சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: இந்த வழக்கு ஏன் முக்கியமானதாகிறது?




#பின்னணி மற்றும் கருத்து ( BACKGROUND AND OPINION)   #UPSCTAMIL   #UPSCINTERVIEWTOPIC


சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் சபரிமலையில் மட்டும் இல்லை, இன்னும் பல இந்து கோயில்களிலும் இன்றளவும் கடைப்பிடிப்பட்டுவருகின்றன. இது போன்ற மதம் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்கும்,  உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கருதும் பெண்களின் சமத்துவத்துக்கான அடிப்படை உரிமைகளுக்கும் இடையே தொடர்ந்து எழும் பல முரண்பாடுகளைக் களைவதாக இவ்வழக்கின் தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதீகங்களின்படி சபரிமலை கோயிலின் மூலவரான ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் அமர்ந்திருப்பதால்தான், பூப்பெய்திய பெண்கள் கோயிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வாதங்கள் பெண்களின் தனிமனித உரிமை பற்றிய வாதங்களுக்கான பதிலாக அல்லாமல், மதத்தின் கோட்பாடுகளுக்கு அனுசரித்துப்போகின்றனவா இல்லையா என்ற கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றன.





தனிமனித உரிமை முக்கியம்


அனைவருக்கும் உள்ள மத உரிமைகள் வேறு; ஒவ்வொருவரும் மனிதனாய் பிறந்த காரணத்தினாலேயே தன்னகத்தே கொண்டிருக்கும் தனி மனித உரிமைகள் வேறு. இந்த இரண்டும் வெவ்வேறான, சமதளத்தில் பாவிக்க முடியாத வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை. தனி மனித அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொள்ளாத எந்த ஒரு நோக்கும் தார்மிக நன்மையை அடைய முடியாது. இந்த வழக்கில் பெண்களுக்கு ஆதரவாக எழுப்பப்படும் வாதங்களில் முக்கியமானது -  அவர்களின் 'பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான' உரிமைகளையும் ஏனைய அடிப்படை உரிமைகளையும் பறிப்பதாக இந்தக் கட்டுப்பாடு உள்ளது என்பதே. ‘ஐயப்பன் எங்களுக்குமானவர்’  என்ற குரலை எப்படிப் புறகணிக்க முடியும்? ஆனால், பெண்களுக்கு வேண்டிய இதுபோன்ற அடிப்படை உரிமைகள்  மீறப்பட்டுள்ளதா என்பதை முக்கியமாகப் பாராமல், வெறும் மதக் கட்டமைப்பு சார்ந்த ஒரு குறுகிய நோக்கினைக் கொண்ட வாதங்கள் மட்டும்தான் எழுப்பப்படுகின்றன.
சபரிமலையில் பெண்களுக்கான கட்டுப்பாடு, கோயிலின் மூலவரான ஐயப்பனின் வழிபாட்டில் இன்றியமையாத ஒரு பகுதியா இல்லையா என்ற அலசலையும் தாண்டிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். எழுப்பப்பட்டுள்ள கேள்விக்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான் இந்த விதி அரசியல் சாசனச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுகிறதா இல்லையா என்பது மட்டுமே. அதற்கு இந்த விதி மதக் கோட்பாடுகளுக்கு அனுசரித்துவருகிறதா இல்லையா போன்ற சோதனைகள் அதற்குத் தேவையில்லாதது. மேலும், மதம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் தன்னாட்சிக்கு உட்பட்டது. ஒரே மதத்தைப் பின்பற்றினாலும்கூட அந்த மதத்தின் மீதான தத்துவார்த்தப் புரிதலின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் தத்தமது தனித்துவமான தெரிவுகளுக்கு உட்படுத்தும் உரிமை உள்ளது.
அதைப் புற அளவீடுகளால், நீதிமன்றம் உட்பட, யாராலும் கட்டமைக்க முடியாது/கூடாது. 'அந்தரங்க உரிமை' போன்ற வெளிப்படையான எழுத்துகளால் அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத தனி மனித உரிமைகளைக்கூட மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிதாக உச்ச நீதிமன்றம் கண்டெடுக்கும் காலகட்டத்தில்,  அடிப்படை உரிமைகளை முன்னெடுக்காத எந்த ஒரு வாதமும் மக்களாட்சிக்கு ஒவ்வாததாகத்தான் பார்க்க முடியும்.


