I.O.T (INTERNET OF THINGS) என்றால் என்ன?

# அடிப்படை கற்றல் #UPSCTAMIL




I.O.T : நாளைய இணையம் !


இன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !
இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.
பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.
பின்னர் டேட்டா கார்ட், வயர்லெஸ், பிராட்பேண்ட் வயர்லெஸ் என இணைய வகைகள் வந்து நிலமையை படு சுலபமாக்கிவிட்டன. இப்போது மடிக்கணினிகளும் மவுசை இழக்கத் துவங்கிவிட்டன. கைகளுக்கும், சட்டைப் பைகளுக்குமாய் ஓடித் திரியும் ஸ்மார்ட் போன்கள் இணையத்தை விரல் சொடுக்கில் தொட்டுத் திரும்புகின்றன.
இந்த நிலையைத் தாண்டி என்ன தான் வரப் போகிறது எனும் ஆர்வம் எப்போதுமே மனசில் இருக்கும். ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் போல ஏதோ ஒரு வசீகரம் நம்மை எப்போதுமே புரட்டிப் போடுகிறது இல்லையா ? அப்படி ஒரு வியப்பூட்டும் நிலையை இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ( IOF : Internet Of Things ) உருவாக்கும்.
ஒரு தகவல் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். சட்டென “கூகிள்” பக்கத்துக்குத் தாவி வார்த்தையை டைப் செய்து மவுஸைச் சொடுக்குவீர்கள் இல்லையா ? அது உங்கள் விண்ணப்பத்துக்குத் தேவையான பக்கங்களை அள்ளிக் கொண்டு வந்து தரும். இப்போது டைப் கூட செய்யத் தேவையில்லை, பேசினாலே போதும் என்பது புது வரவு !
அப்படி வந்து சேரும் பக்கங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்பதே இன்றைய நிலை. இதில் அடிப்படை என்னவென்றால், தகவல்கள் இணையத்தில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர், எங்கோ ஒரு மூலையில் ஒரு தகவலை இணையத்தில் சேமித்து வைத்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.
அதுவும் தகவல்கள் மட்டுமே இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் இல்லையா ? இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா ( Internet of Data) எனலாம். அதாவது தகவல்களுக்கான இணையம்.
இதை அப்படியே கொஞ்சம் வசீகரக் கற்பனையில் விரித்துப் பாருங்கள். உலகில் இருக்கின்ற பொருட்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் ? இப்படி எழுந்த ஏகப்பட்ட “எப்படி இருக்கும்” எனும் கேள்விகளுக்கான விடையாகத் தான் வரப் போகிறது “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” அல்லது பொருட்களின் இணையம்.
“இணையம் என்றால் என்ன ? “ உலக அளவிலான வலையமைப்பு ஒன்று கணினி நெட்வர்க்களை ஒரு நேர்த்தியான தகவல் பரிமாற்ற இணைப்பு மூலம் (TCP/IP) இணைப்பது. “பொருட்கள்” என்பது என்ன ? “நம்மைச் சுற்றியுள்ள ஸ்பெஷல் அடையாளம் உள்ள, அல்லது தனித்துவ அடையாளம் இல்லாத விஷயங்கள்”. இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள். நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் தனித்துவ அடையாளம் மூலம் இனம் காண முடியும் ஒரு வலையமைப்பு. இது தான் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்”. என்னால் சொல்ல முடிந்த மிக எளிய விளக்கம் இது தான். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், இன்டர்வியூக்களில் கேட்கப்படலாம் !
இதன் மூலம் உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம் தனியே “அறிவு” வந்துவிடும். அதாவது செயற்கை அறிவு. உதாரணமாக இப்போதெல்லாம் காரில் ரிவர்ஸ் “சென்சார்கள்” இருப்பதை அறிவீர்கள் தானே. காரை பின்னோக்கி எடுக்கும்போது வண்டி எதிலாவது மோதுமா ?, எத்தனை தூரத்தில் தடை இருக்கிறது? என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா ? இப்படி ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் செயற்கை அறிவு கிடைப்பது தான் விஷயம்.
இதன் மூலம் பொருட்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், பொருட்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளவும், சூழலோடு பேசிக்கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். குழப்பமாக இருக்கிறதா ? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். கூகிள் கார் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிரைவரே இல்லாமல் தனியே ஓடக் கூடிய கார் அது. நீங்கள் எங்கே செல்ல வேண்டும் எனும் தகவலை அதனிடம் சொல்லிவிட்டால் கார் உங்களைக் கூட்டிக் கொண்டு பத்திரமாய் அந்த இடத்தில் கொண்டு சேர்க்கும்.
சில ஆயிரம் மைல் தூரங்கள் ஆனாலும் கார் தொடர்ந்து பயணிக்கும். டிராபிக் வரும்போது வண்டியை நிதானமாக்கும், சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல்களைக் கவனித்து அதன்படி நடக்கும், ஸ்பீட் லிமிட் போர்ட்கள் இருந்தால் அதன் படி காரை இயக்கும். பெட்ரோல் தீரப் போகிறது எனில் சொல்லும். கூடவே அடுத்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது, எவ்வளவு நேரம் ஆகும் எனும் சகல ஜாதகத்தையும் சொல்லும். மதிய வேளை ஆனால், “இன்னும் நாலு மைல் தூரத்துல ஒரு பிரியாணி கடை வருது நிப்பாட்டவா ?” என கேட்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சின்ன வயசில் படித்த அலாவுதீன் கதை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா ?
இங்கே, கார் அதைச் சுற்றியிருந்த சிக்னல் லைட், தகவல் போர்ட், டிராபிக், டைம், காலநிலை என பல விஷயங்களோடு “கம்யூனிகேட்” செய்தது. அதாவது உரையாடியது, அல்லது தகவலைப் பெற்றுக் கொண்டது ! அதன் மூலம் தனது வேலையை கட்சிதமாய் முடித்தது. இந்த முறையில் விபத்துகள் கணிசமாகக் குறையும் என கணித்திருக்கிறார்கள். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் – ன் ஒரு சின்ன சாம்பிள்.
RFID – ஞாபகம் இருக்கிறதா ? NFC பற்றிப் பேசியபோது நாம் பார்த்தோம்.
ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio-frequency identification) என்பதன் ரத்தினச் சுருக்கம் தான் RFID. ஒரு பொருளிலுள்ள “டேக்” ( tag) வானொலி அலை மூலமாக ஒரு தகவலை பரிமாற்றுவது தான் இதன் அடிப்படை. காரில் போகும்போது காணும் ஒரு விளம்பரச் சுவரொட்டியிலுள்ள ஒரு டேக் உங்கள் கையிலுள்ள ஸ்மார்ட் போனுக்கு ஒரு தகவலைப் பரிமாற்றுவது இதன் மூலம் சாத்தியம். இந்த ஆர்.எஃப்.ஐ.டி தொழில் நுட்பம் தான் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் கனவுக்குக் கலர் அடிக்கப் போகிறது ! அத்தோடு இணைந்து உதவப் போவது பல வகையிலான சென்சார்கள்.
உணவு, போக்குவரத்து, அலுவலகங்கள், தண்ணீர் சப்ளை, உணவுப் பொருட்கள் மேலாண்மை போன்ற விஷயங்களில் இவை மிகப்பெரிய பணியைச் செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் சிந்தனையின் அடிப்படையிலான ஆயிரக்கணக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.
ஜி.இ நிறுவனம் வெள்ளோட்டம் விட்ட “ஸ்மார்ட் ஹாஸ்பிடல் ரூம்” வியக்க வைக்கிறது. இந்த அறையை அறையின் மேல்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சென்சார்கள் முழு நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. அவை தகவல்களை ஒரு ஸ்பெஷல் மென்பொருளுக்கு பரிமாற்றிக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை டாக்டர்கள் வருகின்றனர், நர்ஸ்கள் வருகின்றனர் என்பதை அது கவனிக்கிறது. நோயாளியைத் தொடும் முன்பும், பின்பும் டாக்டர் கை கழுவவில்லையேல் “டாக்டர், நீங்க கை கழுவ மறந்துட்டீங்க” என குரல் கொடுக்கும். நோயாளி வலியால் துடித்தால் அவருடைய முக பாவனையை வைத்தே டாக்டருக்கு அவசரச் செய்தி அனுப்பும் ! ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய் இருக்கிறது இல்லையா ? இவையெல்லாம் வரப் போகும் மாற்றத்துக்கான படிகளே.
வீடுகளுக்குப் பொருத்தப்படும் வாட்டர் சிஸ்டம், அவசர காலத்தில் நம்மை எச்சரிக்கை செய்யும் சிஸ்டம், காலநிலை மாற்றத்தை முன்னரே கண்டறியும் திட்டம் என இந்த மாற்றத்தின் கிளைகள் பல இடங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.
தற்போது தயாராகி வரும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவை பெரும்பாலும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய வகையிலேயே உருவாகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. குறிப்பாக செல்போன் சேவை நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக சேவைகள், இணைய சேவை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என நீளும் எல்லாரும் கைகோக்க வேண்டியது ரொம்ப முக்கியம் “குளோபல் பல்ஸ்” எனும் முயற்சியின் இயக்குனர் ராபர்ட் கிர்க்பேட்ரிக். இவர் இந்த ஒருங்கிணைப்பை “டேட்டா பிலன்ந்தராபி (data philanthropy) என பெயரிட்டு அழைக்கிறார்.
2020ம் ஆண்டு நிறைவேறிவிடும் எனும் கனவுடன் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் முயற்சியை உலக நிறுவனங்கள் தொடர்கின்றன. இந்தக் கனவு பல சவால்களை எதிர்கொள்கிறது. ஒன்று மாறிவரும் தொழில் நுட்பம். ஆண்டு தோறும் நிகழும் பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் திட்டத்தை அடிக்கடி மறுபரிசீலனை செய்து, புதுமைப்படுத்த வைக்கிறது. இரண்டாவது இதற்கு அதிகப்படியான ‘எனர்ஜி’ தேவைப்படும். அந்த சக்தியை இயற்கையிலிருந்து உருவாக்கும் சக்தி கொண்ட பொருட்களை உருவாக்குவது அவசியம். மூன்றாவது, இது தனி மனித சுதந்திரத்தை குழியில் போட்டுவிடும் எனும் அச்சம் ! இதைத் தவிரவும் ஏகப்பட்ட தொழில்நுட்ப சாவல்கள், தொழில் நுட்பம் சாராத சவால்கள் இதைச் சுற்றி உலவுகின்றன.
இங்கிலாந்திலுள்ள சவுத்ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் நிகல் ஸேட்போல்ட் இது குறித்துப் பேசும்போது ரொம்ப உற்சாகமாகிவிடுகிறார். உலகம் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய அறிவுப் புள்ளியாய் உருமாறிவிடும். உங்கள் பிரிட்ஜ் முதல் பிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் ஆப்பிள் வரை எல்லாமே தொடர்புக்குள் இருக்கும். “என்னைக் குடிக்காதே நான் காலாவதி ஆனவன்” என மருந்து பாட்டில் எச்சரிக்கும். இந்தப் பொருளை விட அடுத்த கடையில் இருக்கும் பொருள் விலைகுறைவு என பொருளே தகவல் சொல்லும். இப்படி ஒரு அறிவியல் புனைக்கதை போன்ற ஒரு உலகில் நீங்கள் உலவலாம். என வியக்க வைக்கிறார்.
இன்னும் சிறிது காலத்தில் “மூக்குக் கண்ணாடியை எங்கேடா வெச்சேன் பேராண்டி” எனக் கேட்கும் தாத்தாவுக்கு பேரன் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” மூலம் தேடி எடுத்துத் தருவான் ! கட்டிலுக்கு அடியிலிருந்து. 

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN