அயோத்தி வழக்கு -- மசூதி விவகாரம்.. ஏன் இந்த வழக்கு? என்ன பின்னணி?

# பின்னணி மற்றும் கருத்து ( BACKGROUND AND OPINION) #INTERVIEW #UPSCTAMIL


Image result for அயோத்தி



ராமர் ஜென்மபூமி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதே சமயம் இஸ்லாமியர்கள், இங்கு பல நூறு வருடமாக நாங்கள் மசூதி வைத்து வழிபட்டு கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

என்ன பிரச்சனை 1991ம் ஆண்டு உத்தர பிரதேச அரசு, இந்த மசூதி இருந்த இடத்தை சுற்றி இருந்த நிலங்களை கையகப்படுத்தியது. அங்கு ராமர் கோவில் கட்ட போகிறோம், அதற்காக வசதியாக நிலம் வேண்டும் என்று நிலத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. மிகப் பெரும் கலவரத்திற்கு இது வித்திட்டது


வழக்கும் தீர்ப்பும் என்ன? 

மசூதி இடிப்பிற்கு எதிராக 2002ல் அலஹாபாத் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. செப்டம்பர் 30, 2010ல் இதில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் இந்த சர்ச்சைக்கு உரிய நிலத்தை உபி சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு பிரித்து எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 


இடையில் போடப்பட்ட வழக்கு 1991ல் உத்தர பிரதேச அரசு பாபர் மசூதி நிலத்தை கையகப்படுத்திய போது அதற்கு எதிராக டாக்டர் எம் இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் வழக்கு தொடுத்தார். 1994ல் இதற்கு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மசூதி என்பது இஸ்லாமில் ஒரு அடிப்படை அங்கம் கிடையாது. இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகலாம். இதனால் மசூதியை அத்தியாவசிய தேவை என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியது.

இதை எதிர்த்து முறையீடு இந்த 1994 தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்கப்பட்டது. பல இஸ்லாமிய அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது. இதில் மசூதி என்பது அடிப்படை தேவை, இஸ்லாமில் அடிப்படை அங்கம் என்று மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நடந்தது.

மெயின் வழக்கு விரைவாகும் இந்த வழக்கில் இஸ்லாமிய அமைப்புகள் வைத்த கோரிக்கை மிக முக்கியமானது. அதாவது அரசியல் சாசன அமர்வுதான் இந்த மறுசீராய்வு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியது. 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மறுசீராய்வு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இருப்பினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தீர்ப்பின் மூலம் முக்கிய வழக்கு விரைவுபடுத்தப்படவுள்ளது.



அயோத்தி வழக்கு: 'நீதிமன்றத்துக்கு வெளியேதான் தீர்வு கிடைக்கும்'


2010 ல் அந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான 13 மேல் முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன், நீதிபதி அப்துல் நாஸிர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
வரும் அக்டோபர் மாதம் தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதால் அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
62 வயதாகும் ரவிசங்கர் இந்து மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மூலம் இந்த வழக்குக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறார். பெங்களூரு அருகே உள்ள ஒபராது ஆசிரமத்தில் பிபிசிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் தனது முயற்சிகள் பலனளித்து வருவதாகக் கூறினார்.

சுமார் 500க்கும் மேலான இஸ்லாமிய தலைவர்களை சந்தித்துள்ளதாகவும் இவரது ஆலோசனைகளை அவர்களும் வழிமொழிவதாகவும் கூறுகிறார் ரவிசங்கர்.
எனினும் வழக்கின் ஒரு முக்கிய தரப்பாக இருக்கும் சுன்னி வக்பு வாரியம் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களை இணைக்காது என்று கூறுகிறார் ரவிசங்கர். "ஒருவர் வெற்றிபெற்று கொண்டாடுவதும் இன்னொருவர் தோல்வியடைவதும் நாட்டுக்கு நல்லதல்ல," என்கிறார் அவர்.

"அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்துவிட்டு அனைவரும் வெற்றிபெறும் வகையிலான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். இந்துக்கள் கோயில் கட்டிக்கொள்ளட்டும். இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ளட்டும். இருவரும் இதனால் கொண்டாடுவார்கள். இதுதான் நான் மத்தியஸ்தம் செய்வதன் நோக்கம்," என்று ரவிசங்கர் தெரிவித்தார்.
ராமர் கோயில் இடம் மீதான தங்கள் உரிமைகோரலை இஸ்லாமியர்கள் விட்டுவிட வேண்டும் என்பதும், அதற்கு பதிலாக அவர்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள அருகில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்பதே ரவிசங்கர் முன்வைக்கும் தீர்வு. சிலர் இதை வரவேற்றாலும் சிலர் இதை எதிர்க்கின்றனர்.
ஷியா வக்பு வாரியம் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே தீர்வு காண்பதை ஆதரிக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு நிலத் தகராறு எனும் அடிப்படையில் விசாரிக்கிறது.
நாடு முழுதும் 150 ஆசிரமங்கள் கொண்டுள்ள ரவிசங்கர் அங்கு யோகா பயிற்றுவிக்கிறார். பாகிஸ்தான், இஸ்ரேல், இராக் போன்ற நாடுகளுக்கு சென்று அமைதி முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
கொலம்பியா அரசு மற்றும் அதற்கு எதிரான ஃபார்க் கிளர்ச்சிக்குழு இடையே மத்தியஸ்தம் செய்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களிடையே இவர் மேற்கொள்ளும் மத்தியஸ்த முயற்சிகள் பாரதிய ஜனதா அரசின் சார்பிலேயே செய்கிறார் என்று கூறப்படுவதையும் அவர் மறுக்கிறார்.
சர்ச்சைக்குரிய நிலப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேறு சில தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றன. அந்த இடத்தை அருங்காட்சியகம் ஆக்குவதும் அவற்றுள் ஒன்று.
ஆனால், அந்தத் தீர்வை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. "அங்கு இப்போது ஒரு கோயில் உள்ளது. ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் கோடி கணக்கானவர்களால் வணங்கப்படுகிறது. அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
பல இஸ்லாமிய சமுதாயத்தினர் இவரது தீர்வை ஏற்றுக்கொள்கின்றனர். எனினும், பாப்ரி மசூதி நிலம் இந்துக்களுக்கு வழங்கப்பட்டால், காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களையும் விட்டுத்தர வேண்டும் என்று பயப்படுகின்றனர்.

"நானும் அதைக் கேள்விப்பட்டேன். ராமர் கோயில் கட்ட நிலத்தை இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுத்தால், அது அவர்களின் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக இருக்கும்," என்கிறார் ரவிசங்கர்.
சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான பல தரப்பு மக்களின் உரிமை கோரலை தாம் தடுக்கப்போவதில்லை என்று அவர் கூறினாலும், தனிப்பட்டவகையில் அவற்றை ஆதரிக்கப்போவதில்லை என்றும் கூறுகிறார்.
ராமர் பிறந்த இடத்தில் ஒரு கோயில் இருந்ததாகவும் அங்கு முகலாய மன்னர் பாபர் பாப்ரி மசூதி கட்டியதாகவும் இந்துக்கள் வாதிடுகின்றனர். 1949 முதல் இன்று வரை இந்த சர்ச்சைக்கு தீர்வு காணப்படவில்லை.

அயோத்தி வழக்கு: இடத்துக்கான சட்ட மோதல் மட்டுமல்ல!


அயோத்தியில் பாபர் மசூதி இருக்குமிடத்தை உத்தர பிரதேச அரசு எடுத்துக்கொண்டது தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி வழக்கில் அடுத்த விசாரணை அக்டோபர் 29-ல் நடக்கும் என்றும் அறிவித்துள்ளது. 1994-ல் இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில் கூறப்பட்ட சில கருத்துகளை ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.
‘இஸ்லாமிய வழிபாட்டில் மசூதி என்கிற இடம் முக்கியமல்ல, திறந்த வெளிகளில்கூடத் தொழுகை செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 1994-ல் தெரிவித்த கருத்துகள் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பையே ஒரு பக்கமாகத் திருப்பக்கூடிய அளவுக்கு இருப்பதால், முதலில் அந்தக் கருத்துகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆட்சேபம் எழுப்பப்பட்டது. இந்நிலையில், வழக்கின் முந்தைய அமர்வின்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளை, வழக்கின்போது சொல்லப்பட்ட கருத்தாக மட்டுமே கருத வேண்டுமே தவிர, அதை மேலும் விசாரிக்கக் கோர வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி அசோக் பூஷண் கூறியிருக்கிறார்.
அதேவேளையில், இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளை மறுபரிசீலனை செய்வதை ஆதரிப்பதாக இந்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி அப்துல் நசீரும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. கரசேவகர்களைக் கொண்ட மிகப் பெரிய கும்பல் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மத்திய அரசு சட்டமியற்றிக் கைப்பற்றியது. இந்தச் சூழலில், அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட அனுமதித்ததன் மூலம் சட்டப்படியான ஆட்சி என்ற உரிமையை நீதிமன்றம் தூக்கிப் பிடித்திருக்கிறது. மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்ததா என்று ஆராயுமாறு பணிக்கப்பட்டதற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட வழக்கு விசாரணைகளின்போது சாதாரணமாகத் தெரிவிக்கப்படும் கருத்துகள்கூட ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இந்த வழக்கை நீதிமன்றம் எந்தவித புற அழுத்தங்களுக்கும் இடம் தராமல் தானே நிர்ணயிக்கும் கால அளவுக்குள் விசாரிக்க வேண்டுமே தவிர, தேர்தல் நேரம் என்பதுபோன்ற தாக்கங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது. ஆனால், இந்த நாட்டின் அரசியலில் அயோத்தி வழக்கு பல கறுப்புக் கட்டங்கள் வழியாகவும் பயணித்து வந்துள்ளது. இது வெறும் இடத்துக்கான சட்ட மோதல் மட்டுமல்ல. மத உணர்வுகளை யாரும் தூண்டிவிட்டு பலன் அடைந்துவிடாத வகையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். மேல்முறையீடுகளைச் சரியாகக் கையாள வேண்டும்!

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN