பாலியல் சீண்டல்களுக்குச் சட்டத் தீர்வு என்ன?




# நாளிதழ் வினாக்கள் #UPSCTAMIL #GENERAL STUDIES 1


Metoo movement brings out the issue of sexual harassment, among many others. Analyze the lacunae in India’s sexual harassment laws and what needs to done?



நாடெங்கும் பரவிவரும் ‘நானும் இயக்கம்’ பல அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், நீதித் துறை சார்ந்து பலரிடமும் ஒரு கேள்வி ஒலிப்பதைக் கேட்க முடிகிறது: பொதுவெளியில் சொல்லப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை சட்டத்தளத்தில் எப்படி எதிர்கொள்வது – சட்டப்படி உரிய தீர்வுகாண என்ன வழி இருக்கிறது?


சட்டத்தின் போதாமைகள்


உள்ளபடி நம்மிடம் 1997 வரை பொதுவெளிகளில் செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள்/கொடுமைகள் இவற்றைத் தடுப்பதற்கே சட்டங்கள் இல்லை என்பதுதான் உண்மை. உடல்ரீதியான தாக்குதல்களைத்
தண்டிப்பதற்குக் குற்றவியல் சட்டங்கள் வழிவகுத்தன. அதற்கு அப்பாற்பட்டு பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களைத் தடுப்பதைப் பற்றி நம்முடைய நீதித் துறை போதுமான கவனம் செலுத்தியிருக்கவில்லை.
குறிப்பாக, வேலைக்குச் செல்லுமிடத்தில் பெண்கள் மீது ஏதேனும் கிரிமினல் குற்றங்கள் இழைக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் காவல் துறை உதவியை நாட முடியும். ஒருவேளை மேலதிகாரிகளோ, சக ஊழியா்களோ பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் அன்று இடமில்லை. மேலும், பாலியல் சீண்டல் அல்லது தொந்தரவு என்றால் என்ன என்பதற்குச் சரியான வியாக்கியானமும் இல்லாமலிருந்தது.


வந்தது விசாகா குழு


ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் சமூக சேவகா் ஒருவா் கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அப்போது பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அன்றைய தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வா்மா விசாரித்தார். விசாகா (எதிர்) ராஜஸ்தான் அரசு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இந்த விவகாரத்தில் திருப்புமுனையை உண்டாக்கியது.
பாலியல் சீண்டல் என்றால் என்ன என்று முதலில் உச்ச நீதிமன்றம் வரையறுத்தது. முறையற்ற பாலியல் அணுகுமுறை, பெண்களை தொட்டுப் பேசுவது, பாலியல் இச்சையைப் பூர்த்திசெய்யும்படி மறைமுகமாகவோ, நேரடியாகவோ வேண்டுகோள் விடுப்பது, பாலியல் சார்ந்த குறிப்புகளை வெளிப்படுத்துவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, பாலின அடிப்படையில் உடல், மொழி, செய்கைகளால் வரவேற்க முடியாத செயல்களில் ஈடுபடுவது என்று சீண்டல்கள் குறித்த மிக விரிவான விளக்கத்தை அது கொடுத்தது.
மேலும், “பணியிடத்தில் ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகப் புகார் கூறினால் அதை விசாரிக்க ஒரு விசாரணை அமைப்பை ஒவ்வொரு நிர்வாகமும் உருவாக்க வேண்டும். அந்த விசாரணைக் குழுவில் பெரும்பான்மையாகப் பெண்கள் இருக்க வேண்டும். தவிர, அரசுசாரா பெண்கள் அமைப்பிலிருந்து ஒரு பிரதிநிதியும் அக்குழுவில் இடம் பெற வேண்டும்” என்றும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட ஆண் ஊழியா்கள்/அதிகாரிகள் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்முடைய  சட்டங்களின்  போதாமையை உணர்ந்திருந்த  உச்ச நீதிமன்றம், “பெண்கள் பணியாற்றும் இடத்தில் பாலியல் சீண்டல்களைத் தவிர்க்கும் விதத்தில் முறையான சட்டமியற்றும் வரை இத்தீர்ப்பே சட்டமாக செயல்படும்; அரசு நிறுவனங்களுக்கு மட்டும் இன்றி தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்” என்றும் கூறியது.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு. ஏனென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களுக்கு மட்டுமே உரியன என்றிருப்பினும், நீதிமன்றமே சட்டமியற்றும் செயலில் ஈடுபட்டது இதுவே முதல் முறை. ஆனால், நீதிபதிகள் தங்களுடைய வரையறையை உணர்ந்திருந்ததால், நாடாளுமன்றம் இது குறித்து சிறப்புச் சட்டம் இயற்றும் வரை மட்டுமே தங்களது தீர்ப்பு சட்டமாகச் செயல்படும் என்று அறிவித்தனர். ஆனால், நாடாளுமன்றம் அப்படி ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு 16 ஆண்டுகள் கடந்தன.


நிலைமை மாறியதா?


விசாகா தீர்ப்பிற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாகப் பல வழிகாட்டுதல் உத்தரவுகளையும் பிறப்பித்தது. ஆனாலும், விசாகா தீர்ப்பின்படி பணியாற்றுமிடங்களில் நடக்கக்கூடிய பாலியல் சீண்டல்கள் பெரிய அளவில் குறையவில்லை என்பதைத்தான் நாம் இன்று ‘நானும் இயக்கம்’ மூலம் பார்க்கிறோம்.
இன்றைக்குள்ள சட்டப்படி, பணியிடத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஒரு ஆணை அதிகபட்சம் வேலையை விட்டு அனுப்ப முடியுமேயொழிய அவருக்கு வேறு எந்தத் தண்டனையும் அளிக்க முடியாது; மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு இழப்பீடுகளுக்கும் சட்டம் வழிவகுக்கவில்லை. அதேபோல, பணியிடங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவெளிகளில் பெண்கள் மீது நடத்தப்படும் சீண்டல்களைத் தடுக்கவும் சட்டத்தில் வழியில்லை.


தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம்


விசாகா தீர்ப்பு (1997) வந்த பிறகு, 1998-ல் சென்னையில் நடந்த சரிகா ஷா சம்பவம் மாநிலத்தையே அதிரவைத்தது. கல்லூரி மாணவியான சரிகா ஷாவை ஒரு கும்பல் ஆட்டோவில் துரத்தியபோது அவள் நிலைகுலைந்து விழுந்ததில் இறந்துபோனாள். விளைவாக,  ‘தமிழ்நாடு பொதுவெளிகளில் பெண்களைச் சீண்டுதலைத் தடுக்கும் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. ஆனால், இதுவும் நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் சட்டப் போதாமையை முழுமையாகப் பூர்த்திசெய்துவிடவில்லை.
இதனிடையே வேறு ஒன்றும் நடந்தது. விசாகா தீர்ப்பு நடைமுறையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்ததா என்ற கேள்விக்கு மாறாக அது ஆண்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது என்று ஒருசாரார் பேசலாயினர். விசாகா தீர்ப்பைச் சட்டமாக்குவதற்கான வலியுறுத்தல்களும் இன்னொருபுறம் நடந்தன. விளைவாக, பெண்களுக்குப் பணியிடங்களில் பாலியல் கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தை 2013-ல் இயற்றியது நாடாளுமன்றம்.


என்ன சொல்கிறது சட்டம்?


பணியிடங்கள் என்பதற்கான வரையறை, உள் விசாரணைக் குழு அமைப்புக்கான வரையறை எல்லாம் இச்சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்படி, உள்விசாரணைக் குழுவின் முடிவு இறுதியானது அல்ல என்றும் அந்த முடிவுக்கெதிராக மேல்முறையீடு செய்வதற்கான அதிகார அமைப்பும் வரையறுக்கப்பட்டது. குழு விசாரணையின்போது புகார்தாரரும் குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசம் செய்துகொள்வதற்கும், ஒருவேளை பொய்ப் புகார் அளித்திருந்தால் அந்தப் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவும்கூட இச்சட்டம் வழிவகுத்தது. கூடவே, புகார் அளிப்பதற்கான கால வரையறையும் நிர்ணயிக்கப்பட்டது.
அதாவது, விசாகா தீர்ப்பைக் குறைகூறிய ஆண் தரப்பு விமர்சனங்களை இச்சட்டம் ஓரளவுக்கு சமனப்படுத்தியது. அதேசமயம், அந்த ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்ட இன்னொரு சட்டத்திருத்தம் மூலம் இது குற்றவியல் சட்டமாகவும் மாற்றப்பட்டது. விளைவாக, குற்றமிழைத்தோரைத் தண்டிக்க முடியும் என்ற சூழலும் உருவானது.
இவ்வளவுக்குப் பிறகும் பெரிய மாற்றங்கள் நடக்கவில்லை என்பதையே பெண்களின் மனக்குமுறல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை – அதுவும் சமூகத்தில் முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்களும் இதில் விதிவிலக்காக இல்லை என்பது பெரும் இலக்கு. ஆனால், குற்றவுணர்வுக்குள்ளாக வேண்டியவர்களோ சட்டத்தின் பெயரால் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று பாதிக்கப்பட்ட பெண்களையே மிரட்டும் போக்கு ஒன்று இங்கே உருவாகியிருக்கிறது. உண்மை என்னவென்றால், கருப்புப் பட்டியலில் பெயர் வருபவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றால் அவர்கள்தான் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
இன்றைய 2013-ம் வருடச் சட்டத்திலுள்ள முக்கியமான குறை என்னவென்றால், பணியிடங்களில் இல்லாதோர் மீது கொடுக்கப்படும் பாலியல் கொடுமைகளைப் பற்றி விசாரிப்பதற்கு அதில் வழிவகை ஏதுமில்லை என்பதுதான். மேலும், சம்பவம் நடந்து 90 நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. இவை உள்ளிட்ட குறைகளும் களையப்படும்பட்சத்தில் பெண்களுக்கு மேலும் பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க முடியும். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி பெண் பாதுகாப்பு என்பது சமூகக் கடமை என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும். பெண்ணை மதிப்பினூடாகப் பார்க்கும் சூழல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உருவாக்கப்படுவதே அதற்கான தீர்வு.

No comments:

Post a Comment

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN