சாகர் மாலா திட்டம் - நோக்கமும் பின்னணியும்
• சாகர் மாலா திட்டம் கடந்த பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் (2003ல்) முன்மொழியப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தை அமல்படுத்த சாகர் மாலா வளர்ச்சிக் கம்பெனியாக உருவாக்கப்பட்டு அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர்,அது இந்தியக் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது.
• நாட்டின் 7500 கிமீ நீளமுள்ள கடற்கரையையும் 14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர் வழிகளையும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப சரக்கு போக்குவரத்திற்கானதாக மட்டும் முழுமையாக மாற்றுவதே திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே சாகர் மாலா
• இதற்காக முதல் கட்டமாக 1000 கோடி முதலீட்டில் நாட்டிலுள்ள 12 துறைமுகங்களையும் 1208 தீவுகளையும் சரக்கு போக்குவரத்திற்கு ஏற்ப அதி நவீனப்படுத்துவது, அத்துடன் 189 கலங்கரை விளக்கங்களையும் நவீனப்படுத்துவது. குறிப்பாக அரசு கூறும் காரணத்தின் படி, சீனாவின் துறைமுகங்களின் பங்களிப்பு 24 விழுக்காடும் அமெரிக்காவின் பங்களிப்பு 7 விழுக்காடும் நெதர்லேந்து 42 விழுக்காடும் அந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கப்படுகிறது. எனவே அந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக (0, 3 விழுக்காடு) இந்தியத் துறைமுகங்களினால் சரக்கு போக்குவரத்து கையாளப்படுகிறது. எனவே அதை அதிகரிப்பதையே முதன்மையான நோக்கமாக கொண்டு இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது, கூடுதலாக 8 துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன.
• மேலும் சாலை சரக்கு போக்குவரத்தின் மூலமாக 6 விழுக்காடும் ரயில் சரக்கு போக்குவரத்தில் 9 விழுக்காடும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கப்படுகிறது, இவற்றை ஒப்பிடும் போது கடல் மற்றும் நீர் வழி சரக்கு போக்குவரத்து என்பது மிகக்குறைவாகவே நடைபெறுகிறது. எனவே இந்தியாவின் கடல் மற்றும் உள்நாட்டு நீர்வழிகளை சரக்கு போக்குவரத்திற்கானதாக முழுமையானதாக மாற்றும் நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது இத்திட்டம் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. சாகர்மாலா திட்டமே துறைமுகங்களையும் தீவுகளையும் சரக்கு போக்குவரத்திற்காக நவீனப்படுத்துவது, துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சி மற்றும் (சாலை மற்றும்) ரயில் போக்குவரத்து இணைப்பு என சரக்கு போக்குவரத்திற்கானதாக மையப்படுத்தப்பட்டுள்ளது.
• சரக்கு போக்குவரத்திற்காக நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள் ஆழப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் பெரிய கப்பல்கள் வந்து செல்ல வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதே போல உள்நாட்டு நதிகளிலும் அகழ்வுப் பணிகள் பிரம்மாண்டமான அளவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
• உள்நாட்டு நீர் வழி சரக்கு போக்குவரத்திற்கானதாக 101 நதிகள் அரசினால் பிரகடனப்படுத்தப்பட உள்ளன. இதில் 55 நதிகளுக்கு கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர்களை நியமித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டவுடன் அவசியமான அனுமதிகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன.
• நாடு முழுவதும் இத்திட்டத்தின்படி துறைமுகங்களின் மூலம் இணைக்கப்படவுள்ள 13 கடற்கரை மாநிலங்களில் ஒடிசா மாநிலம் முதலில் இத்திட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளது. அம்மாநில அரசு திட்டத்தை விரைவில் அமல்படுத்திட சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்கியுள்ளது.
• குறிப்பாக கடற்கரையையொட்டி 12 ஸ்மார்ட் நகரங்கள் புதிததாக அமைக்கப்பட உள்ளன, அதற்காக 50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, அவை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு சரக்கு போக்குவரத்து மேலும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
• இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு 35000 கோடியிலிருந்து 40,000 கோடி வரை முதலீடாக கொண்டு செயல்படவுள்ளது. திட்ட காலம் முழுமைக்கும் மொத்தம் 7 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளது. இப்பெரு முதலீடு தனியார் மற்றும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளிடமிருந்து திரட்டப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
• இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 110 பில்லியன் ரூபாய் (1 பில்லியன் ™= 100 கோடி ரூபாய் ) அளவுக்கு வரும் 2020 ற்குள் சரக்கு ஏற்றுமதியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
• முதலில் 20 ஆண்டுகளில் முடிப்பது எனத் திட்டமிடப்பட்டு அது 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இறுதியில் 5 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் என்று கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்காரியினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
• இத்திட்டத்தின் மூலம் 1 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• இத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திட ஒரு வலிமையான அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்திடும் தலைமை அமைப்பாக கடந்த 2015 ல் தேசிய சாகர் மாலா உச்சநிலை கமிட்டி (Sagar Mala Apex Committee) அமைக்கப்பட்டுளளது, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்கள் இக்கமிட்டியின் தலைவர்களாக இருப்பார்கள். இதன் கீழ் சாகர் மாலா வளர்ச்சிக் கம்பெனியாக இந்தியக் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போக்குவரத்துடன் இணைப்பு
• கம்பெனி சட்டத்தின் கீழ் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் இந்தியன் துறைமுக ரயில் கார்ப்பரேசன் லிமிடெட் (Indian Port Rail Corporation Limited–IPRC) உருவாக்கப்பட்டு அதன் மூலம் ரயில் போக்குவரத்துடன் பெரிய மற்றும் முக்கிய துறைமுகங்கள் இணைக்கப்பட உள்ளன. இத்துறைமுக ரயில் கார்ப்பரேசனின் தொடக்க முதலீடாக 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 11 துறைமுகங்களின் பங்குகளுடன் இக்கார்ப்பரேசன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ல் கார்ப்பரேசன் துறைமுகங்களுடன் தொடர்பு கொண்ட 23 திட்டங்கள் செயல்படுத்தப்படத் தொடங்கின.
• 29,500 கோடி முதலீட்டில் 26 ரயில் பாதைகள் போடப்பட்டு அவை துறைமுகங்களுடன் இணைக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் உள்பட எந்த ஆய்வுகளுமின்றி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
• சாகர் மாலா அமல்படுத்தப்பட்டவுடன் 7,000 கோடிக்கு நிலக்கரி சரக்கு போக்குவரத்து கையாளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
• சாகர் மாலா குறித்து தேசிய கண்ணோட்டத் திட்டத்தின் ஆவணம் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டுள்ளது.
• சாகர் மாலா கம்பெனி, திட்டத்திற்கான நிதியை திரட்டும் முக்கியமாக அரசிடமிருந்தும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தும் நிதியை திரட்டும்.
• மாநில அளவில் முதல்வர்களின் தலைமையில் சாகர் மாலா கமிட்டிகள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளின்அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவுடன் இயங்கும்.
• தனித்திட்டங்களுக்காக சிறப்பு நோக்கு அமைப்புகள் (Special Purpose vehicles –SPV) உருவாக்கப்பட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உதவும்.
• இறுதியாக சாகர் மாலா திட்டத்தின் கீழ் வரும் 150 திட்டங்களுக்கும் அதி விரைவான சுற்றுச்சூழல் அனுமதிஅளிக்கப்படும். அதாவது சாகர் மாலா கம்பெனின் திட்டங்களுக்கு அனுமதி வேண்டிய மனுக்கள் பெறப்பட்டவுடன் உடனடியாக அனுமதி அளிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக கப்பல் போக்குவரத்து துறை ,சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
• இதுவரை சாகர் மாலாவின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 6 துறைமுகங்கள் பின்வருமாறு கேரளாவில் விழிஞ்சம் (அதானிக்கு அளிக்கப்பட உள்ளது) தமிழகத்தில் குளச்சல் துறைமுகம், மஹாராஸ்டிரத்தில் வதவான் துறைமுகம், கர்நாடகத்தில் தடாடி துறைமுகம், ஆந்திராவில் மச்சிலிப்பட்டிணம் துறைமுகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சாகர் துறைமுகம் ஆகியன.
No comments:
Post a Comment