போலி செய்திகளால் என்ன பாதிப்பு? சமாளிப்பது எப்படி?
கடந்த 3 மாதங்களில் பல இந்திய மாநிலங்களில், கும்பல் கொலைகளால் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் பரவிய வதந்திகளால் இந்த கொலைகள் தூண்டப்பட்டிருந்தன.
போலிச் செய்திகள் பரவுவது தொடர்பாக இந்தியாவில் கவலை அதிகமாகியுள்ளது.
வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுப்பதை நோக்கமாக கொண்டு, சில பத்திரிகையாளர்கள் சேவைகளை தொடங்கியுள்ளனர்.
உண்மைகளை சேகரிப்பது, தவறான தகவல்களை தவிர்ப்பது, பகுப்பாய்வை நேயர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆகியவை கொள்கை அளவில் ஒவ்வொரு பத்திரிகையாளரின் வேலையாகும்.
ஆனால், ஒவ்வொருவரும், எந்தவொரு மத்தியஸ்தரும் இல்லாமல் எல்லாருக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்கிற நிலைமை நிலவும் இன்றைய சமூக ஊடக காலத்தில், செய்திகளின் உண்மை தன்மையை சோதித்து அறிவது மிகவும் முக்கியமாகிறது.
சிறப்பு பக்கங்களை அச்சிடுவது அல்லது தவறான நம்பிக்கைகளை விளக்கி வெளிப்படுத்துவது அல்லது வைரலாக பரவிய காணொளிகளின் உண்மையை வெளியிடுவது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சில செய்தி நிறுவனங்கள் நடத்துவதற்கு காரணம் செய்திகளன் உண்மை தன்மையை சோதித்து அறிவதுதான்.
இவை மட்டுமே போதாது என்பதால்தான், பூம்லைவ்.இன் (Boomlive.in), ஃபேக்ட்செக்கர்.இன் (factchecker.in), ஆல்ட்நியூஸ்.இன் (altnews.in) போன்ற உண்மை தன்மையை பரிசீலனை செய்து அறிவிக்கும் இணையதளங்களை சில பத்திரிகையாளர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்த இணையதளங்கள் வெளிவரும் தகவல்களை சரிபார்கின்றன. பிரபலங்களின் உரைகளின் கூற்றுகளை அல்லது அதிகமாக பகிரப்படும் செய்திகளை ஆய்வு செய்கின்றன.
இந்த பணிகளை எவ்வாறு செய்கிறார்கள் என்று பூம்லைவ் இணையதளத்தின் ஜென்சி ஜேக்கப்பை கேட்டோம்.
போலிச் செய்திகளுக்கு எதிராக...
போலிச் செய்திகளுக்கு எதிராக செயல்படுவதன் முதல் கட்டம் அவற்றை கண்டறிவது. எனவே, போலிச் செய்திகள் உலவுகின்ற தளங்களை இது தொடர்பான தகவல்களை சேகரிப்போர் பயன்படுத்துகின்றனர்.
செய்திகள், சமூக ஊடகங்களை அவர்கள் கண்காணிக்கின்றனர். புதிதாக பேசு பொருளாகும் காரியங்களை ஆய்வு செய்கின்றனர். வைரலாக பகிரப்படும் பதிவுகளை கண்டறிகின்றனர்.
இந்த செய்திகளை வாசிப்போரின் உதவிகளையும் அவர்கள் பெறுகிறர்கள்.
உண்மை தன்மையை பரிசீலனை செய்கின்ற நிறுவனங்கள் தங்களுக்கான சமூக ஊடக கணக்குகளை கொண்டுள்ளன.
சரி பார்க்க வேண்டிய வைரல் செய்திகளை இந்த நிறுவனங்களின் சமூக ஊடக கணக்குகள் மூலம் டேக் செய்து அல்லது வாட்ஸ்அப்பில் தகவல்களை மக்கள் அனுப்பலாம்.
மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய மற்றும் அதிக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கூற்றுகள் முன்னுரிமையுடன் தேர்வு செய்யப்பட்டு சோதிக்கப்படுகின்றன. பின்னர் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி இந்த கூற்றுக்களை சரிபார்க்கின்றனர்.
எந்தவொரு தகவலை பெற்றுக்கொள்கிறபோதும் அது யாரிடம் இருந்து வருகிறது என்பதனை ஒவ்வொரு பத்திரிகையாளரும் கண்டறிய வேண்டும். இதனைதான் போலிச் செய்திகளுக்கு எதிராக செயல்படுவோர் பின்பற்றுகின்றனர்.
பூளும்லைவ் மேலாண்மை பதிப்பாசிரியர் இது பற்றி விளக்குகையில், "இந்த செய்தி எவ்விடத்தில் தோன்றியுள்ளது என்று முதலில் பரிசீலனை செய்கிறோம். நம்பகரமான நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதா? புகைப்படம் அல்லது காணொளியை பெற்று கொள்ளும்போது, கூகுளில் புகைப்பட தேடுதல் போன்ற இணைய கருவிகள் மூலம், இந்த காணொயை யாராவது முன்னால் பயன்படுத்தியுள்ளார்களா என்று கண்டறிகிறோம்" என்று தெரிவிக்கிறார்.
ஒரு கோப்பில் இணைந்திருக்கின்ற தரவு விவரங்களை பரிசீலனை செய்து, அதன் தோற்றுவாயை கண்டறியலாம். சில வேளைகளில், காணொளியில் பார்க்கக்கூடிய கார்களின் எண்கள், பதாகைகள் அல்லது பெயர் பலகைகள் எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்கிற துப்புகளை வழங்கலாம்.
ஆதாரங்களோடு சரிபார்த்தல்
இந்த செய்தி அல்லது காணொளி, ஒரு நபர் அல்லது பல நபர்கள் பற்றி இருக்குமானால், அவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்கிறார்.
பிரபல நபர் ஒருவரின் அறிக்கை காணொளியாக, உரையாக, பேட்டியாக பரவி வந்தால் அந்த நபரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். எந்த சூழ்நிலையில் இந்த அறிக்கை விடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளுவது மிகவும் அவசியம்.
தரவு தொடர்புடைய கூற்றுகள் அல்லது குற்றவியல் சம்பவங்கள் பற்றிய செய்திகளாக இருந்தால், என்ன நடந்திருக்கலாம் என்பதை கண்டறிவதற்காக அதோடு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நிபுணர்களோடு பத்திரிகையாளர்கள் பேசுகின்றனர்.
உண்மைகளை பரவ செய்தல்
ஒரு கூற்று பற்றிய உண்மை பரிசீலனை செய்யப்பட்டவுடன், அவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி விளக்கமான தகவல்களை பெரும்பாலான இந்த இணையதளங்கள் எழுதி வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக இந்த கூற்றை நிரூபிக்க முடியுமா, முடியாதா என்பது இந்த விளக்கத்தில் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும், ஒரே கூற்று சிறிது காலம் கழித்து மீண்டும் பரவுகிறது. பல நேரங்களில் ஒரு காணொளி புதிய உரைகளோடு 2 அல்லது 3 மாதங்களுக்கு பின்னர் வெளிவருவதை நாங்கள் கண்டுள்ளோம் என்கிறார் ஜென்சி.
இதே மாதிரியான சம்பவம்தான் மகாராஷ்ரா மாநிலத்தின் டிஹூலியில் ரயீன்பாடா கிராமத்தில் நடைபெற்றிருப்பதை காண்கிறோம்.
கராச்சியிலுள்ள குழந்தை பாதுகாப்பு பற்றிய பழைய காணொளி ஒன்று புதிய விளக்கத்தோடு இங்கு பகிரப்பட்டது.
குழந்தைகளை கடத்துகின்ற கும்பல் ஒன்று திரிவதாக மக்கள் நம்பியதான் விளைவால், கும்பல் கொலையால் 5 பேர் மாண்டனர்.
இதனால்தான், ஊடக நிறுவனங்களின் கடமை குறிப்பாக உண்மையை கண்டறியும் இணையதளங்களின் கடமை மிகவும் முக்கியமானதாகிறது.
போலி காணொளிகள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அது பற்றிய விழிப்புணர்வை அளிப்பதும் கடமையாகிறது.
சவால்கள்
பிராந்திய மொழிகளில் சமூக ஊடக பயனாளிகள் அதிகரித்து வருகையில், இந்தியாவில் செய்திகளின் உண்மை தன்மையை பரிசீலனை செய்கின்ற பெரும்பாலான சுயாதீன நிறுவனங்கள் ஆங்கிலத்தில் செயல்படுகின்றன.
ஆல்ட்நியூஸ் போன்ற நிறுவனங்கள் சில ஹிந்தி மொழி இணையதங்கள் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் தமிழ் இளைஞர்கள் யுடேன்.இன் (youturn.in) என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆனால், பிராந்திய மொழிகளில் இத்தகைய முயற்சிகள் இன்னும் அரிதாகவே உள்ளன.
எனவேதான், பத்திரிகையாளர்கள் மற்றும் உண்மை தன்மையை பரிசோதனை செய்வோர் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தில் இணைய வேண்டும்.
"வாட்ஸ்அப்பில் அல்லது சமூக ஊடகங்களில் ஏதாவது செய்திகளை நீங்கள் பெற்றால் அப்படியே நம்பிவிடாதீர்கள்" என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ள ஜென்சி, "எல்லாவற்றையும் பகிர்வது நல்லதல்ல என்று மக்கள் புரிந்துகொள்ளும்போது, அவர்களே செயதிகளின் உண்மை தன்மையை கண்டுபிடிக்க தொடங்கிவிடுவார்கள்" என்கிறார்.
No comments:
Post a Comment