சமுதாய நுண்ணரசியல்


இதுபோன்ற கட்டுப்பாடுகளுக்குள் இருக்கும் பெண்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான சமுதாய நுண்ணரசியலைப் பற்றியும், அவர்களும் பொதுவெளியில் சமமாக பங்கெடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவது பற்றியும் கருத்தில்கொள்ள வேண்டும். கோயிலை வெறுமனே ஒரு வழிபாட்டுத் தலமாகவும், மத நம்பிக்கைகளின் பிரதிபலிப்பாகவும் மட்டும் பார்க்காமல், அதனை ஒரு சமூகத்தினரின் அனைத்து அங்கத்தினரும் பங்கெடுக்கும் ஒரு பொதுவெளியாகவும் பார்க்கப் பழக வேண்டும். இந்தப் பொதுவெளியில் ஏன் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் தடைசெய்யப்படுகின்றனர்? அவர்கள் மாதவிடாய் சுழற்சிக்குள் இருப்பவர்கள் என்ற ஒரே காரணம்தான். தர்க்கப்படி பார்த்தால் பெண்களைத் தவிர, வேறு யாரும் மாதவிடாய் சுழற்சிக்கு உள்ளாக முடியாது. அதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்படும் இந்தக் கட்டுப்பாடு, பொதுவெளியில் பெண்கள் பங்கெடுப்பதையே தடுக்கிறது.
குறிப்பாகச் சொன்னால், பெண்களின் மாதவிடாய் மீது சுமத்தப்படும் 'அசுத்தம்', 'தோஷம்' எனும் பழமைவாதக் கண்ணோட்டங்களின் பிரதிபலிப்பு இது. பெண்கள் பெண்ணாக இருப்பதாலேயே இந்தப் பாகுபாடு அவர்களுக்கு இந்த உரிமைகளைக் காரணமின்றி மறுதலிக்கிறது. இது போன்ற விதிகள் நமது சமூகம் கடந்த காலத்தில் நிராகரித்து கடந்துவந்த ஆணாதிக்கக் கட்டமைப்பின் எச்சங்களே. பழமைவாதங்களில் வளர்ந்த, பெண்களுக்கான சம உரிமைகளுக்கு எதிரான, சமுதாயக் கட்டமைப்புகளையும் காரணிகளையும் அங்கீகரிக்காவிடில் பிரச்சினையின் ஒரு ஆழமற்ற புரிதலுக்குத்தான் நம்மை இட்டுச் செல்லும்.


தேவை காலத்துக்கேற்ற மாற்றம்


நமது அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவில் பெண்களுக்கென்று தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சமத்துவ உரிமைகளின் முக்கிய நோக்கமே அவர்களின் சமூகப் பங்கெடுப்பை அதிகரிப்பதுதான். பெண்ணியத்தின் அடிப்படையைக்கூடத் தொடாத தட்டையான சமத்துவம் யாருக்கும் உதவாததாகவே இருக்கும். இந்தக் கேள்விகள் எழ அடிப்படைக் காரணங்களாக இருக்கும் பெண்களின் சமமற்ற சமூக நிலை, பொதுவெளியில் அவர்கள் சந்திக்கும் பாகுபாடுகள் என அனைத்தையும் கருத்தியல்ரீதியாக அங்கீகரிப்பதில்தான் முழுமையான தீர்வு உள்ளது. ஒவ்வொரு சமூகமும் தனது மாறிவரும் காலங்களின் தேவைகள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகளுக்கு ஏற்பத் தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ள முற்படும். மாறிவரும் அடிப்படை உரிமைகளின் கருத்தாக்கக் கண்ணோட்டத்தின் நீட்சியே இந்த வாதங்கள்.
பாகுபாடு என்பதை அங்கீகரிக்க நீதிமன்றம் அதற்கான மையக் காரணத்தை  வெளிப்படையாக அடையாளம் கண்டுகொள்வது மிக முக்கியம். மேலோட்டமாக மட்டும் பாராமல், இந்த வழக்கின் மூலம் அடிப்படைக் கருத்தியலுக்குள்ளும் பயணிக்க வேண்டியிருக்கிறது. முடிவுகளை மட்டுமல்ல; அதற்கான காரணங்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய அவசியத்துடன்  பார்த்தால் இந்த வழக்கைப் பெண்ணுரிமைகளை நிலைநாட்ட ஒரு முத்தாய்ப்பான வாய்ப்பு.
கால ஓட்டத்துக்குத் தகுந்தாற்போல் தன்னகத்தே மாற்றங்களைக் கொண்டுவந்தவை மட்டுமே இன்றளவும் எஞ்சியிருக்கின்றன. அவ்வாறான மாற்றத்தின் ஒரு பகுதியாக வேண்டிய காலம் வந்துவிட்டது.





மத வழக்கங்கள், நம்பிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து


மத வழக்கங்கள், நம்பிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள 800 ஆண்டு கள் பழமைவாய்ந்த ஐயப்பன் கோயிலை திருவாங்கூர் தேவஸ் தானம் நிர்வகித்து வருகிறது. இக் கோயிலில் 10 முதல் 50 வய துடைய பெண்களை வழிபட அனு மதிப்பதில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு முன்பாக கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நான்காவது நாளான நேற்று திருவாங்கூர் தேவஸ்தானம் சார் பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்ட தாவது:
சபரிமலையில் பின்பற்றப்படும் நடைமுறையை பெண்களுக்கு எதிரானது என்று பார்க்கக் கூடாது. இது மதம் மற்றும் மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். ஆண்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இந்த கோயிலுக்குச் செல்வார்கள். 10 முதல் 50 வயதுடைய பெண்கள் மாதவிடாய் காரணமாக 41 நாட் கள் விரதத்தையும், தூய்மையை யும் பின்பற்ற முடியாது. அதனால் அவர்களை அனுமதிப்பதில்லை.
அதேபோன்று ஆண்களை அனுமதிக்காத பல கோயில்கள் உள்ளன. இங்கு பல்வேறு மத பழக்கவழக்கங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சட்ட ஒழுங் குக்குள் கொண்டு வருவது இய லாத காரியம். நாடு முழுவதும் பல மசூதிகளில் பெண்களை அனு மதிப்பதில்லை. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘ஆண் களுக்கு எத்தகைய மத வழி பாட்டு உரிமை உள்ளதோ, அதே உரிமை பெண்களுக்கும் உண்டு. ஆண்களுக்கு பொருந்தும் அனைத்து விஷயங்களும் பெண் களுக்கும் பொருந்த வேண்டும். அது அவர்களது அடிப்படை உரிமை. அரசியல் சட்டம் பின் பற்றப்படுவதற்கு முன்பு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டிருந் தாலும், 1950-ம் ஆண்டு குடியரசு ஆட்சி வந்தபின் அனைத்து மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும். எந்த மத நடைமுறையும் தங்கள் அடிப்படை உரிமையை மீறுகிறது என்று பெண்கள் புகார் கூறினால், அப்படி மீறவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தது’ என்று கருத்து தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த சிங்வி, ‘ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு மத நடைமுறை, அந்த குறிப்பிட்ட மதத்தின் உண்மையான நம்பிக்கையின் அடிப்படையில் தான் பின்பற்றப்படுகிறதா? என்று மட்டுமே நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.





தன் பிரம்மசர்யத்தை காக்கும் உரிமை ஐயப்பனுக்கு உண்டு: சபரிமலை வழக்கில் ஆஜராகி கவனம் ஈர்த்த வழக்கறிஞர் சிறப்புபேட்டி







சபரிமலை ஐயப்பன் கோவி லில் பெண்களையும் அனுமதிக்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத் தில் நடந்து வருகிறது. கேரள மாநிலத்தையும் தாண்டி, நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் இவ்வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பெண்களில் 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளும், மாத விடாய் காலம் முடிந்த 50 வய தினை தாண்டியவர்களும் சபரி மலைக்கு சென்றுவர அனுமதிக்கப் படுகின்றனர். சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனு மதிக்கக் கோரி இளம் வழக்கறிஞர் கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக சபரிமலை வழக்கில் அனைத்து பெண்களையும் அனு மதிக்ககூடாது என வாதாடி வருபவர் வழக்கறிஞர் சாய்தீபக். உச்ச நீதிமன்றத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே இவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் முன்வைத்த வாதங்களினால் நீதிபதிகளே ஒன்றரைமணி நேரத்துக்கும் அதிகமாக வாதாட அனுமதித்தனர். சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்க என்னதான் காரணம்? என்ற கேள்வியோடு இளம்வழக்கறிஞர் சாய்தீபக்கை சந்தித்தோம்.

‘‘பிரம்மச்சாரின்னா திருமணம் ஆகாதவன், பெண்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பவன் என சொல் வார்கள். சபரிமலை ஐயப்பன் வெறும் பிரம்மாச்சாரி அல்ல. நைஷ்டிக பிரம்மச்சாரி. அதன் பொருள் அவர் வாழ்நாள் முழுவ தும் பிரம்மச்சாரியாகவே இருப் பார். அதே கேரளத்தில் ஐயப் பனுக்கு இன்னும் நான்கு கோவில்கள் உள்ளது. அங்கெல் லாம் அவர் திருமணமான கோலத் தில் இருப்பார். அங்கு பெண் களுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் சபரிமலை ஐயப்பன் மட்டும் தான் பிரம்மச் சர்ய உருவத்தில் இருக்கிறார்.
அதே கேரளத்தில், திருவனந்த புரத்தில் ஆற்றுக்கால் அம்மன் கோவில் உள்ளது. அதை பெண் களின் சபரிமலை என்கிறார்கள். அங்கு பொங்கலின் போது ஆண் கள் கோவிலுக்குள் செல்ல முடியாது. அப்படி என்றால் அங்கு இருவிதமான நடைமுறைகள் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? சமஉரிமை மிக கூர்மையான விசயம். அதை தேவையுள்ள இடத்தில் தான் பயன்படுத்த வேண்டும். நாளையே இன்னொருவர் எனக்கு உரிமை இருக்கிறது மாமிசத்தை படைத்து நைவேத்யம் செய்வேன் என வந்தால் என்ன செய்வது? ஆனால் சிறுதெய்வங்களின் வழிபாட்டில் மாமிசபடையல் பிரதானம்.
சட்டப்படி கடவுளும் நபர் தான். அந்தவகையில் கடவுளுக்கு அவரது பிரம்மச்சர்யத்தை காப்பாற்றிக்கொள்ளும் உரிமை இருக்கிறது. அது சபரிமலை ஐயப்பனுக்கும் உண்டு. சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் அதிகசக்தி இருக்கும் என்றுதான் பலரும் மாலை போட்டு வருகின்றனர். பெண்களை அனுமதிக்க வேண்டும் என்னும் குரலின் பின்னால், மாலை போட்டு வரும் பக்தர்களின் நம்பிக்கை யையும் சேர்த்தே தகர்க்கின்றனர்.
ஆக, கடவுளின் உரிமை, அந்த கடவுளை நம்பி பாரம்பரியமாக மாலை போட்டு செல்லும் பக்தர்கள் என இருவரின் நம்பிக்கைக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடவுளின் சொத்துக்களின் மீது வரிபோட அரசுக்கு உரிமை இருப்பது போல், சட்டநபராக கடவுளுக்கும் உரிமை உண்டு. கடவுள் தன் உரிமையை தொன்றுதொட்ட நடைமுறைகளின் ஊடாகத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையே பிரம்மச்சர்யம் தான். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு வருடத்துக்கு ஒரு தந்திரிதான் இருப்பார். அவர் குடும்பத்தை பிரிந்து, பிரம்மச்சாரியாகத்தான் இருப்பார். முதல்முறை மாலை போட்டு செல்லும் கன்னிசாமிகள் சபரிமலைக்கு செல்லுகையில் ஒருகுச்சியை சொருகிவைப்பார்கள்
ஐதீகப்படி ஐயப்பன் எந்த வருடம் ஒரு கன்னிசாமி கூட என்னை தரிசிக்க வரவில்லையோ அந்த ஆண்டு கல்யாணம் செய்து கொள்வதாக மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன்தேவிக்கு வாக்கு கொடுத்திருந்தார். இது நம்பிக்கை சார்ந்த விசயம். இதையெல்லாம் லாவகமாக மறந்துவிட்டு, நைஷ்டிக பிரம்மச்சர்யத்தையே மறைத்து மாதவிடாய், மாதவிடாய் என பேசுகின்றனர். கடவுளை வழிபட வேண்டும் என வழக்கு போடுபவர் கள், கடவுளின் பாரம்பர்யத்தை, தொன்று தொட்ட வழங்கங்களோடு, நம்பிக்கைகளோடு விளையாடுவது சரிதானா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.”என்றார்.



சபரிமலை தீர்ப்பு: இரு நீதிபதிகளின் மாறுபட்ட பார்வை



சபரிமலையில் அனைத்துவயதுப் பெண்களும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான இந்து மல்ஹோத்ராவும், முன்னாள் நீதிபதியுமான கே.டி.தாமஸும் இரு வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுள்ள மாத விலக்கு வரும் பெண்கள் செல்ல நூற்றாண்டு காலமாக அனுமதியில்லை. இந்நிலையில் இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று வழிபடலாம், பெண்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பது அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் பெண்களை அனுமதிக்கலாம் என்றனர். ஆனால், ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா சபரிமலை தீர்ப்பில் கூறுகையில், மத விவகாரங்களிலும், நம்பிக்கைகளிலும், மதநம்பிக்கையில்லாதவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்பில்லாதவர்கள் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்வதை தடைச செய்ய வேண்டும். சபரிமலையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய பழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும்.
மதவிவகாரங்கள் அனைத்திலும் அதற்குச் சம்பந்தம் இல்லாவதர்களும், தொடர்பில்லாதவர்களும் பொதுநலன் மனு தாக்கல் செய்யலாம் என்று அனுமதித்தால், மக்களின் நம்பிக்கைகளையும், பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டுவரும் பழக்கங்களும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். பொதுநல மனு தாக்கல் செய்பவர் மதநம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராகக்கூட இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
ஆனால், சபரிமலை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பிரிவு 32ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பது தீர்ப்பு வழங்கிய மற்ற 4 நீதிபதிகளின் கருத்தாக இருக்கிறது. இதே கருத்தை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்தான் கேரளாவில் சபரிமலை குறித்த விவகாரத்தை முதன்முதலில் விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த தீர்ப்பில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா கூறிய நம்பிக்கை என்பது பகுத்தறிவற்றது என்கிறார். ஆனால், எப்போதெல்லாம் நம்பிக்கை அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறதோ அப்போது நீதிமன்றம் தலையிடும். ஆச்சாரம் எப்போதும் அனாச்சாரமாக(தவறான நம்பிக்கை) இருக்கக் கூடாது.
அரசியமைப்புச் சட்டத்தின் கொள்கைகளும், நம்பிக்கைகளும், அடிப்படை உரிமைகளோடு ஒத்து இருக்க வேண்டும். சமீபத்தில் பீமா கோரிகான் வழக்கில் சமூக ஆர்வலர்கள் 5 பேர் கைது புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ரோமிலா தாபர் உள்ளிட்ட4 பேர் பொதுநலன் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பிரதானமாகத் தெரிவித்தனர். அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டவிவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. மற்றவர்களும் தாக்கல் செய்யலாம்.
சபரிமலை விவகாரத்தில் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய இருக்கும் தடை தொடரும், தேவபிரஸன்னத்தில் கூறியது கடைப்பிடிக்கலாம் என்று, கடந்த 1991-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இவ்வாறு கூறுவது நீதிமன்றத்தின் பணியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN