமதி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் செய்யப்பட்ட இறக்குமதியைவிட 1350 கோடி டாலர் (42% உயர்வு) அதிகம். ஓபெக் நாடுகள் அல்லாதவற்றிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதி 249.1 கோடி டாலர் (64.8 உயர்வு). உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது என ஓபெக் நாடுகள் 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முடிவெடுத்ததிலிருந்து அவற்றின் சந்தை சுருங்குவதை இது காட்டுகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது முக்கியமான திருப்பம். இறக்குமதி செய்யப்படும் கொள்ளளவிற்காக இல்லை, இறக்குமதி செய்யப்படுவது இப்போதைக்கு மிகக் குறைவே; மாறாக ஷேல் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக எண்ணெய் உற்பத்தி வளர்ச்சி உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகம் என்பதால் இது முக்கியமான விஷயமாகிறது. தான் இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்பட்சத்தில் ஓபெக் நாடுகளுடன் இந்தியாவால் நன்கு பேரம் பேச முடியும்.
சிறந்த திறன், மாற்று ஆற்றல் வகைகள் உலகின் எண்ணெய்த் தேவையை நிரந்தரமாகக் குறைத்துவிடும் என்பதால் இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. எண்ணெயிலிருந்து வேறு ஆற்றல் மூலத்திற்கு மாறும் வேகம் வளரும் நாடுகளில், குறிப்பாக போக்குவரத்துத் துறையில் எதிர்பார்த்ததை விடக் குறைவு. பெட்ரோலை அதிகம் சார்ந்திராத, மாற்றுப் போக்குவரத்து முறையைக் கொண்டுவருவது ஒரு முக்கியமான குறிக்கோள். இதை இந்தியா பகுதியளவில் ஏற்றுக்கொண்டுள்ளது. மாசுபடுத்தாத பொதுப் போக்குவரத்து அல்லது தனிப்பட்ட முறையில் போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்தல், நமது நகரங்களின் மாசுபடுதல் அளவைக் குறைக்கும். ஏற்கெனவே நமது நகரங்களில் சில உலகின் ஆக மோசமான மாசுபடுதலுக்கு ஆளான பட்டியலில் இருக்கின்றன.
இந்தியாவின் எண்ணெய்த் தேவை அதிகரிக்கும் நிலையில், அதற்காக இறக்குமதியை அது நாடி நிற்கும் இந்நிலையில் பெட்ரோலைச் சார்ந்திருப்பதைப் பெருமளவு குறைப்பதற்கான உத்தி நமக்கு உடனடியாகத் தேவை. இது பொருளாதார, சுற்றுச்சூழல் ரீதியாக அவசியமானது. பொருளாதாரத்தின் காரணமாக இன்று நாம் மேற்கொள்ளும் தேர்வு நமது எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கைத் தரத்தை மட்டுமல்ல நமது வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயிக்கும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி,
நவம்பர் 4 , 2017
தமிழில்: திருநாவுக்கரசு
TNX :KALACHUVADU
No comments:
Post a Comment