பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு ரூபாய் 1600 வழங்கும். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளோடு கலந்தாலோசித்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகள் கண்டறியப்படும். 2016-17. 2017-18, 2018-19 நிதி ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில், ஒரு நலத்திட்டத்தை செயல்படுத்துவது இதுவே முதன் முறை.
நம் நாட்டில் ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைப்பது கடினமாக உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள், நகர்ப்புற மற்றும் பாதி நகர்ப்புறங்களிலும், நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்குமே கிடைத்து வந்துள்ளது. படிம எரிபொருட்களில் சமைப்பதால், உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும். இவ்வாறு படிம எரிபொருட்களில் சமைப்பதனால், இந்தியாவில் 5 லட்சம் மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மரணங்களில் பெரும்பாலானவை, இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் காரணமாக ஏற்படுபவை. வீட்டினுள் ஏற்படும் காற்று மாசு காரணமாகவும் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன. ஏராளமான குழந்தைகள் சுவாச நோயில் பாதிக்கப்படுகின்றனர். சமையலறையில் வெளிப்படும் புகை, ஒரு மணி நேரத்துக்கு 400 சிகரெட் புகைப்பதற்கு சமமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது, நாடெங்கும் இணைப்பு வழங்க உதவும். இத்திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் உடல் நலனை பாதுகாக்கும். அவர்களின் வேலைப்பளுவை குறைத்து, சமையல் நேரத்தையும் குறைக்கும். சமையல் எரிவாயு வழங்குவதன் மூலம், ஊரக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் 29.2.2016 அன்று, 2016-17 நிதி ஆண்டில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 1.5 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக ரூபாய் 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். மேலும் 5 கோடி இணைப்புகள் வழங்குவதற்காக அடுத்த இரண்டாண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
No comments:
Post a Comment